குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லிபியாவின் வடபகுதி குறித்து தெரிவித்த கருத்திற்காக வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனை பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பல உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவின்; வர்த்தக சமூகத்தினர் லிபியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றனர் ஆனால் லிபியாவின் வடபகுதியிலிருந்து உடல்களை அகற்றவேண்டியுள்ளது என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே சர்ச்சை மூண்டுள்ளதுடன் அவரை வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் பேரழிவு ஓன்று நிகழ்ந்த பின்னர் வெளிநாடொன்றின் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தால் அது எவ்வாறு அர்த்தப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் சரா வோலஸ்டன் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பிட்ட கூட்டத்தில் உரையாற்றும் போது தனது உரை பதிவு செய்யப்படுகின்றது என்பது அவரிற்கு தெரிந்திருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனது கருத்தின் பின்னர் உருவாகியுள்ள சர்ச்சைகளிற்கு தீர்வை காண்பதற்காக பல டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள பொறிஸ்ஜோன்சன் தான் ஐஎஸ் அமைப்பினரின் உடல்கள் குறித்தே அவ்வாறு தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.