குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சித்திரவதை சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். சித்திரவதைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை கிரமமாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போதும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு
Nov 8, 2017 @ 07:05
இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் காயங்கள் மற்றும் சித்திரவதை பற்றிய விபரங்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு காண்பித்துள்ளனர். கால்கள், நெஞ்சுப் பகுதி போன்றவற்றில் சித்திரவதைகள் மூலம் ஏற்பட்ட காயங்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மீளவும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிப்பதாகக் குற்றம்சு மத்தியே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கையின் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மறுத்துள்ளார். இலங்கையில் இவ்வாறான சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.