இலங்கை பிரதான செய்திகள்

எம்மால் 08-09-2017 முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்:-

எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக இன்று
(14-09-2017) இடம்பெற்ற எமது பொதுச்சபைக் கூட்டத்தின் பின்னர் போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவது என பொதுச்சபை தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
08.09.2017முதல் நடைபெற்றுவரும் போராட்டம் தொடர்பில் எமது பொதுச் சபையின் நிலைப்பாடு
எமது பொதுச்சபையானது 14.09.2017 இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்க்கமாக ஆராய்ந்து, எமது நிலைப்பாடுகளையும் விளக்கங்களையும் தெரியப்படுத்துகிறோம்.
13.09.2017இல் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகத்தினரது நடவடிக்கைகள் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.
புகாரிட்டவர்கள் என்ற அடிப்படையில் நாம் அரசியற்கட்சிசார்ந்த தொழிற்சங்கத்துடன் இணைந்து கலந்து கொள்ளமாட்டோம் என்பதனை  துணைவேந்தர் அவர்களுக்கு பதில் துணைவேந்தர் ஊடாக கடித மூலம் முதற்தினமே(12.09.2017) தெரியப்படுத்தியிருந்தோம். இதற்கு துணைவேந்தரின் ஒப்புதலும் கிடைத்ததாக பதில் துணைவேந்தர் 12.09.2017இல் எமது செயற்குழு உறுப்பினர்களுக்கு நேரில் தெரியப்படுத்தியிருந்தார்.
இருப்பினும் மேற்படி சந்திப்பில் புகாரெழுப்பி போரடிவரும் பல்கலைகழக ஊழியர் சங்கமாகிய எமது நிலைப்பாட்டை முதலில் கேட்டறியாத நிலையில் பல்கலைக் கழகத்தின் அரசியற்கட்சிசார்ந்த தரப்பினரை முன்னிலைப்படுத்தி ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அத்துடன் எம்மால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பதிவாளரே அச்சந்திப்பினை முன்னின்று நடத்தினார்.
இதனால் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளாது நாம் தவிர்த்திருந்தோம். பின்னர் பீடாதிபதிகளின் முயற்சியினால் தங்களுடனான எமது சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அதில் கலந்துகொண்ட பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு.
பேராசிரியர் இ.விக்னேஸ்வரன்  – துணைவேந்தர்
பேராசிரியர் J.P ஜெயதேவன் – விஞ்ஞான பீடாதிபதி
பேராசிரியர் T.வேல்நம்பி – முகாமைத்துவ பீடாதிபதி
பேராசிரியர் A. அற்புதராஜா – பொறியியல் பீடாதிபதி
பேராசிரியர் திருமதி து. மிகுந்தன் – விவசாய பீடாதிபதி
கலாநிதி செ. கண்ணதாசன் – பதில் மருத்துவ பீடாதிபதி
கலாநிதி ஆறு. திருமுருகன் – பேரவை உறுப்பினர்
வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன் – பேரவை உறுப்பினர்
செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் – பேரவை உறுப்பினர்
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனது முறைப்பாட்டை விலக்கிக் கொண்டுள்ளார் என தவறான தகவலை சந்திப்பில் முன்வைத்தனர். இது தவறென பின்னரே நாம் கண்டறிந்தோம். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் இடமாற்றத்தின் பொருட்டு வேறு பல்கலைக் கழகத்திற்கு விடுவிக்கப்பட்டமையை நியாயப்படுத்தியதும் வேதனைக்குரியது. விடுவித்தல் கடிதத்தை விலக்கிக்கொள்ளவும் துணைவேந்தர் சம்மதிக்கவில்லை.
மேற்படி சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், நாம் சுட்டிக்காட்டியவைகள் அனைத்தும் 30.09.2017இல்; இடம்பெறும் பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி தந்தனர். ஆயினும் இவ் உறுதிமொழியை எழுத்து மூலம் கேட்டும் தரவில்லை.
இதன் அடிப்படையில் எமது பொதுச்சபை பின்வரும் விடயங்களை தங்களுக்கு தொகுத்து வழங்குகிறது.
