ஆறாவது அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா அறிவித்ததனைத் தொடர்ந்து கொரிய பிராந்தியத்தில் பரபரப்பான ஒரு சூழல் நிலவுதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. வட கொரிய பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதை கண்டறிந்த நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள் கண்டறிந்த சில மணி நேரத்தில், தங்களின் ஆறாவது அணுஆயுத சோதனை வெற்றியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
மேலும் அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாகவும் வட கொரியா அறிவித்துள்ளது.
வட கொரியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவித்த அமெரிக்க நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள், இதனால் ஒரு அணுஆயுத சோதனை நடந்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை வட கொரியாவின் மற்றொரு அணுஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து தென்கொரியா உடனடியாக தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளது.
புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் ஆய்வு செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள சில மணி நேரங்களில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.