தேர்தல் போட்டிக்கான வேட்பு மனுவில் தன் மீதான கொலை வழக்கு பற்றி தெரிவிக்காத பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை அனுப்பி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 2006 மற்றும் 2012-ல் சட்ட மேலவைத் தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில், தன் மீதான கொலை வழக்கு பற்றிய விவரங்களை குறிப்பிடவில்லை.
மேலும் இந்த வழக்கில் கைதாவதை தவிர்ப்பதற்காக, முதல்வர் பதவியில் இருந்த அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே, நிதிஷ் குமார் மீதான வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்ற தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் எம்எல்சி பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு ஆணை அனுப்புமாறு நேற்று உத்தரவிட்டது.