Home இலங்கை எது பயங்கரவாதம்? – செல்வரட்னம் சிறிதரன்

எது பயங்கரவாதம்? – செல்வரட்னம் சிறிதரன்

by admin

யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது.

இதனால், யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு நிலைமை உருவாகுவதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றதோ என்று பலதரப்புக்களிலும் இருந்து அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆனால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்கும், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே காரணம் என பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே, அங்கு பயங்கரவாதம் தலையெடுத்திருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருக்கின்றன. அங்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு பயங்கரவாதம் தலையெடுத்திருப்பதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது இராணுவ பாதுகாப்பை எதிர்ப்பவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

மனப்பாங்கில் மாற்றமில்லை

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நல்லூரில் நடத்தப்பட்ட துப்hபக்கிப் பிரயோகத் தாக்குதல், கொக்குவில் பகுதியில் பொலிசார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு குழுவின் தாக்குதல் ஆகிய இரண்டு சம்பவங்களையடுத்து, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அங்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்ற பின்னணியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை அவர் அங்கு கோடிட்டு காட்டியிருக்கின்றார்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிசாரின் கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து தாக்குதல் நடத்தியவர் முன்ளாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொக்குவில் பகுதியில் பொலிசார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குழுவுக்குத் தலைமை தாங்கியவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்திருக்கின்றார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள போதிலும், சமூகத்தில் இருக்கின்ற ஆயுதப் பயிற்சி பெற்றுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின், ஆயுதப் போராட்ட மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

அரச படைகளுக்கு எதிராகவே விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். யுத்த காலத்தில் அரச படைகளும், விடுதலைப்புலிகளும், தீவிரமாக சண்டையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற எதிரிகளுக்கிடையிலான மோசமான பகையுணர்வு போன்றதொரு போக்கிலேயே இந்த சண்டைகள் அமைந்திருந்தன. எனவே, யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், முன்னாள் விடுதலைப்புலிகளிடம், அரச படைகளுக்கு எதிராக யுத்தம் நடத்திய மனநிலை இன்னும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இத்தகைய மனநிலையும், இன்னும் கைப்பற்றப்படாமல் அரசாங்கத்தினால்; அடையாளம் காணப்பட்ட இடங்களிலும்,; இன்னும் அடையாளம் காணப்படாத இடங்களிலும் உள்ள பெருந்தொகையான ஆயுதங்களும், குற்றச் செயல்களில் ஈடுபடவும், பொலிசாருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களைத் தூண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மொத்தத்தில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள போதிலும், பயங்கரவாதம் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை என்பது பொலிஸ் மா அதிபரின் கருத்தாகும்.

அரசாங்கத்தின் அங்கீகாரம்

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்ட போதிலும், அந்த யுத்தத்திற்குக் காரணம் என அரசாங்கம் கூறி வருகின்ற பயங்கரவாதத்தின் விதைகள் இன்னும் அழிக்கப்படவில்லை என்று நேரடியாக பொலிஸ் மா அதிபர் கூறியிருக்கி;ன்றார்.

எனவே, பயங்கவரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தொழுங்கிலேயே யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமையை சீர் செய்வதற்காக முப்படைகளையும் களத்தில் இறக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அவர் வந்துள்ளார் என்று கருத வேண்டியிருக்கின்றது. இது பொலிஸ் மா அதிபரின் நிலைப்பாடு மட்டுமல்ல. அரசாங்கத்தின் நிலைப்பாடும் இதுவே என்பதும் தெளிவாகியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமைகளை கட்டுக்கோப்பில் வைத்திருப்பதற்கு முப்படைகளையும் பயன்படுத்துகின்ற திட்டத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்திருப்பதாக அவர் யாழ்ப்பாணத்தில் மதத்தலைவர்கள் மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த அங்கீகாரத்துடன் பொலிஸாருக்கும் ஏனைய படைத்தரப்பினருக்கும் இது தொடர்பில் உரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் பொலிஸாருடன் முப்படைகளும் இணைந்து பாதுகாப்புக்கான சுற்றுக்காவல் நடவடிக்கைகளிலும், சுற்றி வளைப்பு தேடுதல் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களே அதிகரித்திருக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களே வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு முற்படும்போது, பொலிஸாருக்கு எதிராக இந்த வன்முறையாளர்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள். இந்தச் சம்பவங்களில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஓரிருவரோ அல்லது, ஒரு சிலரோ இலகுவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகச் செயற்பட்டிருக்கலாம். யுத்தத்தின் பின்னரான வடமாகாணத்தின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கைச் சூழலில் அதற்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே உருவாகியிருக்கின்றன.

