கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய ‘கடவுளிடம் கேளுங்கள்’ என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட அளவிற்கு சம்பந்தரின் உரை கவனிக்கப்படவில்லை. அந்த உரையில் அவர் கூறியவை புதியவை அல்ல. கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்?’ கருத்தரங்கில் அவர் தெரிவித்தவற்றின் விரிவாக்கமே அந்த உரை. குறிப்பாக நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்ட பின்னிருந்து அதிலும் குறிப்பாக யாப்புருவாக்கப் பணிகளில் கூட்டமைப்பு ஒரு பங்காளியாக மாறியதிலிருந்து அவர் மேற்கண்டவாறு பேசி வருகின்றார். அவர் பேசியவற்றை ஒரே வரியில் சொன்னால் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சம்பந்தரின் வழி வரைபடம் அதுவெனலாம். அதைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் எந்த ஒரு யாப்பிலும் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவில்லை. இப்போதுதான் முதற் தடவையாக தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு யாப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவிலும், உப குழுக்களிலும் கூட்டமைப்பு பங்குபற்றி வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஒரு புதிய யாப்பு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படும். இப்போதிருக்கும் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கியத் தேசியக் கட்சியும் இணைந்துருவாக்கிய கூட்டு அரசாங்கத்தோடு தமிழ் மக்களும், மலையக மக்களும், முஸ்லிம் மக்களும், ஜே.வி.பியும் இணையும்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறலாம். அப் பெரும்பான்மையின் மூலம் புதிய யாப்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும்.
இவ்வாறு உருவாக்கப்படும் புதிய யாப்பு இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கியதாக இருக்கும். எனவே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இப்போதிருப்பதைப் போல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கியத் தேசியக் கட்சியும் கூட்டாட்சியில் இணைந்து செயற்பட வேண்டும். இக் கருத்தை அண்மையில் தன்னைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரிடமும், அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரிடமும் சம்பந்தர் கூறியிருக்கிறார்.
சம்பந்தரின் மேற்கண்ட வழிவரைபடத்தின் படி இலங்கைத் தீவின் நாடாளுமன்றமானது முதற் தடவையாக தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த எல்லா அரசாங்கங்களும் இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விதத்திலேயே செயற்பட்டன. திருமதி.சந்திரிக்காவின் காலத்தில் இப்படியொரு பெரும்பான்மை இல்லாததன் காரணத்தினால்தான் அவர் கொண்டு வந்த தீர்வுப் பொதியை அமுல்ப்படுத்த முடியாமற் போனது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைப் பேணிய ஒரு நாடாளுமன்றத்திற்கு ஊடாகவே நிறைவேற்றப்பட்டன. இவ்வாறாக பெரும்பான்மையின் மேலாதிக்கத்தைப் பேணும் ஒரு நாடாளுமன்ற பாரம்பரியத்தில் முதற் தடவையாக தமிழ் மக்களுக்கு சாதகமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒன்று கிடைத்திருக்கிறது.
சம்பந்தர் கூறுவதன் படி கூட்டமைப்பானது புதிய யாப்பின் சக நிர்மாணிகளில் ஒன்று. இவ்வாறு வரலாற்றில் ஒரு புதிய யாப்பில் தமிழ் மக்களும் சக நிர்மாணிகளாக இருப்பது என்பது இதுதான் முதற்தடவை. இவ்வாறு சக நிர்மாணிகளாக இருக்கும் தமிழ்த்தரப்பு மற்றொரு சக நிர்மாணியான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தா விதத்திலேயே ஒரு தீர்வை கொண்டு வர வேண்டியிருக்கும். இப்படி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் வராத ஒரு தீர்வு என்று சொன்னால் அதில் ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற விடயங்களில் சில விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டியிருக்கும். உள்ளடக்கத்தில் சமஷ்டி இருந்தாலும் வெளித் தோற்றத்தில் அது தெரியாதபடிக்கு வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். எனவே இது விடயத்தில் அரசாங்கத்தின் எதிரிகளுக்கு பிடி கொடுக்கா விதமாக சில கருமங்களை தந்திரமாகவும், பகிரங்கப்படுத்தாமலும் முன்னெடுக்க வேண்டியிருக்கும். இதுதான் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சம்பந்தரின் வழிவரைபடம். இவ்வழி வரைபடத்தை நாம் அதன் பிரயோக வடிவத்தில் பின்வருமாறு பொழிவாகக் கூறலாம்.
