அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டில், அந்நாட்டை தண்டிக்கும் விதமாக புதிய தடை உத்தரவுகளை பிறப்பிக்க உதவும் சட்டம் ஒன்றிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய சட்டம் ரஷ்யாவுக்கு எதிரான எந்தவொரு தடை உத்தரவுகளை நீக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகார வரம்பையும் கடுமையாக கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் ராஜதந்திர ரீதியாக சுதந்திரமாக செயல்பட தனக்கு அதிகாரம் வேண்டும் என்று டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார். தேர்தல் தலையீடு குறித்த குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்து வந்தாலும், டிரம்ப் பிரசார அணியை சேர்ந்த எவரேனும் ரஷ்யா அதிகாரிகளுடன் ரகசியமாக தொடர்பு வைத்துள்ளார்களா என்பது குறித்த பல அமெரிக்க விசாரணைகளை ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஜனாதிபதி டிரம்பின் பார்வை என்னவாக இருந்தாலும், ரஷ்யாவுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை காக்க வேண்டும் என்ற நாடாளுமன்றத்தின் உறுதியை இந்த இரு கட்சி ஒப்பந்தம் சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்ட மசோதா மீது ஜனாதிபதி டிரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியும், ஆனால் அவர் அவ்வாறு செய்தால் ஜனாதிபதி ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்ற சந்தேகத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திவிடும் என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மற்றொரு பக்கம், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் கையெழுத்திட்டால், அவரது நிர்வாகம் எதிர்க்கும் சட்டத்தை வலுக்காட்டாயமாக திணிப்பதை போன்று தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.