181
நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜிநாமா செய்வதிலும், நம்பிக்;கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது.
ஆனால் இந்த சாதனைகள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழிவகுப்பதாகத் தெரியவில்லை.
மத்திய வங்கி விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்டார் என அரசாங்கத் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வெளிவிவகார அமைச்சசர் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.;
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து, இவ்வாறு அவர் இராஜிநாமா செய்திருப்பது, ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாகவே பேசப்படுகின்றது.
இவருக்கு முன்னதாக சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த அமைச்சர் திலக் மாரப்பன 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் பெரும் ஊழல் நடவடிக்கை இடம்பெற்றதாகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்ற அவன்கார்ட் (மிதக்கும் ஆயுதக் கப்பல்) விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு சக நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டதையடுத்தே அவர் அப்போது அமைச்சர் பதவியை துறந்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர், சட்டம் ஒழுங்கு மற்றும் சி;றைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அமைச்சு பொறுப்பை ஏற்ற மூன்றாவது மாதத்திலேயே அதனை இராஜிநாமா செய்ய வேண்டிய நிலைமை அவருக்கு எற்பட்டிருந்தது.
அந்த வகையில் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு அடுத்ததாக நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மாரப்பனவுக்கு எதிராக எழுந்திருந்தது போன்ற அழுத்தங்கள் ஏற்பட்டதன் காரணமாக பதவியைத் துறந்துள்ளார்.
இரண்டாவது சாதனை
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இராஜிநாமாவானது, இலங்கையின் அரசியலில் முன்மாதிரியான ஒரு நடவடிக்கை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்ணித்திருந்தமை கவனத்திற்குரியது.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வற்புறுத்தலையடுத்தே அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜிநாமா செய்திருந்தார் என்பதும் முக்கிய தகவலாகும்.
மத்திய வங்கியின் ஊழல் விவகாரத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதற்காக ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைக்கு அவர் முகம் கொடுத்திருந்தார். அதனையடுத்து, அவருடைய நடவடிக்கைகள் குறித்து அரச தரப்பைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூகத்தினரும் அதிருப்தியடைந்திருந்ததுடன், அவரைப் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்திருந்தார்கள்.
ரவி கருணநாயக்கவின் இராஜிநாமா செயற்பாடு, இலங்கை அரசியலில் முன்மாதிரியானதொரு நடவடிக்கை என்று பேசப்பட்ட போதிலும், அவருக்கு முன்னதாக இதே அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த திலக் மாரப்பனவின் இராஜிநாமா விடயம் இவ்வாறு சிலாகித்து பேசப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அதேநேரத்தில் இந்த விடயத்தில் மற்றுமொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
இதே அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து தனது பொறுப்பைத் துறந்திருந்த திலக் மாரப்பன மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதே அந்த இரண்டாவது சாதனையாகும்.
இராஜிநாமா செய்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பொறுப்பே அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அவருக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுப் பொறுப்பை துறந்ததன் பின்னர் 21 மாதங்களில் மீண்டும் அவருக்கு, இவ்வாறு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் 2017 மே மாதம் செய்யப்பட்ட மாற்றத்தின்போது, 9 பேருக்கு அமைச்சுப் பதவிகளும், இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டது. அப்போது திலக் மாரப்பனவுக்கு அபிவிருத்திப் பணிகள் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இப்போது முக்கியத்துவம் மிக்க வெளிவிவகார அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் கால வாக்குறுதிகள்
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, ஊழல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஊழலற்ற நல்லாட்சி புரிவோம். ஜனநாயகத்திற்குப் புத்துயிரளித்து தழைக்கச் செய்வோம். நிறைவேற்று அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் செய்து, நாடாளுமன்றத்திற்கும், பிரதமருக்கும் அதிகாரங்களை உரித்தாக்குவோம். தேர்தல் முறையை மாற்றியமைப்போம். தேசிய சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை சுபிட்சமடையச் செய்வோம் என்றவாறாக தேர்தலில் பல வாக்குறுதிகளை முன்வைத்து, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை அளவற்ற வகையில் அதிகரித்து, அந்தப் பதவியில் வாழ்நாள் முழுதும் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியை அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்காக ஜனநாயகத்தின் மீது பற்றுகொண்ட பலர் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்தை கத்தியின்றி சத்தமின்றி செய்யப்பட்டதோர் அரசியல் புரட்சியாகவே பலரும் நோக்கினார்கள்.
