உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை கவனிப்பதற்காக, சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகின்ற நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதனால் 15 நாட்கள் பரோலில் செல்ல சசிகலா சார்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவுடன் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் புதிய ஆவணங்களுடன் சசிகலா மீண்டும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் சசிகலாவுக்கு பரோல் தருவது தொடர்பாக சென்னை காவல்துறையினர் அளித்த நிபந்தனைகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நிபந்தனைகளை சசிகலா ஏற்றதையடுத்து அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்குவதாக சிறைத்துறை அறிவித்துள்ளது. 15 நாட்கள் கேட்கப்பட்ட நிலையில், 5 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கி உள்ளனர்.