தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைப் பீடத்தில் இருந்து, நீக்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை மீண்டும் அவ் விடத்தில் பொறிக்கும்படி கோரி தொடரப்பட்ட வழக்கி்ல் தமிழக அரசிடம் விளக்க அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியினால் சிலை ஒன்று 2006 ஜூன் 21ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், மெரினாவிலிருந்த குறித்த சிலை அகற்றப்பட்டு பின்னர் அடையாரில் புதிதாக கட்டப்பட்ட சிவாஜி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த சிலையை சிவாஜியின் பிறந்த தினமான கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை வடபெரும்பாக்கத்தை சேர்ந்த திமுக வழக்கறிஞர் கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுங்கட்சியினர் உண்மையை மறைக்கும் வகையில் மெரினா கடற்கரை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்களில் இடம்பெற்றிருந்த கருணாநிதியின் பெயருடன் கூடிய கல்வெட்டுகளை அகற்றி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக சிவாஜி சிலையின் பீடத்தில் உள்ள பெயரையும் அகற்றிவிட்டதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்தார்.
சிலையில் மீண்டும் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டை அமைக்கக் கோரி அக்டோபர் 10 ஆம் திகதி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் எவ்வித பதிலையும் அளிக்காமையினால் உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளார்.
இதேவேளை இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.. வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, இது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.