குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுவதற்கு ஸ்பெய்ன் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஸ்பெய்னின் அரசியல் சாசன பேரவை இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. திங்கட்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டால் சுதந்திரப் பிரகடனம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்வதானது அரசியல் சாசனத்தை மீறும் வகையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளின் போது சுதந்திரப் பிரகடனம் குறித்து அறிவிக்கப்படும் என கட்டலோனிய ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) தெரிவித்திருந்தார். இதேவேளை, கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய வகையில் சர்வதேச சட்டங்களில் சந்தர்ப்பம் குறைவாக காணப்படுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் சுதந்திரப் பிரகடனம் செய்வது குறித்து காணப்படும் நியதிகளுக்கு அமைய கடடலோனியா சவால்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.