உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்கைதிகளது உடல்நிலை மீண்டும் இரண்டாவது தடவையாக மோசமடைந்ததனையடுத்து அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடல்நிலை மோசமடைந்ததையடுத்தே சிறைச்சாலை அதிகாரிகள் பலாத்காரமாக மீண்டும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிந்திய தகவல்களின் பிரகாரம் அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையின் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள அவர்களது உடல்நிலை அச்சந்தருவதாக அமைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுள் மதியரசன் சுலக்சன் தானாக முன்வந்து மீண்டும் சிறை திரும்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.ஏனைய இருவரும் சில நாட்கள் வைத்தியசாலையினில் சிகிச்சை பெற்றுஅ திரும்பி போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 3 அரசியல் கைதிகளதும் போராட்டம் இன்றுடன் 20வது நாளை தாண்டியுள்ளது.கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் முன்னெடுக்கும் 11வது தடவையான உணவு தவிர்ப்பு போராட்டமிதுவாகும்.
இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையின் போது தமது கோரிக்கை தொடர்பில் முடிவு கிடைக்குமென்ற நம்பிக்கை அவர்களிடமிருந்ததாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உண்ணாவிரதம் நடப்பது தொடர்பில் ஏதும் தெரியாதது போன்று மைத்திரி பேச அழைப்புவிடுத்தமை கண்துடைப்பென அவர்கள் கவலை வெளியிட்டுமுள்ளனர்.
மதியத்தின் பின்னர் உடல்நிலை கடுமையாக மோசமடைய தொடங்கியதையடுத்தே வைத்தியசாலைக்கு அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.