குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஒய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னய்யா நேற்றைய தினம் 26ம் திகதி தனது 55ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். 55 வயதுடன் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டியது வழமையான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினால் பதவிக் காலத்தை நீடிக்க முடியும், எனினும் ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே டிரவிஸ் சின்னய்யாவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இலங்கையின் கடற்படைத் தளபதியாக டிரவிஸ் சின்னய்யா நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டில் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் என டிரவிஸ் சின்னய்யா வரலாற்றில் இடம்பிடிக்க சாத்தியமுண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. டிரவிஸ் சின்னய்யா ஒய்வு பெற்றுக்கொண்டால் ரியர் அட்மிரால் சிரிமெவன் ரணசிங்க, சேவை மூப்பு அடிப்படையில் கடற்படைத் தளபதி பதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளார்.
பெரும்பாலும் சிரிமெவன் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவரது ஒய்வு பெறும் காலமும் வெகு தொலைவில் இல்லை எனவும் அவருக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதி 55 வயது பூர்த்தியாகின்றது எனவும் தெரிவிக்கப்படுகிறது.