Home இலங்கை அமைதிக்குப் பேரிடியாக மாறியிருக்கும் யாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பி.மாணிக்கவாசகம்

அமைதிக்குப் பேரிடியாக மாறியிருக்கும் யாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பி.மாணிக்கவாசகம்

by admin
நல்லூர் கோவிலடியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்களான பொலிசார் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலானது, யாழ்ப்பாணத்தின் அமைதிக்குப் பேரிடியாக இறங்கியிருக்கின்றது.
ஒரு நகரம் அல்லது பிரதேசத்தின் அமைதி என்பது, அங்கு மேற்கொள்ளப்படுகின்ற சட்டம் ஒழுங்கு நடவடிக்கையிலேயே தங்கியிருக்கின்றது. சட்டமும் ஒழுங்கும் முறையாகப் பேணப்பட்டாலொழிய, பொதுமக்களின் பாதுகாப்பையும் மக்கள் மத்தியில் அமைதியையும் சீராகப் பேண முடியாது. சட்டமும் ஒழுங்கும் முறையாகப் பேணப்படாதபோது, அல்லது சட்டத்தையும் ஒழுங்கையும் மீறிச் செயற்பட முடியும் என்ற துணிவு ஏற்படும் போது.  பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள எவருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது. அத்தகைய பாதுகாப்பைப் பேணவும் முடியாது.
நல்லூர் கோவிலடி துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலானது, நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று அந்தச் சம்பவத்தில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
நல்லூர் கோவிலின் பின் வீதியில் உள்ள நாற்சந்தியில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தி நீதிபதியின் கார் செல்வதற்கு நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராகிய ஹேமச்சந்திர வழியேற்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்து வந்த சிவிலியன் ஒருவர் அந்த பொலிஸ் சார்ஜன்டின் இடுப்பில்; இருந்த கைத்துப்பாக்கியை அதன் உறையில் இருந்து பலவந்தமாக எடுத்துள்ளார். தனது துப்பாக்கியை அந்த நபரிடமிருந்து பறித்தெடுப்பதற்கு ஹேமச்சந்திர முயன்றுள்ளார். மின்னல் வேகத்தில் செயற்பட்ட அந்த சிவிலியன் பொலிஸ சார்ஜன்டிடம் இருந்து எடுத்த கைத்துப்பாக்கியை லோட் செய்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த வேளை துப்பாக்கிக்குண்டு ஒன்று ஹேமச்சந்திரவின் வயிற்றில் பட்டு பின்பக்கமாக வெளியேறியிருந்தது. படுகாயமடைந்த அவர் நிலத்தில் வீழ்ந்தார்.
இவ்வாறு துப்பாக்கிப் பறிக்கப்படுவதைக் கண்ட நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் இருந்து இறங்கி தனது மெய்ப்பாதுகாவலரை நோக்கி ஓடியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்திருந்த அந்த அடையாளம் தெரியாத சிவிலியன் அரை வட்டமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
நீதிபதியின் மெய்ப்பாதுகாவலாக இருந்த தனது சகா துப்பாக்கிச் சூடு பட்டு காயமடைந்ததையும், நீதிபதி இளஞ்செழியன் காரில் இருந்து இறங்கி அந்த இடத்தை நோக்கி ஓடியதையும் கண்ட நீதிபதியுடன் காரில் இருந்த மற்றுமொரு மெப்ப்பாதுகாவலர் அந்த சிவிலியனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் நீதிபதியின் மீது துப்பாக்கிக்குண்டுகள் பாயாத வகையில், அவரைப் பாதுகாத்து, காருக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
அப்போது துப்பாக்கியைப் பறித்த சிவிலியனுக்கும் காரில் இருந்த இறங்கிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையே தூப்பிக்கிப் பிரயோகம் நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சண்டையின்போது பொலிஸ் கான்ஸ்டபிள் கைத் தோள்பட்டையில் காயமடைந்தார். துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சிவிலியன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி, துப்hக்கியைக் காட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பறித்தெடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்
இதன் பின்னர் காயடைந்த படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன்டையும் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளையும், நீதிமன்ற ஊழியராகிய தனது கார்ச்சாரதியின் உதவியுடன் காரில் ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக நீதிபதி இளஞ்செழியன் அந்த சம்பவம் பற்றி விபரிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாகிய இளஞ்செழியன் தனது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் காயமடைந்து செயலிழந்த நிலையில் பாதுகாப்பற்ற ஒரு சூழலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
சமூகத்தில் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நீதித்துறையைச் சார்ந்த ஒரு நீதிபதிக்கே பட்டப்பகலில் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால், சாதாரண பொதுமகனின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்க முடியும் என்று இந்த சம்பவம் குறித்து கவலை வெளியிட்ட ஒரு பொதுமகன் கேள்வி எழுப்பினார்.
யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், சாதாரண ஒரு நிலையிலும்கூட கடமையில் உள்ள ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் உள்ள ஒரு கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து சூடு நடத்தக் கூடிய அளவுக்கு யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமை காணப்படுகின்றது என்ற நிலைமையைப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் வகையிலேயே யாழ் நல்லூர்; கோவிலடி துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் சம்பவம் நடந்தேறியிருக்கின்றது.
பட்டப்பகலில் மாலை 5.10 மணியளவில் நடைபெற்ற இந்தச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஞாயிறு அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்தார். சுமார் ஆறு மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் இவரைக் காப்பாற்றுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் போராடியிருக்கின்றார்கள். ஆயினும் அவர்களுடைய போராட்டம் வெற்றிபெறவில்லை.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 15 வருடங்கள் பணியாற்றியிருக்கின்றார். அவருடன்; பணியாற்றிய மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் கான்ஸ்டபிள் எட்டு வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகள் 
நீதிபதி இளஞ்செழியன் யாழ் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனாவார். இவர் 1093 ஆம் ஆண்டு கொழும்பு சட்டப்படிப்புக்குத் தெரிவாகி கொழும்பில் பட்டப்படிப்பைத் தொடர்ந்த போது 1987 ஆம் ஆண்டு இரண்டரை ஆண்டுகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, 1991 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார்.
மூன்று வருடங்கள் இலங்கையின் பிரபல சட்டத்தரணியாகிய பொன்னம்பலத்துடன், குற்றவியல் வழக்குகளில் கனிஸ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு நீதவான் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கினார். அக்காலப் பகுதியில் சட்டமா அதிபராகக் கடiயாற்றிய சரத் என் சில்வா அந்தக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.
இக்காலப் பகுதியில் மன்னார் கமாலிற்றா பாலியல் கொலை வழக்கு மடு தேவலாய குண்டு வெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, விடத்தல்தீவு பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தில் 35 பேர் கொல்லப்பட்ட வழக்கு போன்ற வழக்குகளை விசாரணை செய்து முக்கியமான தீர்ப்புக்களை நீதிபதி இளஞ்செழியன் வழங்கினார்.
இக்காலப்பகுதியிலேயே பெரும் பரரப்பை ஏற்படுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்த செம்மணி புதைகுழி வழக்கு விசாரணைக்காக விசேட நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். அந்த வழக்கு வழக்கு விசாரணையின்போது செம்மணி புதைகுழியில் இருந்து 20 மனித சடலங்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இந்த மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
செம்மணி வழக்கு விசாரணையையடுத்து. நீதிபதி இளஞ்செழியனை ஐக்கிய அமெரிக்க அரசு  விசேட விருந்தினராக அழைத்து, கௌரவ குடியுரிமை வழங்கிக் கௌரவித்தது. அத்துடன் அமெரிக்க மாநிலம் ஒன்றின் ஒருநாள் மேயராக நியமனம் செய்து அவரைச் சிறப்பித்தது.
வவுனியா மாவட்ட நீதிபதியாக…..
அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தீவிரமான மோதல்கள் இடம்பெற்றதையடுத்து, இராணுவம் வவுனியாவில் இருந்து வடக்கு நோக்கி ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பிதிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 9 ஆண்டு காலப்பகுதியில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த அச்சுறுத்தல்கள் மிகுநத காலப்பகுதியில் பல முக்கியமான வழக்குகளையும் அவர் விசாரணை செய்திருந்தார்.
வவுனியா தாண்டிக்குளம் விவசாய கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் கைது செய்யப்பட்டிருந்த வழக்கு, வேப்பங்குளம் மற்றும் செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவங்கள் தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்த வழக்குகள் போன்றவற்றை விசாரணை செய்து தீர்ப்புக்களை வழங்கியிருந்தார்.
அக்காலப்பகுதி நீதிமன்றச் செயற்பாடுகள் கத்தி முனையில் நடக்கின்ற காரியங்களுக்கு ஒப்பான வகையில் மிகுந்த அவதானத்திற்கு உரிய நிலைமைகளைக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருக்கத்தக்க வகையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
மேல் நீதிமன்ற ஆணையாளர்
இத்தகைய சூழலில் 2008 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக திருகோணமலையில் நியமனம் பெற்ற நீதிபதி இளஞ்செழியன், அங்கு பணியாற்றிய இரண்டு ஆண்டுகளில் 350 வழக்குகளை விசாரணை செய்து தீ;ர்ப்புக்களை வழங்கியிருந்தார். திருகோணமலையில் இருந்து கொழும்புக்கும் பின்னர் கல்முனைக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி இளஞ்செழியன் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார்.
கல்முனையில் இவர் பணியாற்றியபோது, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பதினெட்டு வயதுடைய புங்குடுதீவு மாணவி வித்தியா மர்மமான முறையில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. இதனால் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்ற மக்கள் இந்தச் சம்பவத்திற்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி ஆரப்பாட்டப் பேரணி நடத்திய போது யாழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதி  தாக்குதலுக்கு உள்ளாகியது.
இதனையடுத்து, அந்த ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி 48 மணித்தியால அவகாசத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக, அப்போதைய பிரதம நீதியரசர் சறிபவன், நீதிபதி இளஞ்செழியனை நியமனம் செய்தார். யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற 8 மாத காலப்பகுதியில் யாழ் மேல் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பல வழக்குகளில் அதிரடியாகத் தீர்ப்புக்களை அவர் வழங்கியிருந்தார். இவற்றில் பல வழக்குகள் உயிரச்சறுத்தல் விடுக்கத்தக்க வகையிலான மோசமான சம்பவங்களுடன் தொடர்புடையவையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பல தீர்ப்புக்கள் 
கடந்த வருடம் நவம்பர் மாதம் பொம்மைவெளியில் நடைபெற்ற வயோதிபர் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்;ட 4 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பரப்புரை காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இடம்பெற்ற இரட்டைக் கொலைகள் மற்றும் பலர் படுகாயமடைந்த வழக்கில் ஈபிடிபி கட்சியைச் சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட 3 பேருக்கு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட சுவிஸ் நாட்டுப் பிரஜையாகிய எதிரிக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அச்சுவேலியில் மூன்று பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட எதிரிக்கு 3 மரண தண்டனை வழங்கி இந்த வருடம் பெப்ரவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. நெடுந்தீவு சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஈபிடிபி கட்சியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்ட எதிரிக்கு மார்ச் மாதம் மரண தண்டனை வழங்கப்பட்டது.
சுன்னாகம் இளைஞர் சித்திரவதை கொலை வழக்கில் சித்திரவத செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 6 பொலிசார் குற்றவாளிகளாகக் காணப்பட்டதையடுத்து, அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் நியமனம் பெற்றிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. வன்முறைகள் தலைவிரித்தாடின ஆவா குழு மோதல் உட்பட்ட வாள் வெட்டு குழு மோதல்கள், மாணவர் குழு தாக்குதல்கள் என பெரியதொரு சண்டைக்களமாகவே யாழ்ப்பாணச் சூழல் திகழ்ந்தது. அத்துடன் சமூக விரோதச் செயற்பாடுகளும் கடடுக்கடங்காத வகையில் அதிகரித்திருந்தன.
