தமிழ்நாட்டில் பலமாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தலைநகர் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் 3 நாள் மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் வீதிகள் ஆறுகளாக மாறியுள்ளன எனவும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழைநீரால் சூழப்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புக் குழுவினரும் படகு, பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பாடசாலைகளுக்கு கு 3-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.