வட மாகாண சபையில் டெலோவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சினை விந்தனுக்கு வழங்குவதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பினை டெலோ செயலாளர் நாயகம் பிரபல சட்டத்தரணி என்.சிறிகாந்தா கடிதம் மூலம் முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இன்று (18) முதலமைச்சருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே டெலோவின் உத்தியோகபூர்வ முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில், ‘கடந்த 16.07.2017 ஆம் திகதி வவுனியாவில் நிகழ்ந்த எமது கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை – அமைச்சரவை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவினை தங்களுக்கு அறிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
தங்கள் தலைமையிலான அமைச்சரவையில், எமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பா.டெனிஸ்வரன், அவரது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டியுள்ளதால், காலியாகும் அந்தப்பதவிக்கு எமது கட்சியின் சார்பில் விந்தன் கனகரட்ணம் நியமிக்கப்பட வேண்டும் என எமது அரசியல் குழுவின் குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் எமது கட்சியின் சார்பில் 13.07.2017 ஆம் திகதி நான் அனுப்பியிருந்த கடிதத்திற்கான, அதே திகதியிடப்பட்ட உங்கள் பதில் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தவாறு பா.டெனிஸ்வரன் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுத்து அவருக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை அமைச்சரவைக்கு நியமனம் செய்யுமாறு நான் தங்களை வேண்டிக்கொள்கின்றேன்.’ என டெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதிய டெலோவின் அரசியல் உயர் பீடக் கூட்டத்திலேயே, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்க டெலோவின் உயர் பீடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பரிந்துரைப்பது எனத் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தது.
டெலோவானது விந்தனுக்கு அமைச்சுப் பதவியினை வழங்குவதற்கான தீர்மானத்தினை ஏக மனதாக எடுத்திருந்தபோதும், இவ் அறிவிப்பினை உத்தியோகபூர்வமாக முதலமைச்சருக்கு அறிவிக்கும் வரையில் நிர்வாக ஒழுங்குகளின் நிமிர்த்தம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என கட்சியின் அரசியல் உயர் பீடம் கருதியிருந்தது.
இந்நிலையிலேயே கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இதுவரையில் முடிவுகள் எட்டப்படவில்லை என ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தி வந்தனர். எனினும் ஊடகங்கள் வாயிலாக இம் முடிவு ஏற்கனவே கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.