1. விருந்தினர் விடுதிகளில் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக உத்தியோகத்தர்களை வருடக்கணக்காக தங்க அனுமதித்தமை. இவர்கள் விருந்தினர் விடுதிகளை ஆக்கிரமித்திருந்ததன் காரணமாக வருகை விரிவுரையாளர்கள் தனியார் விடுதிகளில் பல்கலைக்கழக நிதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.
2. பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் வருடக்கணக்காக தங்கிய காலத்திற்குரிய வாடகைப் பணத்தினை செலுத்தாமை.
3. ஆகஸ்ட் 31ஆம் திகதி பெண் ஊழியர் பதிவாளரிடம் நேரில் முறைப்பாடு செய்த நிலையில், அதன் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவரை அவர் விரும்பியவாறு வேறு பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்ல எமது பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக விடுவித்தமை.
4. குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவருக்கு சம்பளமற்ற விடுப்பு வழங்கப்படுவதை தவிர்க்குமுகமாக, மாதாந்த விடுப்பு விபரங்களை பல மாதங்களாக நிதிக்கிளையிடமிருந்து பெற்றுக்கொள்ளாமை. (அவர் திங்கட்கிழமைகளில் பணிக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது)
5. ஆண்கள் மட்டுமே நிரந்தரமாக தங்கும் விருந்தினர் விடுதியில் தனியே ஒரு பெண்ணை கடமையாற்ற பணித்தமை. (தெரிவுக்குழுவானது இவரை பெண்கள் விடுதிக்கெனவே தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது)
6. அப்பெண் முறைப்பாடு செய்த நிலையிலும் தொடர்ந்தும் அப் பெண்ணை அங்கு பணியாற்றுமாறு பணித்தமை.
7. சம்மந்தப்பட்ட பெண் தனது முறைப்பாட்டை விலக்கிக் கொண்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலை திட்டமிட்டு பரப்பி வருகின்றமை.
8. பெண்ணின் முறைப்பாடு தொடர்பான கோவையானது தொடர்ந்தும் பதிவாளரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளமை.
9. விசாரணைக் குழுவில் உள்ளோர் என பிரபல செயற்பாட்டாளர்களின் பெயர்களை அவர்களின் ஒப்புதல் இன்றியே கசியவிட்டமை மூலம் எங்களை ஏமாற்ற முனைந்தமை.
10. கடந்த காலங்களில் ஊழியர்களின் சம்பளக் கணிப்பீட்டில் ஏற்பட்ட மாபெரும் தவறுகளுக்கு தனது வினைத்திறனின்மையால் (ஒரு சில தவறுகள் எமது முயற்சியின் காரணமாக திருத்தப்பட்டபோது சிலர் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களும், சிலர் ஒரு இலட்சம் ரூபா வரையிலும் நிலுவைப்பணம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது) காரணமாக இருந்தமை.
11. 01.01.2014இல் சம்பளக் கணிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகளை திருத்த துணைவேந்தர், பீடாதிபதிகளால் முன்மொழிவு செய்யப்பட்ட பேராசிரியரை ஏற்றுக்கொள்ளாமை.
12. எமது கடும் முயற்சியின் பேரில் இதற்கென அண்மையில் நியமிக்கப்பட்டவருக்கு ஒத்துழைப்பை வழங்காததோடு, உரிய இடவசதிகளையும் வழங்காமை. அவர் மீது வேறு பணிகளை சுமத்தி இப் பணிகளை திட்டமிட்டு தாமதப்படுத்துகின்றமை.
13. கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற காட்டு மரங்களின் களவுகள் தொடர்பான (13.09.2017 வரை 34 மரங்கள்) உண்மைகளை பேரவைக்கு அறிவிக்காமல் மூடி மறைத்துவருவதோடு, குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்து வருகின்றமை.