குற்றச்செயல்களா? பயங்கரவாதமா?

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் போதைப்பொருள் கடத்தல், மணற் கொள்ளை நடவடிக்கைகள், துணிகர கொள்ளைச் சம்பவங்கள், வெள்வெட்டு குழுக்களின் குழு மோதல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களே இடம்பெற்றிருக்கின்றன.

விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டத்தின்போது பொலிஸார் மீதும், படைத்தரப்பினர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களைப் போன்று அவர்களின் வாகனத் தொடரணிகளை வழிமறித்த தாக்குதல்களோ அல்லது பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் மீதோ அல்லது படை முகாம்கள் பொலிஸ் நிலையங்கள் என்பவற்றின் மீது வலிந்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

திட்டமிட்ட வகையில் முழுமையாக ஆயுதந்தரித்து, இராணுவச் செயற்பாட்டிற்கு இணையாள வகையில் தாக்குதல் அணியாகச் சென்று எவரும் பொலிஸார் மீதோ அல்லது படைத்தரப்பினர் மீதோ எந்தத் தாக்குதல்களையும் நடத்தவில்லை. இத்தகைய நடவடிக்கைகளையே, விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் என அரச படைத்தரப்பினரும். அரச தரப்பினரும் அடையாளப்படுத்த்pயிருந்தார்கள்.

இந்தப் பின்னணியில், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்தவேளை, அவருடைய மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் சார்ஜன்ட், நீதிபதியின் பாதுகாப்பான பிரயாணத்திற்குத் தடையாக, வீதியில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசலை சரிசெய்யும் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய உடைமையில் இருந்த கைத்துப்பாக்கியை ஒருவர் மின்னல் வேகத்தில் பறித்தெடுத்து, துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்த்pயிருந்தார். இந்தச் சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களான இரண்டு பொலிஸாரும் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகக் கருதப்படுகின்றது. இந்தச்சம்பவத்தின் உண்யைமான தாற்பரியம் என்ன என்பது விசாரணைகளின் மூலம் கண்டறியப்படவேண்டிய ஒரு விடயமாகும். அந்த பொறுப்பு பொலிஸாரையே சார்ந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச் சம்பவங்களில் போதைப் பொருள் கடத்தலும், மணற் கொள்ளை நடவடிக்கைகளும், அதற்கு அடுத்ததாக குழுக்களின் வாள்வெட்டுச் செயற்பாடுகளுமே முக்கியமான சம்வங்களாக அமைந்திருக்கின்றன. இதனையடுத்து கொள்ளையர்களின் நடவடிக்கைகளாக வீடுகளில் புகுந்து உரிமையாளர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பது, தங்க நகைகளைக் களவாடிச் செல்வது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றி;ருக்கின்றன. இவற்றுடன் பெண்கள் மீதான வன்முறைகளாக பாலியல் தொல்லைகளும், பாலியல் குற்றங்களும் கொலைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றை பயங்கரவாதச் செயல்கள் என்ற இலங்கை அரசபடைகளினதும், அரசாங்கத்தினதும் பயங்கரவாத வரையறைக்குள் உட்படுத்தி பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ற முடிவுக்கு வரமுடியாது.

போதைப்பொருள் கடத்தல்

இந்தக் குற்றச் செயல்களில் – குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் என்பது சர்வதேச ரீதியில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்ற பாரியதொரு குற்றச் செயலாகும். இது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான நிதிமூலத்தைப் பெற்றுத் தருகின்ற ஒரு நடவடிக்கையாக வேண்டுமானால் கருதலாம். ஆனாலும் அதற்குரிய ஆதாரங்கள் கண்டறியப்பட வேண்டும்.

ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொருத்தமட்டில், இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவும், ஹெரோயின் போன்ற மோசமான போதைப்பொருளும் கடத்தி வரப்படுகின்றன. இந்தக் கடத்தல்கள் அதிகாரபலத்தையும், பணபலத்தையும் கொண்ட பெரியதொரு சக்தியின் பின்னணியிலேயே இடம்பெற்று வருவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் பொலிஸாரும் கடற்படையினரும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் பிரிவினரும் இணைந்தும் தனித்தனியாகவும், நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கி;ன்ற போதிலும் கடத்தல் நடவடிக்கைகளை முற்றாக முறியடிக்க முடியாதிருக்கின்றது.

இந்த போதைப்பொருள் கடத்தல் செயற்பாடானது யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல தலைநகர் கொழும்பையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கோ அல்லது பெரும் தொகையில் கைப்பற்றப்பட்ட அந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்பதைக் கூட கண்டு பிடிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமையைக் கண்காணிக்கின்ற பொலிஸார், அங்கு நடைபெறுகின்ற சம்பவங்களை இவ்வாறு வகைப்படுத்தி நோக்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொறுப்புடைய பொலிஸார் இன்னும் ஆழமாகவும் பொலிஸாருக்கே உரிய முறையிலும் சீரான முறையில் அந்த சம்பவங்களை வகைப்படுத்தி அவைகள் குற்றச்செயல்களா அல்லது உண்மையிலேயே பயங்கரவாதச் செயற்பாடுகள்தானா என்பதைத் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், யாழ்ப்பாணத்தின் நிலைமை தொடர்பில் அவ்வாறானதொரு மதிப்பீடு நடத்தப்பட்;டதா என்பது தெரியவில்லை.

இத்தகைய ஒரு நிலைமையில்தான் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களான இரண்டு பொலிஸார் மீது நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிசார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் ஆகிய சம்பவங்களையடுத்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பயங்கரவாத விதை இன்னும் அங்கு அழிக்கப்படவில்லை என கூறியிருக்கின்றார்.

ஆவா குழுவினரின் செயற்பாடுகள்

அதேவேளை, வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த ஆவா குழுவினரே, கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவரை கொக்குவில் பகுதியில் துரத்தித் துரத்தி வாளால் வெட்டியதாக பொலிசார் தமது விசாரணைகளின் மூலம் கண்டறிந்து கூறியிருக்கின்றார்கள்.

ஆவா குழுவினர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால், உருவாக்கப்பட்டு, இராணுவ பிரிகேடியர் ஒருவரின் கீழ் செயற்பட்டு வந்ததாக கடந்த வருடம் ஆவா குழுவினரின் செயற்பாடுகளினால் யாழ்ப்பாணம் கதிகலங்கியிருந்த போது அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். அமைச்சரவை முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, அப்போதைய யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார்.

யாழ்; பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இரவு வேளையில் குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் முழு யாழ்ப்பாணமும் கொதிப்பேறி இருந்தது. அந்த வேளையில்தான் இரண்டு புலனாய்வு பொலிசார் மீது ஆவா குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர். அப்போது பொலிசார் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை பயங்கரவாதப் பிரச்சினையாக எவரும் நோக்கவில்லை.

மாறாக, அத்துமீறிய வகையில் அதிகரித்த்திருந்த வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொலிஸாரினால் முடியாமல் போயிருப்பதாகவும், தங்களை முகாம்களில் இருந்து வெளியில் விட்டால் உடனடியாகவே வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் ந்pலைநாட்ட முடியும் என்று அப்போதைய யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கூறியிருந்தார்.
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினராலேயே முடியும். பொலிஸாரினால் அது முடியாது என்ற கருத்தை அவர் இதன் மூலம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

பொலிஸாரின் திறமையைக் குறைத்து மதிப்பிடும் வகையில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பரவலாக எழுந்திருந்த அழுத்தத்தைக் குறைத்து, இராணுவம் வடக்கில் நிலைகொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்தி வலியுறுத்துவதற்காகவே இத்தகைய கருத்தை அப்போதைய யாழ் மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்டிருந்தார் என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.

