வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் அன்புக்குரியவர்களின் உண்மை நிலைமை கண்டறிவதற்கான பயணமாக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களைத் தாங்கி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி மற்றும் இழப்பீடு வழங்குவதுடன், இவ்வாறான காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வந்து, பொதுமக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்புமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கான மகஜர் ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.