14. 2017 ஜனவரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் பட்டச்சான்றிதழ்களில் உள்வாரி மாணவர்களுக்கு, அன்றைய துணைவேந்தரும் அன்றைய பதில் பதிவாளரும் கையெழுத்திட, வெளிவாரி மாணவர்களுக்கு அத்தருணம் கிழக்குப் பல்கலையில் பதிவாளராகக் கடமைபுரிந்த இன்றைய பதிவாளர் கையெழுத்திட்டமையானது இவரின் வினைத்திறனின்மைக்குச் சான்றாகும்.
15. இரண்டு (02) வருடங்களின் முன் விளம்பரப்படுத்தப்பட்டு தெரிவுகள் இடம்பெற்ற ஆய்வுகூட உதவியாளர் பதவிநிலைகளுக்கு, அப்பழைய ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பயன்படுத்தி (காலாவதியாகி 1¾  வருடங்கள் கழிந்த நிலையில்) ஆட்சேர்ப்பினை மேற்கொள்ள முயற்சி செய்தமை. இது தொடர்பான பேரவைக்கான மனுவில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை
16. தனது வியாக்கியானத்தின் பிரகாரம், பல்கலைக்கழக பேரவையால் அங்கீகரிக்கப்பட்டு, அடுத்த பேரவையில் உறுதிப்படுத்தப்பட்ட நியமனங்களில் ஒருதொகுதி நியமனங்களைத் தடுத்துவைத்தமை. இவ்வாறு தடுத்து வைத்தமை பற்றி பல்கலைக்கழகப் பேரவைக்கு அறியத்தராமை.
17. பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு எம்மால் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளுக்கு பதில் கூற அல்லது பொறுப்பேற்க மறுக்கின்றமை.
18. 2015க்கு முற்பட்ட காலங்களில் பலமுறைகேடான அரசியல் நியமனங்களிற்குக் காரணமானவரும், பல நியாயமான நியமனங்களை தடுத்து வைத்தவரும் பதிவாளரேயாவார்
19. பதிவாளர் ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றாமல், அவரின் பணிகளின் பெரும் பகுதியை பேரவை உறுப்பினரொருவர், ஓய்வுபெற்ற நிதியாளர், பிரதிப் பதிவாளர், பல்கலைக்கழக சட்டத்துறையினர் ஆற்றிவரும் நிலையில், தனது கடமை நேரத்தில் அரசியற் கட்சிசார்ந்த சங்க உறுப்பினர்களுடன் பல்கலைக் கழகத்திற்குள் மந்திராலோசனையில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை.
இவைகள் பதிவாளர் தொடர்பான எமது ஒருதொகுதி முறைப்பாடுகள்.  எமது பிரதான கோரிக்கையான பதிவாளர் இடைநிறுத்தப்பட வேண்டும் எனும் நிலையை தீர்க்கமாக வெளிப்படுத்துகின்றோம். எமது கோரிக்கைகள் புதியவை அல்ல. 27.06.2017 எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தின் போது துணைவேந்தரால் எமது பொதுச்சபைக்கு வழங்கப்பட்ட 01.07.2017 முதல் கல்விசாரா தாபனக்கிளையின் மேற்பார்வையினை பிரதிப்பதிவாளரிடம் கையளிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியானது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பதிவாளருக்கெதிரான முறைப்பாடுகள் இவைகளைவிட மேலதிகமாக எம்மிடம் உள்ளதை சுட்டிக்காட்டியபோது கலந்துரையாடலில் பங்குபற்றியோர் பதிவாளரர் பல தவறுகளை விட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொண்டதற்கிணங்கவும், கலந்துரையாடலில் பங்குபற்றியோர் வழங்கிய உறுதிமொழிகளுக்கிணங்கவும்  அவர்களிற்கு மதிப்பளித்தும் பல்கலைக்கழகம் சுமுகமாக இயங்க வேண்டியும், நாம் இன்று (14.09.2017) எமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்று தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் 30.09.2017 நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் எமக்கு ஆக்கபூர்வமான முடிவைத் வேண்டிநிற்கின்றோம். மேற்படி பேரவைக் கூட்டத்தில் எமக்கு காத்திரமான முடிவு கிடைக்கப்பெறாதவிடத்து நாம் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னறிவித்தலையும் இக்கடிதத்தின் மூலம் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link