குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரியாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு புலனாய்வு உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரே இன்று (03) புலனாய்வு துறை உத்தியோகஸ்தர்களினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டிருந்த இரண்டு புலனாய்வு உத்தியோகத்தர்களும் இன்று மாலை யாழ்ப்பாண நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தாரிகளால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 2 -அரியாலை இளைஞர் சுட்டுக்கொலை – இரண்டு புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது
Nov 3, 2017 @ 07:32
மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவர் இன்று (03) புலனாய்வு துறை உத்தியோகஸ்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டிருந்தனர். குறித்த துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன யாழ். பண்ணை வீதியில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன.
இதன்போது, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சற்று தொலைவில் இருந்து சி.சி.ரி.வி காணொளிகள் பெறப்பட்ட நிலையில், அந்த காணொளிகளின் ஊடாக துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை புரிந்தவர்கள் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியும், விசேட அதிரடிப்படை முகாமில் இருந்ததையும் ஆதாரமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் எடுத்துக்கொண்டனர். அதன்பிரகாரம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த திங்கட்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் துப்பாக்கிதாரர்கள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று மாலை யாழ்ப்பாண நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.
அரியாலை இளைஞன் கொலை – தடய பொருட்கள் யாழ். அதிரடிப்படை முகாமுக்குள் மீட்பு
Nov 1, 2017 @ 03:21
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு அவை மீட்கப்பட்டன.
கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தாரிகளால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.