கீரியும் பாம்பும் போல எதிரும் புதிருமான அரசியல் செயற்பாடுகளைக் கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இணைந்து உருவாக்கியதே நல்லாட்சி அரசாங்கமாகும்.
ஊழல் புரிந்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே, ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக, இரண்டு அமைச்சர்கள் தமது பதவிகளைத் துறந்திருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தார். அ
ம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த விடயத்தில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிச் செயற்பட்டார் என்பதுடன், முன்னைய ஆட்சியாளர்கள் மீதான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான விடயங்களில் ஆதரவளிக்கும் வகையிலான போக்கைக் கடைப்பிடித்திருந்தார் என்றும், அதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் விடயங்களில் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆயினும் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் ரவி கருணாநாயக்க போன்று விஜேதாச ராஜபக்ச தனது பதவியைத் துறப்பதற்குத் தயாராக இருக்கவில்லை. அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அவர் கூறிய காரணங்களும் ஏற்புடையனவாக இருக்கவுமில்லை. இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளின்படி அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.
முக்கிய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நல்லாட்சி அரசாங்கத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. இதனை இந்த அரசாங்கத்தின் மற்றுமொரு சாதனையாகக் கொள்வதில் தவறிருக்க முடியாது.
அடுத்ததாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது எதிரணியைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு அடுத்தடுத்து அமைச்சர்கள் விலகுவதற்கும், விலக்கப்படுவதற்கும் மட்டுமல்லாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுப்பதற்குமான துர்ப்பாக்கிய நிலைமைக்கு நல்லாட்சி அரசாங்கம் முகம் கொடுத்திருக்கின்றது. இவையெல்லாமே நல்லாட்சி அரசாங்கத்தின் ‘சாதனைகளாகவே’ நோக்கப்படுகின்றது.
அரசாங்கத்தி;ன் இந்த ‘சாதனைகள்’ எதுவும், நல்லாட்சி இடம்பெற வேண்டும் எனவும், பொது நலன்களுக்காகச் செயற்பட வேண்டும் எனவும் விரும்புகி;ன்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வலலவையாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.
கேள்விகள்
முன்னைய அரசாங்கத்தில் வரையறையற்ற வகையில் வகைதொகையற்ற விதத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, ஊழல்களை ஒழிக்கப் போவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பொதுவானதொரு குற்றச்சாட்டாகும்.
ஊழல்கள் பற்றிய விசாரணைகளில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான மில்லியன்கள் ரூபா பண மோசடிகள் சம்பந்தமான தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் அவற்றில் சம்பந்தப்பட்ட எவருமே சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. எவருமே நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டிக்கப்படவுமில்லை. அதற்கும் அப்பால், நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்திருக்கின்றன.
ஆனால், முன்னர் ஊழல் செய்தவர்கள் கண்டுகொள்ளப்படாததைப் போலவே இப்போதும் ஊழல்களில் ஈடுபட்டிருப்பவர்களைக் கண்டுகொள்ளாத போக்கில் அரசாங்கம் சென்று கொண்டிருக்கின்றது என நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உயிரச்சறுத்தல்களுக்கு மத்தியில் முன்னின்று செயற்பட்டவர்கள் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள் .
ஆத்திரமடைந்திருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாகவே, விகாரமாதேவி பூங்காவில் அரசாங்கம் பொறுப்புள்ள வகையில் செயற்படவில்லை என இடித்துரைப்பதற்கான சத்தியாக்கிரகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பொதுவாக ஒருவர் ஊழல் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே அவர் குற்றம் புரிந்திருக்கி;ன்றாரா இல்லையா என்பது தெளிவாகும். அவ்வாறாக ஒரு விசாரணையின் மூலம் குற்றம் செய்யப்பட்டது அல்லது குற்றம் இழைக்கப்படவில்லை என்பது கண்டறியப்படாமலேயே பதவியைத் துறந்த ஒருவருக்கு மீண்டும் அதே அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டிருக்கி;ன்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இது நியாயமான செயற்பாடாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அவ்வாறு பதவி வழங்கப்பட்டால் மீண்டும் அந்த அந்தஸ்தில் ஊழல் நடைபெற மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற வினாவும் எழுந்திருக்கின்றது.
அமைச்சர் திலக் மாரப்பனவைப் போலவே, இப்போது அமைச்சு பதவியை இராஜிநாமா செய்துள்ள ரவி கருணாநாயக்கவுக்கு, இன்னும் சில மாதங்களில் மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டு விடும்.
