பெண்கள் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டிருந்த சவூதி அரேபியாவில் தற்போது அந்த நடைமுறை விலக்கப்பட்டு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் வழங்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளார்.
பழமைவாத நடைமுறைகளை கொண்டுள்ள சவூதி அரேபியா மன்னராட்சியின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை கொண்டுள்ளது. இந்நாட்டில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. கார் ஓட்டுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, மைதானத்தில் சில விளையாட்டுக்களை நேரில் பார்ப்பது என பல உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.
சமீப காலமாக சவூதி அரசு தனது நிலைப்பாட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டின் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், சர்வதேச பெண்கள் தினம் சமீபத்தில் அரண்மனையில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதியளிக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னரின் இந்த முடிவுக்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சவூதி மக்கள் தொகையில் ஆண்களுக்கு, நிகராக பெண்களும் இடம்பிடித்து உள்ள இந்த நேரத்தில் இது போன்ற முக்கிய முடிவுகள் அவசியம் என மன்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.