பலாத்காரமாக காணமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது சம்பந்தமாக இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையானது எதிர்காலத்திற்கு மட்டுமே செல்லுபடியானது என்றும் அது இறந்த காலத்திற்கானதல்ல என்றும் அது இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் பின்னரே செல்லுபடியாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளமை அதிர்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.
பிரதமரின் கருத்து தொடர்பில் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா் அமைப்பின் இணைப்பாளர் கலாரஞ்சனி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்த காலத்திலும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், அதாவது 2009 க்கு முன்னரும், 2009 மற்றும் அதற்கு பின்னராகவும் ஓரிரு ஆண்டுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களே இலங்கையில் உள்ளனா்.
எனவே அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியே தாம் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எந்தக் காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டாகளோ அந்தக் காலத்திற்கு இந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்றால் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் நிலை என்ன எனவும் அவா்களுக்கான நீதி எப்படி கிடைக்கும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அது கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கானதாகதான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு, பிரதமரின் இக் கருத்து தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதுவரை வாய்திறக்காது இருக்கின்றமையும் தமக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவும் கலாரஞ்சனி குறிப்பிட்டார்.