நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு, அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானது என புதிய அரசியல் சாசனத்திற்கான தேசிய அமைப்பின் உறுப்பினரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான காமினி வியான்கொட தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புத் திட்டத்தை 17 வருடங்களில் அமுல்படுத்தியது. அன்று, அதனை எதிர்த்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அந்த அரசியல் அமைப்புத்திடத்தினை 23 வருடங்கள் அமுல்படுத்தியது. இன்னும் அதனையே அமுல்படுத்த சிலர் கேட்கின்றனர். இவ்வாறு இந்த அரசியல் அமைப்பையே அமுல்படுத்துவதற்கு அவர்கள் கேட்பதற்கு இந்த அரசியல் அமைப்பின் மூலம் கிடைக்கும் அதிகார ருசியும் இன வாதமுமே காரணம் எனவும் தெரிவித்தார்.
உலகில் அதிகாரத்தை பகிர்ந்துகொண்ட நாடுகள், பிரிவினையை தடுத்துள்ளதாகவும் அதிகாரத்தைச் தம்வசமே வைத்துக் கொண்டிருந்த நாடுகள், பிரிந்துச் சென்றுள்ளதையுமே காணமுடிகிறது எனவும் அவர் தெரிவித்தார். எனவே, நாட்டில் புதிதாக அமையும் அரசியல் யாப்பு, 30 வருட கசப்பான கடந்த காலத்தை மீண்டும் உருவாக்காத ஒன்றாக இருக்கவேண்டுமெனவும் அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்ப வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க இந்தமுறைதான் முதல் முதலாக புதிய அரசியல் யாப்புக்கு பரந்த அளவில் மக்கள் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஆகவே, அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய, நீண்ட காலத்துக்கு பொருத்தமான ஒரு யாப்பை உருவாக்குவதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.