கடும்போக்குடைய சிங்கள இனவாதத்தை மென்போக்குடைய சிங்கள இனவாதத்தோடு கூட்டுச் சேர்ந்து சிறுபான்மையாக்குவது. அதாவது தமிழ், முஸ்லிம், மலையகம் ஆகிய மூன்று தரப்புக்களும் மென் போக்குடைய இனவாதத்துடன் கூட்டுச் சேர்வதன் மூலம் கடும் போக்குடைய சிங்கள இனவாதத்தை தனிமைப்படுத்துவது அல்லது சிறுபான்மையாக்குவது என்று பொருள்.
கூட்டரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது வெளியேறக் கூடும் என்றவாறான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வரும் ஒரு பின்னணிக்குள் சம்பந்தரின் வழி வரைபடத்தில் பிரயோக சாத்தியங்களைப் பார்ப்போம்.
இனவாதத்தை மோதி தோற்கடிப்பதை விடவும் அதை உடைத்து தோற்கடிப்பது இலகுவானது, சேதம் குறைந்தது என்று சம்பந்தர் நம்புகிறாரா? அவர் நம்புவதன் படி சிங்கள இனவாதத்தை கடும்போக்கு, மென்போக்கு என்று பிரித்துப் பார்க்க முடியுமா? சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய பல இடது சாரிகளும், லிபரல் ஜனநாயகவாதிகளும் தொடக்கத்தில் இனவாதத் தன்மையற்றவர்களாக காட்சியளித்த போதிலும் இறுதியிலும் இறுதியாக அவர்கள் தஞ்சம் புகுந்த குகை எது? யாப்புருவாக்கத்திற்கான இப்போதிருக்கும் நாடாளுமன்ற நிலவரத்தை ஓர் அரிதான தோற்றப்பாடு என்று சம்பந்தர் நம்புவது தெரிகிறது. ஆனால் மூத்த அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது தலைகளை எண்ணிப் பெரும்பான்மையைக் காட்டும் ஓர்எண்கணித விவகாரம் அல்ல என்று கூறுகிறார். அதே சமயம் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட’சிறீலங்காவின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் திட்டமானது தொடங்கிய இடத்திற்கே மெதுவாகத் திரும்பி வந்துகொண்டிருக்கிறது (returning to the drawing board)” என்றும் ரணில் – மைத்திரி அரசாங்கத்தை’வயக்கெட்டது'(feeble) என்றும் கூறுகிறார்.
சம்பந்தர் கிளிநொச்சியில் உரையாற்றுவதற்கு சரியாக ஐந்து நாட்களுக்கு முன் இம்மாதம் 7ம் திகதி உயாங்கொட கொழும்பு ரெலிகிராஃபில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் இந்த அரசாங்கத்தின் அரைவாசி ஆட்சிக்காலத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். காணாமல் போனவர்களின் அலுவலகம் போன்ற சிறிய முன்னேற்றங்களைத் தவிர பெரிய அடிப்படையான மாற்றங்கள் எதையும் இந்த அரசாங்கம் செய்திருக்கவில்லை என்று அவர் எழுதியிருக்கிறார். மாற்றத்திற்கான ஓர் அணிச் சேர்க்கை எனப்படுவது மாற்றத்தின் பின் அதன் கோட்பாட்டு அடிப்படைகளை பலமாக நிறுவத் தவறி விட்டது என்பதனால் ஆட்சி மாற்றமானது அதன் சரியான பொருளில் உருமாற்றத்தைப் பெறத் தவறி விட்டது என்ற தொனிப்படவும் அவர் எழுதியுள்ளார்.
ஜெயதேவ சொன்ன அதே விடயத்தைத்தான் அரசுத் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலரான ஷரால் லக்திலகவும் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார். ஏசியன் மிரரிற்கு அண்மையில் வழங்கிய ஓரு நேர்காணலில் ‘ராஜபக்ஷ அணியை கோட்பாட்டு ரீதியாகத் தோற்கடிப்பதற்கு கூட்டு அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அதுவே இந்த அரசாங்கத்தின் பலவீனமும்’ என்று லக்திலக கூறியுள்ளார்.
