குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ற வகையிலேயே புதிய அரசியல் சாசனத்தின் அதிகாரப் பகிர்வு குறித்த பரிந்துரைகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஏனைய இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தேச பரிந்துரைகளை முஸ்லிம் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதனை எதிர்த்தே 1987ம் ஆண்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு யாருக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கபடமான முறையில் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.