இந்த நிலைமை காரணமாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன காலம் கழிக்க நேர்ந்திருந்தது. இந்த நிலைகைமளில் மாற்றத்தைக் கொண்டு வந்து சட்டத்தையும் ஒழுங்கையும் ந்pலைநாட்டுவதற்காக இறுக்கமான பல நடவடிக்கைகளை நீதிபதி இளஞ்செழியன் மேற்கொண்டிருந்தார். அதனையடுத்து நிலைமைகள் சுமுகமாகி யாழ்ப்பாணம் அமைதிப் பூங்காவாகியது.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கை விசாரணை செய்வதற்கா நியமிக்கப்பட்ட ட்ரையல் எட் பார் நீதிபதி குழுவில் 3 பேரில் ஒருவராக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன, பின்னணி என்ன?
இந்தப் பின்னணியிலேயே நல்லூர் கோவிலடியில் நீதிபதி இளஞ்செழியனுடைய இரண்டு  மெய்ப்பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது. அவர்களில் படுகாயமடைந்த ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கொல்லப்பட்டவருடைய உடைமையில் இருந்த கைத்துப்பாக்கியை வீதியில் நடந்து வந்த சிவிலியன் ஒருவரே பறித்தெடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றார். இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய இடுப்பில் இறுக்கமாக அதற்குரிய பையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து, அதனை லோட் செய்து துப்பாக்கிப் பிரயோகம் செய்வதென்பது சாதாரண விடயமல்ல. சாதாரண ஒரு விடயமாக மேலெழுந்தவாரியாக அதனைப் புறந்தள்ளிவிடவும் முடியாது.
அவ்வாறு கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்துச் சுடுவதென்பது சாமான்யன் ஒருவரால் செய்யக் கூடியதல்ல. கைத்துப்பாக்கியைக் கையாள்வதில் கைதேர்ந்த ஒருவராலேயே அவ்வாறு செயற்பட்டிருக்க முடியும் என்பது பாதுகாப்பு விடயங்களில் தேர்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.
இந்தச்சம்பவம் நீதிபதி இளஞ்செழியன் மீதான ஒரு கொலை முயற்சியாகவே பலராலும் நோக்கப்படுகின்றது. தனது மெய்ப்பாதுகாவலர்களான பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை எவருக்கும் இருக்க  முடியாது. தனது மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனது உயிருக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் என்பதே நீதிபதி இளஞ்செனியனின் நிலைப்பாடாகும். அந்தத் தாக்குதல் தன்னை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவே அந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற விதத்தைக் கண்ணுற்றவர் என்ற வகையில் அவர் கருதுகின்றார்.
ஆயினும் பொலிசார் இந்தத் தாக்குதல் நீதிபதி இளஞ்செழியனை நோக்கி நடத்தப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த சம்பவ இடத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சண்டையின் தொடர்ச்சியாகவே நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராகிய ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கி பறித்தெடுக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கின்றது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக ட்ரையல் எட் பார் முறையில் மாணவி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. அங்கு அளிக்கப்படுகின்ற சாட்சியங்களில் பல பொதுமக்கள் மத்தியில் இப்படியும் நடக்குமா என அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தத் தக்க வகையில் விபரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பின்னணியில் நல்லூர் கோவிலடி துப்பாக்கிச் சண்டையானது யாழ்ப்பாணத்தின் பொதுவான பாதுகாப்பு நிலைமையையும், சடடமும் ஒழுங்கும் பேணப்படுகின்ற விதத்தையும் கேள்;விக்கு உள்ளாக்கியிருக்கின்றது. பொது மக்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பிலான ஐயப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே உண்மையில் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்த சரியான விபரங்களை  முறையான விசாரணைகளின் மூலம் கண்டறிந்து பொதமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தையும் அச்ச உணர்வையும் போக்க வேண்டியது காவல்துறையினருடைய கடமையாகும். இதனை அவர்கள் விரைவாக நிறைவேற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More