குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகர சபையினால் சட்டவிதிமுறைகளை மீறி பல இலட்சம் ரூபா கையாடப்படுகின்றது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைக்புக்குழுக் கூட்டத்தில் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இக் கூட்டத்தில் யாழ்.நல்லூர் பகுதியில் உள்ள திலீபனின் நினைவு தூபி புரணைப்பது தொடர்பில் பேசப்பட்டது. குறித்த புணரமைப்பு உடனடியாக ஆரம்பிக்க முடியாது என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன் போது கோபமடைந்த வடமாகாண சபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் நல்லூர் பின் பகுதியில் உள்ள திலீபனின் நினைவு தூபிக்கு அருகில் உள்ள ஜஸ்கிறீம் விற்பனை நிலையமானது வாகன தரிப்பிடம் இல்லாமலே அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் பயன்படுத்துவதற்காக வாகன தரிப்பிடம் ஒன்று எந்தவிதமான அனுமதிகளும் பெற்றுக்கொள்ளப்படாமல் சட்டத்திற்கு முரனான வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக பல இலட்சம் ரூபா பணமும் பெறப்படுகின்றது என்று மாநகர சபை ஆணையாளர் முன்பாகவே குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இருப்பினும் அக் குற்றச்சாட்டினை மாநகர ஆணையாளர் அவ்விடத்தில் வைத்தே மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.