குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடக்கும் அதேவேளை காப்புறுதி நிறுவனங்களின் ஒன்று கூடல் நடைபெற்ற விடயத்தை மிக கேவலமான நடவடிக்கையாக பார்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் , நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. அதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற இடத்திற்கு எதிர் திசையில் காப்புறுதிநிறுவனங்களின் ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது.
அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை எதிர்ப்புறமாக காப்புறுதி நிறுவனங்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வுகள் மிக அமைதியான முறையில் , நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை இலங்கை தேசிய கீதத்தை அதிக சத்தமாக ஒன்று கூடலை நிகழ்த்தியவர்கள் ஒலிக்க விட்டனர். அதனை நாம் கேவலமான நடவடிக்கையாக தான் பார்க்கின்றோம்.
அதில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் கலந்து கொண்டுள்ளமை மிக கேவலமான செயலாகும். இவ்வாறான செயல்களின் மூலம் எமது மக்களின் உணர்வுகளை நசுக்கி விடலாம், மறக்கடித்து விடலாம் என நீங்க நினைத்தால் அது முட்டாள் தனம் என மேலும் தெரிவித்தார்.