வடக்கு – கிழக்கை இணைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார்.
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்களிப்பு இடம்பெற்ற போது தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்திருந்தனர். எனினும் அதில் வெற்றியை பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் அதேபோன்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடாது எனவும் தேசிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடும் எனவும் தொவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடு இல்லை எனவும் இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தேசத்தின் கீழ் ஒன்றுபட்டு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்