இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நவம்பரம் மாதம் 14ஆம் திகதி வரை கட்டிட நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறும் ஹெலிகொப்டர் மூலம் தண்ணீர் தெளிக்குமாறும் இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் வருடம்தோறும் குளிர் காலம் ஆரம்பிக்கும்போதும் முடியும்போதும் பனிமூட்டம் அதிகமாக இருப்பதும் இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாகவும் புகையிரத மற்றும் வாகனப் போக்குவரத்து சாதாரண அளவிலும் பாதிக்கப்படுவது வழக்கமானது.
எனினும் இவ் ஆண்டு ஆரம்பித்துள்ள குளிரில் புகைப்பனி திடீரென அதிகரித்துள்ளதனையடுத்து முன்பள்ளிகளுக்கு புதன்கிழமை அரச விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் காற்று மாசுவின் அளவு குறைவடையாத நிலையிலேயே உள்ளது.
இதேவேளை டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளதாகவும் இதை அவசர நிலையாகக் கருத வேண்டும் எனவும் கூறியுள்ள டெல்லி காற்று மாசு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஸ்வந்தர் குமார் டெல்லி- என்சிஆர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர் அல்லது விமானம் மூலம் தண்ணீர் தெளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தேவை ஏற்படும் பட்சத்தில் தீயணைப்புப் படையின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறும் கூறிய அவர் தொழில்துறை மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கவும் நகரில் எந்த விதமான வாகனங்களும் கட்டுமானப் பொருட்களைச் சுமந்து செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.