ஜெயதேவவும், லக்திலகவும் கூறுவது ஓர் அடிப்படையான விவகாரத்தை. ராஜபக்ஷ அணியை கோட்பாட்டு ரீதியாகத் தோற்கடிப்பது என்றால் என்ன? இனவாதத்தை தோற்கடிப்பது என்றுதானே அர்த்தம்? இனவாதத்தை தோற்கடிப்பது என்றால் என்ன? தனிய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பது மட்டும்தானா? மென் இனவாதிகளாகவும், லிபரல் இனவாதிகளாகவும் அல்லது லிபரல் ஜனநாயகவாதிகளாகவும் தோன்றும் இனவாதிகளையும் தோற்கடிப்பதுதான். மென் இனவாதிகள் தங்களை நீருக்குள் மிதக்கும் பனிக்கட்டிகளாக காட்டப் பார்க்கிறார்கள். பனிக்கட்டியானது நீரில் இருந்து புறத்தியானது போலத் தோன்றினாலும் இயல்பில் அதுவும் நீரைப் போன்றதே. எனவே இனவாதத்தை தோற்கடிப்பது என்பது அநேகமாக எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் தங்களைத் தாங்களே தோற்கடிப்பதுதான். தங்களுக்குள் ஏதோ ஒரு விகிதத்தில் ஒழித்திருக்கும் அல்லது வெளிப்படையாகத் தெரியும் ஒரு விலங்கைத் தோற்கடிப்பதுதான்.’நாங்கள் கூட்டாட்சியில் இணையவில்லையென்றால் ஐக்கியத் தேசியக் கட்சியும் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டாட்சியை உருவாக்கியிருந்திருப்பார்கள் அதைத் தடுக்கவே நாங்கள் கூட்டாட்சியில் இணைந்தோம்’ என்ற தொனிப்பட அண்மையில் மகிந்த சமரசிங்க கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்டலாம்.
ஆனால் அவ்வாறு இனவாதத்தை தோற்கடிப்பதற்குரிய கட்டமைப்பு மாற்றங்களையோ அல்லது சமூகப் பொது உளவியல் தயாரிப்புக்களையோ கூட்டரசாங்கம் செய்யத் தவறிவிட்டது என்ற தொனிப்பட உயாங்கொட விமர்சிக்கின்றார்.
இந்த அரசாங்கத்தின் அரைவாசி ஆட்சிக்காலம் கடந்து விட்ட ஒரு நிலையில் இனிமேல் கோட்பாட்டு அடிப்படைகளை மாற்றுவதோ பொது உளவியலை நல்லிணக்கத்தை நோக்கித் தயாரிப்பதோ கடினமாக இருக்கும். பதிலாக வரப்போகிற தேர்தல்களை நோக்கி வாக்கு வேட்டை வியூகங்களை வகுப்பதே உசிதமாயிருக்கும். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் சிங்களக் கட்சிகளின் வாக்குவேட்டை வியூகம் எனப்படுவது பெருமளவிற்கு இனவாதத்தை கிளப்புவதுதான். ஆயின் இனவாதத்தை கோட்பாட்டு ரீதியாகத் தோற்கடிப்பது என்பது சாத்தியமான ஒன்றா?
ஆனால் சம்பந்தர் கூறுகிறார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் புதிய யாப்பானது அதன் முதற் தடையைத் தாண்டுமாக இருந்தால் அது ஒரு பெரிய முன்னேற்றம் என்று. இது விடயத்தில் பின்வரும் நிச்சயமற்ற நிலமைகள் உண்டு. முதலாவது கூட்டு அரசாங்கம் நீடித்திருக்குமா? என்பது. இரண்டாவது ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்ந்தும் மாறாதிருக்குமா என்பது?. மூன்றாவது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற யாப்பானது பொதுசன வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது முடிவு என்னவாய் அமையும்? மகாசங்கத்தினர் ஒரு புதிய யாப்பை எதிர்க்கிறார்கள். இது சாதாரன சிங்களப் பொது உளவியலில் தீர்மானிக்கக் கூடியதொன்று. சம்பந்தர் தன்னுடைய கிளிநொச்சி உரையில் மகரகம பகுதியைச் சேர்ந்த ஒரு விகாராதிபதியை மேற்கோள் காட்டி ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். பண்டாரநாயக்கா கொண்டு வந்த தீர்வை நாங்கள் எதிர்த்தோம். அதன் விளைவுகளை இப்பொழுது சந்திக்கிறோம். என்று அந்த பிக்கு தெரிவித்ததாக சம்பந்தர் உரையாற்றியுள்ளார். அப்படியானால் மகாநாயக்கர்களை மனமாற்றம் செய்யலாம் என்று அவர் நம்புகிறாரா? குறிப்பாக அஸ்கிரிய பீடம் மகிந்தவிற்கு ஆதரவானது. புதிய யாப்பிற்கு முதலில் எதிர்ப்பைக் காட்டியது அந்தப் பீடம்தான்.
