கேப்பாபிலவு காணி தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தற்பொழுது இராணுவம் நிலைகொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணி தமிழ்க் குடிமக்களுக்குச் சொந்தமானது. அது நான்கு காணித் துண்டுகளை உள்ளடக்கியது. (01) 243 ஏக்கர்கள் (02) 189 ஏக்கர்கள் (3) 111 ஏக்கர்கள் (4) 70 ஏக்கர்களும் 02 றூட்களும். எல்லாமாக மொத்தம் 613 ஏக்கர்களும் 02 றூட்களும் ஆகும்.
கடந்த மே மாதம் 18ந் திகதி நானும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களும் குறித்த காணிக்கு விஜயம் செய்து, அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடினோம். அப்போது அவர் எமக்குத் தெரிவித்தவை
1) 243 ஏக்கர்கள் அடங்கிய 1வது காணித்துண்டு உடனடியாகவே விடுவிக்கப்பட முடியும், என்றும்
2) 189 ஏக்கர்கள் அடங்கிய 2வது காணித்துண்டு ஒரு மாத காலத்துள் விடுவிக்கப்பட முடியும், என்றும்
3) 111 ஏக்கர்கள் அடங்கிய 3வது காணித்துண்டு 6மாத காலமளவில் விடுவிக்கப்பட முடியும், என்றும்
4) 70 ஏக்கர்கள் 02 றூட்கள் அடங்கிய 4வது காணித்துண்டை விடுவிப்பதில் தாம் சில கஷ;டங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.
நான் கொழும்பு திரும்பியவுடன், அப்போதிருந்த இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி ஜெனரல் கிரிஷhந்த டி சில்வா அவர்களுடன் மேலே கூறப்பட்ட 70 ஏக்கர்களும் 02 றூட்களும் அடங்கிய 4வது காணித்துண்டை விடுவிப்பது பற்றிக் கலந்துரையாடியபொழுது, குறித்த 70 ஏக்கர்கள் 02 றூட்களும் விடுவிக்கப்பட முடியும் என்பதாக அவர் கூறினார். அத்துடன், முல்லைத்தீவு கேப்பாபிலவில் உள்ள எல்லாக் காணிகளையும் ஜுலை மாத இறுதிக்குள் விடுவிப்பதாகவும் சொன்னார்.
ஜுன் மாதம் 23ந் திகதி மேதகு தங்களை நான் சந்தித்த பொழுது 70 ஏக்கர்கள் 02 றூட்கள் அடங்கிய காணித்துண்டு உட்பட கேப்பாபிலவில் உள்ள எல்லாக் காணிகளையும் விரைவில் விடுவிக்கும்படி படையினருக்குக் கூறும்படி தங்களிடம் கோரியிருந்தேன். மேதகு தாங்களும் அவ்வாறு செய்வதாக எனக்கு உறுதியளித்தீர்கள்.
இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் கடந்த 141 நாட்களாக கேப்பாபிலவில் படையினர் தங்கியிருக்கும் காணி நுழைவாயிலுக்கு முன்பாக அமர்ந்திருந்து, தமது வாழ்விடங்களில் தாங்கள் மீண்டும் குடியமர்ந்து வாழ்வாதார நடவடிக்கைகளை ஆம்பிப்பதற்காகத் தமது காணிகளை விடுவிக்கும்படி கோரி தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருவதை அதிமேதகு தாங்களும் அறிவீர்கள். குடிமக்கள் தமது காணியில் இருந்து இடம்பெயர்ந்த பின்பு அக்காணிகளில் இடம்பெறும் எத்தகைய செயற்பாடுகளும் குறித்த காணிகள் சட்டத்தின்படி கையகப்படுத்தப்படாமலேயே நடைபெற்று வருகின்றன.
போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இம் மக்கள் நீண்டகாலமாக மிகுந்த துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு காணிகள் எல்லாமே அதன் உரிமையாளர்களான மக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கு அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலுவான கோரிக்கையை நான் விடுக்கிறேன்.
இந்த மாத இறுதிக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணிகள் யாவும் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கண்ணியமாகக் கோருகின்றேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
இரா.சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
எதிர்க்கட்சித் தலைவர்
பிரதிகள் : i. கௌரவ ரணில் விக்கிரமசிங்க – பிரதம மந்திரி
ii. பாதுகாப்புச் செயலாளர்- பாதுகாப்பு அமைச்சு
iii. ஜெனரல் கிரிஷhந்த டி சில்வா – முன்னாள் இராணுவத் தலைமைக் கட்டளை
அதிகாரியும், இலங்கை ஆயுதப் படைகளின் தற்போதைய தலைமை அதிகாரியும்
iஎ. ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா – இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி