167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தர நீதிமன்றங்களாக தொடர்ந்து வரும் அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன. அந்த நிலைமை மாறவேண்டும். அந்த நிலைமை இனியும் நீடிக்க கூடாது என சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காணமால் ஆக்கபப்ட்டவர்கள் , அரசியல் கைதிகளின் வழக்குகள் எங்களுடைய மண்ணிலே நடக்க விடாது வேறு நீதிமன்றுக்கு மாற்றுவது மிக மனவருத்தத்திற்கு உடைய விடயம். எங்களுடைய நீதிமன்றங்களை இரண்டாம் தரமாக பார்க்கும் நிலையை உணர்கின்றோம். என சட்டத்தரணி தே.சுபாஜினி தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி இராணுவ சுற்றி வளைப்பில் கைது செய்யபப்ட்ட 24 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களின் 12 பேர் சார்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் வழக்கினை தாக்கல் செய்த சட்டத்தரணிகளில் ஒருவரான கு.குருபரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், கடந்த 1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறுவன் புலவை சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவ சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு நாவற்குழி மில் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர்.
2002 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல்.
அது தொடர்பில் 12 பேர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது அதில் 09 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் நீதிமன்றினால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு வழக்கு மாற்றம்.
அதனை தொடர்ந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்ட பின்னர் , அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி உட்பட இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ்.மேல் நீதிமன்றுக்கு மீள பரப்படுத்தப்பட்ட பின்னர், இந்த வழக்கு யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்கு அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
14 வருடமாக தகவல் இல்லை.
கடந்த 2003ஆம் ஆண்டு அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு வழக்கு மாற்றம் செய்த பின்னர் கடந்த 14 வருட காலமாக இந்த வழக்குக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தகவலும் தெரியாது. அதனால் நேற்றைய தினம் வியாழகிழமை குறித்த வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.
நிலுவையில் உள்ள வழக்கை மீள திறக்க முடியாது.
அதனை இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேல் முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை சுட்டிக்காட்டி, வேறொரு மேல்.நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து அனுராதபுர மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கின்றதா ? இருந்தால் அதனை யாழ்.மேல் நீதிமன்றுக்கு மாற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசிக்க உள்ளோம். அனுராதபுர மேல் நீதிமன்றில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தால் , அதனை யாழ்.மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றை நாடுவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றோம்.
14ஆம் திகதி விசாரணை.
இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மூவரது வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் 14ஆம் திகதி நீதிபதியினால் திகதியிடப்பட்டு உள்ளது.
இராணுவத்திற்கு பாதுகாப்பு இல்லை.
அனுராதபுர மேல்.நீதிமன்றுக்கு குறித்த வழக்கினை மாற்றம் செய்ய முன் வைக்கப்பட்ட காரணங்கள் , யாழ்ப்பணத்தில் இராணுவத்திற்கு பாதுகாப்பு இல்லை, இராணுவத்தினர் சார்பில் அரச சட்டத்தரணி முன்னிலையாக வாய்ப்புக்கள் இல்லை எனும் காரணங்களே சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன.
கடந்த 2003ஆம் ஆண்டு சமாதான கால பகுதியாகும் , போர் நிறுத்த கால பகுதியாகும். அந்த கால பகுதியில் தான் அவ்வாறன காரணங்கள் முன் வைக்கபப்ட்டு வழக்கு அனுராத புர மேல் நீதிமன்றுக்கு மாற்றபப்ட்டது.
அதேபோலவே இன்றும் யுத்தம் முடிவடைந்து 09 வருடங்கள் கடந்த பின்னரும் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றியுள்ளனர்.
வடக்கு கிழக்கு நீதிமன்றங்கள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுகின்றது.
இவ்வாறாக தொடர்ச்சியாக அரசாங்கமும் , சட்டமா அதிபர் திணைக்களமும் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மக்களின் வாழ்வுரிமை சம்பந்தமான வழக்குகள் நடைபெற கூடாது என்பது இன்று நேற்று முளைத்து இல்லை. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சட்டமா அதிபர் திணைக்களம் அதனை செய்து வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து வந்த அரசாங்கமும் , சட்டமா அதிபர் திணைக்களமும் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தரமாக பார்க்கும் நிலைமையே இந்த நிலைமை மாற வேண்டும். தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தரமாக பார்க்கும் நிலை நீடிக்க கூடாது. என தெரிவித்தார்.
12 ஆட்கொணர்வு மனு தாக்கல்.
அதேவேளை குறித்த வழக்கை தாக்கல் செய்த மற்றுமொரு சட்டத்தரணியான தே.சுபாஜினி தெரிவிக்கையில் , நேற்றைய தினம் 12 ஆள் கொணர்வு மனுக்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் , உறவினர்கள் அவற்றை தாக்கல் செய்துள்ளனர். 1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி இராணுவ சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரிகள் , கிராம சேவையாளர் மற்றும்சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் குறித்த இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கபப்ட்டனர். அதில் 15 பேர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
துமிந்த எனும் இராணுவ அதிகாரியே கைது செய்தார்.
இந்த வழக்கில் இளைஞர்களை கைது செய்தது அக்கால பகுதியில் அந்த இராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த துமிந்த எனும் இராணுவ அதிகாரியே என்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து அறிக்கை யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பபப்ட்டு இருந்தது. பின்னர் இந்த வழக்கின் எதிரிகளான இராணுவத்தினருக்கும் அவர்கள் சார்பில் முன்னிலையாக இருந்த அரச சட்டவாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டு , அந்த வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
வழக்குக்கு செல்ல முடியவில்லை.
