192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில்மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு யாழ்.மேல் நீதிமன்றம் முற்றாக தடைவிதித்துள்ளது. ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாட்டு முறைமைகளை தடைசெய்ய கோரி இந்து மகா சபையினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக யாழ்,மேல் மேல்நீதிமன்றில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்தனர்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த 2016 ஆம்ஆண்டு ஏப்பிரல் மாதம் 01 திகதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் இதுவரை கால பகுதியில் மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது ,
கவுனாவத்தை நரசிம்மர் ஆலய மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்வி நடாத்தப்படுவது , இறைச்சி க்கடை சட்டத்தின் பிரகாரமும் , மதவுரிமை சட்டத்தின் பிரகாரமும் , மிருக பலி சட்டத்தின் பிரகாரமும் அத்து மீறிய செயற்பாடு என மனுதார்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதேவேளை கடந்த 300 வருடங்களுக்கு மேலாக, மரபாக இந்த வழபாட்டு முறை நடைபெற்று வருகின்றது. இதனை தடை செய்ய கோருவது , எமது மத வழிபாட்டு உரிமையில் தலையீடு செய்யும் செயற்பாடு என எதிர் தரப்பு மன்றில் வாதங்களை முன்வைத்து.
அதன் போது நீதிபதி தெரிவிக்கையில் ,
300 ஆண்டுகளாக பாரம்பரியமாக மிருக பலியிடல் வழிபாட்டு முறைமை இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் , அதற்கான அனுமதியினை இறைச்சிக்கடை சட்டத்தின் கீழேயே பெறப்படுகின்றது. இந்து ஆலயங்களில் பூஜை வழிபாட்டுக்கு இறைசிக்கடை சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டு உள்ளது.
இதற்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது அதிகார துஸ்பிரயோகம் ஆகும். ஏனெனில் இந்து ஆலயத்தில் 5ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் பேர் வரையில் கூடும் இடத்தில் 200 தொடக்கம் 500 வரையிலான ஆடுகள் மற்றும் கோழிகளை வெட்டி சாய்த்து பலியிடுதல் மிருக வதை செயற்பாடு அத்துடன் மிருகங்களை சித்திரவதை செய்யும் செயற்பாடாகும். அதற்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி அளித்துள்ளது.
சமய விழாக்களுக்கு அனுமதி வழங்கும் போது , இறைச்சிக்கடை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்க கூடாது. சமய விழாக்கள் சட்டத்தின் கீழேயே அனுமதி வழங்க வேண்டும்.
வீடுகளில் கொண்டாட்டங்களின் போது விருந்துக்காக ஒரு சில விலங்குகளை வெட்டுவதனை வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியும். அதற்காக நல்லூர் , தலதா மாளிகை கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயங்களில் சமய வழிபாட்டு முறை என மிருக பலியிடலை மேற்கொள்ள அனுமதி கோரினால் அனுமதி வழங்க முடியுமா ?
எனவே யாழ்.மேல் நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட இந்து ஆலயங்களில் பூஜைகளின் போதோ வேறு சந்தர்ப்பங்களிலையோ மிருகங்களை பலியிட கூடாது என தடை விதிக்கப்படுகின்றது. அதற்கு எந்த உள்ளூராட்சி சபைகளும் , நீதவான் நீதிமன்றங்களும் அனுமதி வழங்க கூடாது. அதனையும் மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முடியும். முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக குற்றமிழைத்தவர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட வேண்டும். என தீர்ப்பளித்தார்.
அத்துடன் இந்த தடையுத்தரவை உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராக முதலமைச்சர் உள்ளமையினால் , முதலமைச்சருக்கும் , வடமாகாண சுகாதார அமைச்சருக்கும் ,மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி பணிப்புரை விடுத்தார்.
Spread the love