குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதித்துறையில் கடமையாற்றி வருவோர் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆதாரங்களை சமர்ப்பிக்கப் போவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீதிமன்றை அவமரியாதை செய்ததாக ரஞ்சன் ராமநாயக்க மீது உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணைகளுக்காக எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்டம் மற்றும் நீதித்துறையில் பணியாற்றுவோர் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்துக்களுக்கு நிரூபிக்கும் சான்றுகளை உச்ச நீதிமன்றில் சமர்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் சார்பிலேயே தாம் சட்டத்தரணிகளை விமர்சனம் செய்ததாகவும் சட்டத்தரணிகள் அனைவரையும் தாம் இழிவுபடுத்தவில்லை எனவும், ஒரு சிலர் மோசமாக நடந்து கொள்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் உள்ளிட்ட ஏனைய அநேக துறைகளில் சேவை வழங்குவதற்காக பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும், சட்டத்தரணிகள் அவ்வாறான எவ்வித பற்றுச் சீட்டுக்களையும் வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.