மேற்கண்ட எல்லாத் தடைகளையும் தாண்டியே ஒரு புதிய யாப்பைக் கொண்டு வரவேண்டியிருக்கும். கொண்டு வந்த பின்னரும் நடைமுறைப் பிரச்சினைகளிருக்கும். கிளிநொச்சியில் வைத்து சம்பந்தர் கூறினார். ‘வழங்கப்படும் அதிகாரங்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும். மீளப் பெறப்படாத வகையில் இருக்க வேண்டும். அந்த அதிகாரங்களுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாதிருக்க வேண்டும். எவ்விதமாக குறுக்கு வழியிலும் அதிகாரங்களை உடைக்க முடியாத அளவில் இருக்க வேண்டும்’ என்று. ஆனால் அதிகாரங்களை மீளப்பெறுவது அல்லது பெற முடியாதது என்பது வெறுமனே ஒரு சட்டநுணுக்கப் பிரச்சினையல்ல. மாறாக அது ஒரு கோட்பாட்டு விவகாரமாகும்.
மீளப்பெற முடியாத அதிகாரங்கள் எனப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்குரியது. அங்கே அதிகாரங்களை குறிப்பிட்ட ஒரு தேசிய இனத்தின் கூட்டிருப்பிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை அல்லது அந்நியப்படுத்தப்பட முடியாதவை என்று விளக்கம் தரப்படுவதுண்டு. எனவே கூட்டாட்சி என்பதை புதிய அரசியலமைப்பானது ஒரு கோட்பாடாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதிகாரங்களை மாநிலம் பிரயோகிப்பது மத்திய அரசாங்கம் அதிகாரங்களை மீளப் பெறுவது போன்ற விவகாரங்களை கோட்பாட்டு ரீதியாக பொருள் கோட முடியாது. இலங்கைத் தீவின் அதிகாரக் கட்டமைப்பு, நிர்வாகக் கட்டமைப்பு போன்றன பல தசாப்தங்களாக இனவாதமயப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிர்வாக கட்டமைப்பிற்கூடாக அதிகாரங்களை பிரயோகிப்பது எப்படி? வடமாகாண சபையின் முதலமைச்சர் நிதியம் இன்று வரையிலும் இழுபடுவதை இங்கு சுட்டிக் காட்டலாம்.
யாப்புருவாக்கத்தின் சக நிர்மாணிகளாக இருப்பதனால் அரசாங்கம் யாப்பை மீறிச் செயற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 2015 ஜெனீவாத் தீர்மானத்தில் அரசாங்கமும் இணை அனுசரனையும் வழங்கியது. அதாவது அந்த தீர்மானத்தின் பங்காளி என்று அர்த்தம். ஆனால் தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை அரசாங்கம் போதியளவு நிறைவேற்றவில்லை என்று அண்மையில் இலங்கைக்கு வந்து போன ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான பென் எமேர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கண்டவைகள் அனைத்தையும் தொகுக்கும் பொழுது ஒரு கேள்வி எழுகிறது. இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்தில் உள்ள மிக மூத்த பழுத்த அரசியல்வாதியாகிய சம்பந்தருக்கு இவையெல்லாம் தெரியாதா? அல்லது தெரிந்தும் கிடைப்பதைப் பெறுவோம் என்ற ஒரு நிலைக்கு இறங்கி விட்டாரா? மேற்கண்டவைகளின் பிரகாரம் யாப்புருவாக்கப் பணிகள் தடக்குப்பட்டாலோ அல்லது அவர் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி ஒரு தீர்வை இந்த ஆண்டுக்குள் பெற்றுக் கொடுக்கத் தவறினாலோ தமிழ் மக்களுக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறார்? தனது வழிவரைபடத்தைக் குறித்து உரையாற்றிய அதேநாளில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்குக் கூறியது போல கடவுளிடம் கேளுங்கள் என்றா?