குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம்,கலாச்சாரம் வெள்ளையர் காலத்தில் இருந்ததை விட இன்றைக்கு அபாய நிலையில் இருக்கிறது என வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து சைவத்தையும்,தமிழையும் காப்பதற்காக எமது முன்னோர்களால் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இன்று நாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறேம். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் வட பகுதியில் எமது கலாச்சாரமும்,அடையாளங்களும் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதைவிட மேலாக இன்று வடபகுதியில் எமது கலாச்சார அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலில் இப்படியான ஒரு பாடசாலை நூற்றாண்டை காண்பது வரவேற்கத்தக்கது.
இந்தப்பாடசாலை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதே நோக்கத்திற்காக இங்கிருக்கின்ற எல்லாப்பாடசாலைகளும் எமது அடையாளங்களையும்,கலாச்சாரத்தினையும் காப்பாற்ற பாடுபடவேண்டும். எங்களுடைய அடையாளங்கள்,கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்ற நிலை,எங்களுடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பொருளாதாரத்தில் நாங்கள் ஓரம் கட்டப்படுகின்ற நிலை, துப்பாக்கி முனையில் எங்களை அடக்கி வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற நிலையில் எங்களை அடக்கி வைத்துக்கொண்டு இதை ஒரு சிங்கள பௌத்த பூமியாக மாற்றுகின்ற நிலையிலிருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் நவீனங்கள் என்று கூறிக்கொண்டு புதிய விடயங்களை உள்வாங்குவது தவறானதல்ல. ஆனால் எங்களுடைய பாரம்பரிய பண்புகளை மறந்து அதனை அழித்து விடக்கூடாது. அந்த வகையில் ஒவ்வொரு பாடசாலைகளும் எங்களுடைய கலாச்சாரங்களை,பண்பாடுகளை பாதுகாக்கின்ற பாடசாலைகளாக மாற வேண்டும். என்றார்
இன்றைய நூற்றாண்டு விழா நிகழ்வில் பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்று தற்போது கல்விப்புலத்தில் உயர்நிலையை அடைந்துள்ள பழைய மாணவர்கள் பிரதம விருந்தினரால் பதக்கங்கள் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டதுடன், பாடசாலையின் வரலாற்றை எடுத்தியம்பும் வரம் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்கள்,அயற்பாடசாலை அதிபர்கள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.