யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த நாம் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களின் உயிருக்கு பாரதூரமான ஆபத்தை ஏற்படுத்திய 22.07.2017 அன்று நடைபெற்ற சூட்டு சம்பவம் தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிபதி சரத் அம்பேபிட்டிய அவர்கள் 2004இல் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு ஏற்பட்ட மிகவும் பாரதூரமான சவாலாக மேற்படி சம்பவத்தை நாம் கருதுகிறோம். இக்கட்டான இந்த சூழலில் கௌரவ இளஞ்செழியன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நாம் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம். மேற்படி சம்பவத்தில் கடமையின் போது தனது உயிரை இழந்த உப பொலிஸ் பரிசோதகர் திரு. ஹேமச்சந்திரவின் மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம். திரு. ஹேமச்சந்திரவின் சேவைக்கு நாம் தலை வணங்குகிறோம். சம்பவத்தில் காயமுற்ற திரு. ரத்ன விமலசிறியின் உயரிய சேவையை பாராட்டுவதோடு விரைவில் அவர் குணமடைய வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.
மேற்படி சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலீஸ் திணைக்களம் தமது தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம். இது வரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சில சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்ற கரிசனையை எம்மத்தியில் உருவாக்குகின்றது. சகல கோணங்களில் இருந்தும் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் எந்தவொரு விடயத்தையும் தவிர்க்காது விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். நேற்று இடம்பெற்ற சம்பவம் கௌரவ நீதிபதி விசாரித்த, விசாரித்து வரும் பாரதூரமான குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புபட்டவை என பொது சன அபிப்பிராயம் கருதுகின்றது. இப்பொதுசன அபிப்பிராயம் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி ஆகியன தொடர்பில் பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மையானது. எனவே மிக விரைவாக முறையான விசாரணை நடாத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். குற்றவாளிகள் பொறுப்புக் கூறவும் வேண்டும். மேலும் எல்லா மட்டங்களிலும் நீதிபதிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேற்படி விடயங்களை வலியுறுத்தி தீர்ப்பாயத்தைப் பாதிக்காத வகையில் நாளை (24.07.2017) நாம் நீதிமன்ற வேலைகளை புறக்கணிப்போம். இத்தீர்மானத்தால் பொது மக்களிற்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு நாம் வருந்துகிறோம்.
செல்வி. சாந்தா அபிமன்னசிங்கம்
வட பிராந்தியத்திற்கான உப-தலைவர்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்