எனவே, அமைச்சர்கள் ஊழல் புரிந்தார்கள் என்பதும், அதனையடுத்து அவர்கள் இராஜிநாமா செய்தார்கள் என்பதும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெறுகின்ற வெறும் கேலிக் கூத்தான அரசியல் நாடகங்களே என்று நாட்டின் தென்பகுதி அரசியல் வட்டாரங்களில் அரசாங்கத்தைக் குத்திக்காட்டும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இரு முனைகளிலும் அதிருப்தி
எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பொது அமைப்புக்களும், அவற்றின் பின்னால் அணிசேர்ந்த பொதுமக்களும் இணைந்து உருவாக்கிய புதிய அரசாங்கம் தனது தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றும். தேசிய ரீதியிலான நாட்டின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் இணைந்துள்ள புதிய அரசாங்கமானது, தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சி புரியும். நாட்டின் பொருளாதாரம் வளம் பெறும். யுத்தம் காரணமாக கட்டுக்கடங்காமல் எகிறிய வாழ்க்கைச் செலவு குறைவடையும். நாட்டில் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும். இனங்களுக்கிடையில் நிலவிய கசப்புணர்வும், சந்தேகத்துடன் கூடிய பகையுணர்ச்சியும் மறைந்து ஐக்கியமும், நல்லுறவும் நிலைநாட்டப்படும் என்றெல்லாம் நாட்டின் தென்பகுதிகளில் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் யுத்த பீதியும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும் அகன்று, நாளாந்த வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றபோதிலும், மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அரசியல் ரீதியான நம்பிக்கை மேலோங்கவில்லை. அதற்குரிய வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை.
மறபக்கத்தில், தேசிய சிறுபான்மை இனமக்களாகிய தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் நல்லாட்சியிலும்கூட தாங்கள் அடக்கியொடுக்கப்படுவதான உணர்வே தலைதூக்கியிருக்கின்றது.
மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் சிறுபான்மை இன மக்கள் மீதான நெருக்குதல்கள் தொடர்கின்ற நிலைமையே காணப்படுகின்றது.
யுத்தத்தின் பின்னர், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டி, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி, நாட்டில் ஐக்கியத்தையும் நல்லுறவையும் உருவாக்குவதில், யுத்தத்தில் வெற்றியடைந்த முன்னைய அரசாங்கம் தவறிவிட்டது.
அந்த அரசாங்கம் விட்ட தவறுகளைப் போக்கும் வகையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளில் உறுதியாகவும் துணிகரமாகவும் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
இதனை சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடக்கம், ஐநா மன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன், சர்வதேச நாடுகள் பலவும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு இடித்துரைத்திருக்கின்றன.
இருந்த போதிலும், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்பு கூறும் விடயங்களில் ஆமை வேகத்திலேயே அரசு செயற்பட்டு வருகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதனால், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக வாக்களித்திருந்த சிறுபான்மை இனமக்களும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள் .
அரசியல் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல
இந்த அதிருப்தியானது நாளுக்கு நாள் மோசமடைந்ததையடுத்து, கடந்த ஆறு மாதங்களாக இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை மீட்டெடுப்பதற்கான போராட்டமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பதற்கான போராட்டமும் தமிழர் தரப்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய போராட்டங்கள் அரசாங்கத்தைப் போலவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்களினால் முதலில் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆயினும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தமது உறுதியைக் கைவிடவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வரையில் தமது போராட்டத்தை முன்னெடுப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
இராணுவத்தின் பிடியில் உள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தைக் குறைத்தல், நீண்ட காலமாக நீதி விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறுதல் போன்ற எரியும் பிரச்சினைகளில் வெறுமனே வாய்வழி உத்தரவாதங்களே அரசாங்கத்தினாலும், ஜனாதிபதியினாலும் வழங்கப்படுகின்றன.
இந்த இழுத்தடிப்பு போக்கு காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தொய்வு நிலையில் கையாண்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பொறுமையும் நம்பிக்கையும் இழந்தவராகக் காணப்படுகின்றார்.
யுத்த மோதல்கள் காரணமாகவும், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும், தேசிய அளவிலான சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததன் காரணமாகவும், பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் மேலோட்ட அரசியலில் இரு கூராகப் பிரிந்திருக்கின்றார்கள். இந்த இருதரப்பிலுமே அரசாங்கம் இப்போது தனது ஆதரவை இழந்து வருகின்ற போக்கு தலைதூக்கியிருக்கின்றது. இது, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல.
Spread the love