அதனால் மனுதாரர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக அந்த வழக்கில் எந்த திகதிக்கும் போகவில்லை. அந்த நிலையில் மீண்டும் காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் 24 பேரில் 12 பேர் தொடர்பாக மீண்டுமொரு ஆட்கொணர்வு மனுவினை இன்று யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்து இருந்தோம். அந்த மனுவில் 09 பேரின் வழக்கு அனுராதபுர மேல் நீதிமன்றில் என்ன நிலைமையில் இருக்கின்றது என்பது தொடர்பில் தெரிய வேண்டும். அதனால் அவை தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார். மற்றைய மூன்று வழக்குகளையும் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
எங்கள் வழக்கு எங்கள் மண்ணில் நடக்க வேண்டும்.
காணமால் ஆக்கபப்ட்டவர்கள் , அரசியல் கைதிகளின் வழக்குகள் எங்களுடைய மண்ணிலே நடக்க விடாது வேறு நீதிமன்றுக்கு மாற்றுவது மிக மனவருத்தத்திற்கு உடைய விடயம். எங்களுடைய நீதிமன்றங்களை இரண்டாம் தரமாக பார்க்கும் நிலையை உணர்கின்றோம். நல்லிணக்கம் பற்றி கூறும் இந்த அரசாங்கம் நீதி விடயத்தில் எவ்வாறு செயற்பட போகின்றது என்பதனை பார்க்க தயாராக இருக்கின்றோம். என தெரிவித்தார்.
21 வருடங்களாக உறவுகளை தேடுகின்றோம்.
அதேவேளை வழக்கினை தாக்கல் செய்தவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ,
கடந்த 21 வருட காலமாக காணாமல் போன எங்கள் உறவுகளை தேடி வருகின்றோம். எந்த பயனும் இல்லை. ஏதேனும் முயற்சியால் அவர்கள் தொடர்பான தகவல்களை பெறலாம் என நினைக்கின்றோம். அதற்காக கடந்த 21 வருடமாக கண்ணீருடன் அவர்களை தேடி வருகின்றோம்.
24 பேரை கைது செய்தனர்.
மற்றுமொருவர் தெரிவிக்கையில் , நாவற்குழி தொடக்கம் தனங்கிளப்பு வரையிலான பகுதியை இராணுவம் சுற்றி வளைத்து எனது கணவர் உட்பட 24 பேரை கைது செய்து கொண்டு சென்றது.
சுற்றி வளைப்பில் எனது கணவரை ஆலடி சந்தியில் தலையாட்டி முன்பாக கொண்டு சென்று கைது செய்த பின்னர் அவரின் கண்களை கட்டி இராணுவ வாகனத்தில் ஏற்றி சென்றனர். அவர்களை நாவற்குழி மில் முகாமுக்கு கொண்டு சென்று இறக்கிய போது, அப்போது நான் எழுமாத கைக்குழந்தையுடன் அங்கே சென்று இருந்தேன். மூத்த பிள்ளைக்கு ஆறு வயது , இரண்டாவது பிள்ளைக்கு 03 வயது அவர்களுடன் முகாமுக்கு சென்று இருந்தேன். அங்கே இருந்து எங்களை இராணுவத்தினர் துரத்தி விட்டனர்.
அதன் பின்னர் கணவரை தேடி பல இடங்களும் அலைந்தேன். 2003ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தோம். அதன் பின்னர் அந்த வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றம் செய்தனர். அனுராதபுரத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதால் அங்கே செல்வதற்கு வசதியும் இருக்கவில்லை , பிள்ளைகளையும் தனியே விட்டு போக முடியாத சூழலும் காணப்பட்டது. அதனால் அந்த வழக்கை அப்படியே கை விட்டு விட்டோம். மீள அந்த வழக்கை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளோம்.
இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என அனுராதபுரத்திற்கு வழக்கினை மாற்றி உள்ளார்கள் . எங்களுக்கு அக்கால பகுதியில் என்ன பாதுகாப்பு இருந்தது. எனவே எங்களின் மண்ணில் எங்களின் வழக்கு நடக்க வேண்டும்.
எங்கள் பிள்ளைகளை சுட்டுப்படுகொலை செய்து விட்டீர்களா ?
இன்னொருவர் தெரிவிக்கையில், இந்த நல்லாட்சி அரசாங்கம் எனும் அரசாங்கம் அரசியல் கைதிகள் 133 பேர் உள்ளதாக கூறுகின்றார்கள். ஏன் அவர்களின் பெயர் விபரங்களை கூற வில்லை. எங்களின் பிள்ளைகள் இருக்கின்றதா? இல்லையா என்பதே தெரிய வேண்டும்.
எங்களின் பிள்ளைகளை கைது செய்த நாவற்குழி இராணுவ முகாம் இராணுவ அதிகாரியை கேளுங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என , இன்னமும் உயிருடன் இருக்கின்றார்களா ? இல்லையா ? என்பதனை மாத்திரம் கூற சொல்லுங்கள்.
எங்கள் பிள்ளைகளை சுட்டு படுகொலை செய்து விட்டால் , அதனை சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளை சுட்டு விட்டோம் என நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியதை செய்கிறோம். உங்களின் நிவாரணங்கள் எவையும் எங்களுக்கு வேண்டாம் எங்கள் பிள்ளைகள் பற்றிய தகவலே வேண்டும். என தெரிவித்தார்.
Spread the love