Home இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் தென்னிலங்கையின் அரசியல் காய்களா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

தமிழ் அரசியல் கைதிகள் தென்னிலங்கையின் அரசியல் காய்களா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin

பல தசாப்தங்களாக நீளும் பிரச்சினையாக, தமிழ் அரசியல் கைதிகளின் சிறைவாசம் அமைந்துவிட்டது. ஆட்சிகள் மாறினாலும், ஆட்கள் மாறினாலும் இவர்களின் துன்பமும், தமிழர்களின் துர்பாக்கியமாக தொடர்கிறது.  இந்த நிலையிலேயே  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பூரண கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.  தமிழ் மக்களின் துயர் சூழ்வாழ்வில் இருந்து விடுபடுவதற்கான போராட்டங்கள் தொடர்கின்றன. அந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக குளோபல் தமிழ் செய்திகளில் இப் பதிவு வெளியிடப்படுகிறது.  
-ஆசிரியர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்ற கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் இலங்கை அரசில் அமைச்சராக பதவி வகித்தார். இவரைப் போன்றவர்கள் இன்றைய அரசின் காலத்திலும் உல்லாசமாக வாழ்ந்து உலவிக்  கொண்டிருக்க அப்பாவி தமிழ் இளைஞர்களை மாத்திரம் இந்த நல்லாட்சி அரசும் சிறையில் வைத்து துன்புறுத்திக் கொண்டிருப்பது ஏன்?

மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் மனித உரிமைகளை நிலை நிறுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்த இன்றைய ஆட்சியாளர்களின் பங்காளிகள் பலரும் கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திற்கும் இன்றைய ஆட்சிக்கும் இடையிலும் எந்த வேறுபாடும் இல்லை.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்தவர் ஜெயகலா.  இவர் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட தன் பிள்ளையின் புகைப்படத்தை ஏந்தியபடி கண்ணீர் சிந்துகிறார். கைது செய்யப்பட்ட மகன் பூசா சிறைச்சாலையில் உயிருடன் இருக்கும் புகைப்படத்தை சாட்சியமாக்கி இந்த தாய் போராடுகிறாள். இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த தனது பிள்ளை எங்கே? என்று கேள்வி எழுப்பும் இந்த தாயிற்கு இலங்கை அரசு பதில் அளிக்க வேண்டும். இப்படி எத்தனை பிள்ளைகளுக்காக எத்தனை தாய்மார்கள் கண்ணீர் சிந்துகின்றனர்?

“மைத்திரி மாமா எங்கள் தந்தையை விடுங்கள். அவர் என்னை பள்ளிக்கூடம் கூட்டிச் செல்ல வேண்டும்…” இப்படி ஒரு பதாகையை ஏந்திய குழந்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வந்தபோது குரல் எழுப்பியதை எவரும் மறந்திரார். இப்படி எத்தனையோ பதாகைகளை ஏந்தியபடி எத்தனையோ குழந்தைகள் தெருவில் நின்று இலங்கை ஜனாதிபதியையும் உலகத்தையும் நோக்கிக் குரல் எழுப்பிவிட்டார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இலங்கை அரசு நடந்து கொள்வது மிகவும் மனிதாபிமானற்ற செயல் என்பதுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். இலங்கை அரசின் பார்வையில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை புனர்வாழ்வு என்ற சித்திரவதை முகாமில் அடைத்து விடுதலை செய்தது. அப்படியிருக்க விடுதலைப் புலிகளுக்கு சிறு உதவிகளை புரிந்தவர்களையும் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்ட அப்பாவிகளையும் இன்னமும் விடுவிக்காமல் இருப்பது ஏன்?

தமிழ் அரசியல் கைதிகள் பல்வேறு முன்னுதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தடவைகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு காலவரையறையற்ற ரீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்தனர். இதற்கு ஆதரவாக வடக்கு கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமது உடல் நிலை மோசமான நிலையை அடைந்தபோதும் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்று ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசு, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியும் புனர்வாழ்வு அளித்தும் விடுவதாகவும் கூறியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆறு மாதம், ஒரு வருடம், ஒன்றரை வருடம் சிறை வழங்கப்பட்டது. ஆனால் மைத்திரி – ரணில் அரசு, வாக்குறுதி அளித்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை. அந்த இளைஞர்கள் சிறையில் வாட அவர்களை நினைத்து தமிழ் மக்களின் வீடுகள் தோறும் தாய்மாரும் மனைவியரும் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கின்றனர். அப்பாவை சிறையில் விட்டு வாழும் குழந்தைகளை எங்கள் நிலம் கொண்டிருக்கிறது. ஒன ஒடுக்குமுறைக்கு ஓரினம் எதிராக ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்காக, கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்ட வடக்கு கிழக்கு அப்பாவி இளைஞர்கள் அவர்கள்.

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது என்றும் அதனை நீக்க எமது  அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மைத்திரிபால அரசின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறினார். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பெயர் மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. அத்துடன் அந்தக் கொடிய சட்டத்தின் ஊடாக சந்திரிக்கா, மகிந்த ராஜபக்ச அரசுகளால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்காமல் உள்ளது இன்றைய அரசு.

அரசியல் கைதிகளை விடுவித்தால், புலிகளை விடுவிக்கிறோம் என்று அரசியல் செய்கிறது மகிந்த தரப்பு. புலிப் பயங்கரவாதிகளை விடுக்க மாட்டோம், சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என்கிறது இன்றைய அரசு. தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசை கேட்கிறது. எல்லோருமே அவரவர் அரசியலுக்காகவே தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை அணுகுகிறார்களா? அப்பாவிகளின் விடுதலையை அரசியலின்றி மனிதாபிமானத்துடன் மனித உரிமை பார்வையுடன் அணுகுங்கள்.

தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் காய்களாகப் பாவித்து அவர்களை தொடர்ந்து சிறையில் அடைக்காமல், அவர்களின் குடும்பங்களை தொடர்ந்து ஏமாற்றாமல் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம். வடக்கு கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படும் பூரண கதவடைப்பு போராட்டத்தின் கோரிக்கைக்கு இலங்கை அரசு செவிசாய்க்க வேண்டும். தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இலங்கை அரசு செவிசாய்க்க வேண்டும். இலங்கை அரசின் மனித உரிமைக்குப் புறம்பான இந்த செயலை உலகம் கண்டிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் உடனே விடுதலை பெறவேண்டும் என்பதற்கான போராட்டத்தை முழு அளவில்  இன்றைய நாளில் முன்னெடுப்போம்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More