குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனிதன் இயந்திரமாகக்கூடிய சாத்தியங்கள் உருவாகும் என பிரபல பேராசிரியர் ஹக் ஹெர் ( Hugh Herr) தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணனி ரொபோக்கள் பற்றி பேசப்பட்டு வருவதாகவும் அதற்கு முன்னதாக மனிதன் இயந்திரமாக மாற்றமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதனின் உடல் பாகங்களுக்கு பதிலீடாக இயந்திரங்களின் துணையைப் பெற்றுக் கொள்ளும் முறைமை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்வு கூறியுள்ளார்.
தற்போதைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் உடல் ஊனப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பக்கவாதம் ஏற்பட்ட ஒரு நபரைக் கூட இயந்திரங்களின் துணையுடன் இயங்கச் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனிதனின் நரம்பு மண்டலத்துடன் இசைந்து போகக்கூடிய இயந்திர சாதனங்களின் ஊடாக நாம் எதிர்பார்க்கும் பலன்களை அடைந்து கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் ஹக் ஹெர் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயற்கை கால்களையே பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக் கால்கள் மிகவும் இயற்கையானதாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.