இந்தியாவின் கேரள எல்லையை அண்டிய தமிழக காட்டுப் பகுதிக்குள் மாவோயிஸ்ட்கள் ஊடுருவலாம் என்ற தகவலால், இருமாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையோரப் பகுதியான அட்டப்பாடி காட்டுப் பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளரும், அந்த இயக்கத்தின் தளபதியுமான காளிதாஸ் என்கிற சேகர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆயுதங்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, கேரளாவின் வயநாடு, பாலக்காடு, மலப்புரம் பகுதிகளில் பதுங்கி உள்ள மாவோயிஸ்ட்கள், தமிழக பகுதிக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளதனால், மேட்டுப்பாளையம் காட்டுப் பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையோரம் அச்சுறுத்தல் உள்ள 12 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, ஆயுதங்களுடன் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், அட்டப்பாடி காட்டுப் பகுதியை அண்டிய மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு, மேலதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், அதிரடிப்படை காவல்படை, அணையைச் சுற்றி உள்ள அடர்ந்த காடுகளுக்குள் நுழைந்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.