கடந்த வருடத்தைப் போலவே இப்போதும் வாள்வெட்டு குழுவினர் பொலிசார் இரண்டு பேர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். அந்தக் குழுவின் தலைவன் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்த போதிலும், பின்னர் இரண்டு பேரைக் கைது செய்த பொலிசார், அந்தத் தாக்குதலை ஆவா குழுவினரே நடத்தியிருந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பிலான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவினருடைய நடவடிக்கைகளும் குற்றச் செயல்களும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கின்றன. ஆகவே யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமாகிய மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என்று அவைகள் குரலெழுப்பி வருகின்றன. அவர்களுடைய குரலுக்கு செவிசாய்த்து, யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு அளிக்கப்பட்ட புனர்வாழ்வுப் பயற்சிகள் சரியானதா என்பதைப் பார்க்க வேண்டியிருக்கி;ன்றது என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் முன்னைய அரசாங்கமே ஆவா குழுவை உருவாக்கிச் செயற்படுத்தியிருந்தது என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார். ஆவா குழுவினர் தலையெடுத்துள்ள அதேவேளை, அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வடக்கில் பாரிய குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு சில தீயசக்திகள் முயற்சித்திருப்பதாக அமைச்சரவையின் மற்றுமொரு பேச்சாளராகிய தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்

ஆனாலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற குற்றச் செயல்களுடன் முன்னாள் விடுதலைப்புலிகளைத் தொடர்புபடுத்தி கருத்துக்களை எழுந்தமானமாக வெளியிடுவதை பாரதூரமான விடயமாகவே நோக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் புனர்வாழ்வுப் பயிற்சி என்ற போர்வையில் இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, இராணுவ அரசியல் ரீதியாக மூளை சலவை செய்யப்பட்ட ஒரு நிலையில் மனமாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், போருக்குப் பிந்திய தமிழ் சமூகத்தில் தமக்கென தகுந்த வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள்.

விடுதலைப் போராட்டத்திற்காக குடும்பம் சுற்றம் சூழலையும், கல்வியையும் எதிரகால கனவுகளையும் துறந்துவிட்டு வெளியேறிச் சென்ற அவர்கள் திரும்பி வந்தபோது, சாதாரண சிவில் வாழ்க்கையில் ஒட்ட முடியாதவர்களாக – அத்தகைய வாழ்க்கைச் சூழலில் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே அவர்களுடைய சமூக மீள் பிரவேசம் அமைந்திருந்தது. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்களுடைய சிவில் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவும், சமூகத்தில் முழுமையாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

வெளிப்படையாகச் சொல்வதானால், அன்றாட உணவுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அல்லாட வேண்டியவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒன்றிணைந்ததோர் அமைப்பு ரீதியிலோ நன்மையான காரியங்களில்கூட ஈடுபட முடியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். யுத்தத்திற்குப் பிந்திய சமூகக் கட்டமைப்பில் ஏனையவர்களின் பின்னால் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்களேயொழிய, சமூகத்தையும், சமூகத்தில் உள்ளவர்களையும் தலைமைதாங்கி ஆளுமையுடன் வழிநடத்திச் செல்லத்தக்க தலைமைத்துவ நிலைமையில் அவர்கள் இல்லை.

இத்தகைய ஒரு சூழலில் முன்னாள் போராளிகளைக் குற்றச் செயல்களுடனும், பயங்கரவாதச் செயற்பாடுகளுடனும் இணைத்துக் குற்றம் சுமத்துவதும் கருத்துக்களை வெளியிடுவதும் அபத்தமான செயற்பாடாகவே நோக்க வேண்டியிருக்கின்றது,

புனர்வாழ்வு பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்புப் படை என்ற பெயரில் இராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றார்கள். அந்த கட்டமைப்புக்குள் இணைக்கப்படாதவர்களை விசேட புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றார்கள். இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம், முன்னாள் போராளிகளின் ஒவ்வோர் அசைவும் மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகையதொரு நிலையில் அவர்கள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கின்றார்கள் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு, வடக்கில் அதுவும் யாழ்மாவட்டத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய யாழ் குடாநாட்டை இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்துவது நியயமான நடவடிக்கையாக அமைய முடியாது.

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவை பயங்கரவாதத்துடன் முடிச்சிடுவதை;த தவிர்த்து, செயற்திறன் மிக்க வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகளை நுணுக்கமாக முன்னெடுப்பதன் மூலம் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையை சீர் செய்ய முடியும். அதற்குரிய வல்லமை பொலிஸ் திணைக்களத்திடமும், பொலிஸாரிடமும் இருக்கின்றது.
எனவே சீரான பொலிஸ் செயற்பாடுகளின் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, யாழ் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More