குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரம் சிறையில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக உணவு ஒறுப்பில் இருக்கும் அரசியல் கைதிகளையும் போராட்டத்தை இடைநிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து குழு ஒன்று நேற்றிரவு அநுராதபுரம் புறப்பட்டுள்ளது
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், நேற்றைய தினம் மாணவர்களை சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களது உணவு ஒறுப்பை இடைநிறுத்துமாறு கோரவுள்ளனர்.
இந்தக் குழுவினர் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து அரசியல் கைதிகள் விவகாரம் பற்றிப் பேச்சு நடத்தவுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்த முடிவுகள் எட்டப்பட்டன.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் 4 மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமே சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே மாணவர்களுடன் பேச்சு நடத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்ட கூடாரத்துக்குள் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவெடுக்க தம்முடன் பேச வருமாறு மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் மாணவர்கள் அழைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்புக்கு வருகை தரதோருக்கு மாணவர்கள் கண்டனம்.
அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க தமது அழைப்பை புறந்தள்ளி சந்திப்புக்கு வருகைதராத தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.