Home இலங்கை தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும்

தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும்

by admin

 

தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் –  யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் (2வது மாடி) – 
இணைத்தலைவர் உரை

தமிழ் மக்கள் பேரவை தொடங்கி 2வது ஆண்டு விரைவில் பூர்த்தியடைய இருக்கின்றது. இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக நாடளாவிய ரீதியில் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் உள்ளராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்கும் இந்தத் தறுவாயில் தேர்தல்கள் பற்றிய சிந்தனைகள் எம்மிடையே எழக் காரணம் என்ன என்று நீங்கள் வினவக் கூடும். கட்சி அரசியல் வேறு, அரசியல் ஈடுபாடு வேறு. தமிழ் மக்கள் பேரவை அரசியல் ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டது. மக்கள் இயக்கம் என்று கூறும் போது சகல தமிழ்ப் பேசும் மக்களையும் வேற்றுமை பாராது, பிரதேசங்கள் பாராது, மாகாணங்கள் பாராது ஏன் நாடுகள் கூடப் பாராது அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சிந்தனையை மேற்கொண்டு எமது அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

கட்சி அரசியல் எனும் போது குறுகிய ஒரு வட்டத்தினுள் கட்சியின் நலன் கருதி உரிய நடவடிக்கைகளை முக்கியமாகத் தேர்தலின் போது எடுப்பதையே அது குறிக்கும். நாம் கட்சி அரசியலுக்கு எதிரானவர்கள் அல்லர். எம் மத்தியில்கூட ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் மிக முக்கிய உறுப்பினர்களாகஇருக்கின்றார்கள். அவர்களின் கட்சியின் வலையமைப்பு எமது கூட்டங்களைக் கூட்டுவதில் மிக முக்கிய பாகங்களை வகித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆனால் கட்சிகளின் எதிர்பார்ப்புக்களும் நடவடிக்கைகளும் குறுகிய வட்டத்தினுள் அடங்குவன என்பதைத்தான் நான் இங்கு கூறவருகின்றேன். எம்மோடு இயைந்து நடந்துவரும் இந்தக் கட்சிகளுடன் எதிர் காலத்தில் மற்றைய கட்சிகளையும் எமது இயக்கமானது உள்ளடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எம்மத்தியில் உண்டு. கட்சிகள் பொதுவாகவே கட்சிச் சிந்தனைகளின் நிமித்தம், தமது தனித்துவத்தைப் பேண வேண்டியதன் நிமித்தம் மற்றைய கட்சிகளுடன் முரண்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை நாம் மறக்க முடியாது. என்றாலும் தமிழ் மக்களின் விடிவுகாலத்தை எதிர்நோக்கிச் செல்லும் போது கட்சிகளாவன தற்காலிகமாகவேனும் கட்சி முரண்பாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இந்த இரண்டு வருட காலத்தினுள் எமது இயக்கமானது சில கட்சிகளின் சிந்தனைகளில் வரவேற்கத்தக்க சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ‘அரசாங்கம் தருவதைத் தரட்டும்;; எம் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள்’ என்றிருந்த அரசியல் நிலை போய் ‘எவற்றை எம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்; அவற்றிற்கு இசைவாகவே நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை எடுத்துப் போக வேண்டும்’ என்ற ஒரு சிந்தனை மாற்றத்தை தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் தர முன்வருவதற்கும் எமது எதிர்பார்ப்புக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதைப் பலர் சுட்டிக்காட்டி அரசாங்கம் குறைத்துத் தருவதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமது இலக்குகளை நாம் அடைய முடியாமல் போய்விடும் என்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்கள். இது சம்பந்தமாக நாங்கள் சில விடயங்களை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களினுடைய தனித்துவ சுய உரித்தை மழுங்கச் செய்து பெரும்பான்மையினத்தவர் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டின் முழுமையான ஆட்சி உரித்தையுந் தம் வசம் கையேற்றுக் கொண்டனர். அதன் காரணமாகவே தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல், பொருளாதார, சமூக நடவடிக்கைகளை இது வரை காலமும் தமது பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்து அவர்கள் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.

எனினும் பேச்சு வார்த்தைகளின் போது நாம் எமது கோரிக்கைகளை வலுவுடனும் திடமுடனும் எடுத்துக் கூற வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. எம் உரிமைகள், உரித்துக்களைப் பறித்துக் கொண்ட பெரும்பான்மையினர் தாம் நினைத்தவாறு மாற்றங்களை ஏற்படுத்தி எமக்கு சலுகைகளை, உரிமைகளை, உரித்துக்களை திருப்பித் தருவதாக இருந்தால் அதற்கு நாம் ஆட்சேபணை தெரிவிக்கவுந் தேவையில்லை அவற்றை ஏற்கின்றோம் என்று கூறவேண்டிய அவசியமும் எமக்கில்லை. அரசாங்கம் தனது பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்துத் தாம் இதுவரை காலமும் செய்த அரசியல் பிழைகளை மனத்தில் வைத்து சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் எதிர்ப்புமில்லை ஏற்புமில்லை. எனினும் குறைவாகத் தருவனவற்றை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் மேலும் எதுவுந் தரவேண்டிய அவசியம் தமக்கில்லை என்று அரசாங்கம் நினைத்துவிடக்கூடாது. இதைத்தான் நான் உச்ச நீதிமன்ற அமர்வொன்றில் கூறியிருந்தேன். நாம் இளம் மாணவர்களாக இருந்த போது கல்லூரி சிரேஷ்டர்கள் நாம் விளையாடிக்கொண்டிருக்கும் 25 மாபிள்களையுந் தம்வசப்படுத்துவர். நாங்கள் அழுது முரண்பட்டு எமது மாபிள்களைத் திருப்பித் தாருங்கள் என்றால் ‘இந்தா 6 மாபிள் , 8 மாபிள்’ என்று பேரம் பேசுவார்கள். நாங்கள் தருவதை ஏற்றுக்கொண்டு மிகுதியையுந் தருமாறு அழுது முரண்பிடிப்போம். அவ்வாறே வருவதை ஏற்றுக் கொண்டு மிகுதியையுந் திரும்பப் பெற வேண்டிய நிலை இப்பொழுது எமக்கு வந்துள்ளது.

சிங்கள மக்கட் தலைவர்கள் அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும் பிரதேசவாரியான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினர்களுக்குப் பெற்றுத், தம்வசம் அதிகாரங்களைக் கையகப்படுத்தியதனாலேயே எமது அரசியல் பிரச்சினையானது உருவானது. தொடர்ந்தும் சர்வாதிகாரங்களும் தம் வசம் இருக்க வேண்டும் என்றும் அவற்றிலிருந்து எமக்கு சில அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள முன்வருவதாகவுமே அவர்களின் நடவடிக்கைகள் இன்று அமைந்துள்ளன. தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்கள் சுய நிர்ணய உரித்தைப் பெற்றிருந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையை அவர்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றார்கள். ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்பது பல்லினங்களின் ஒப்புதலோடு நடைபெற வேண்டுமே ஒளிய பெரும்பான்மையினரிடமிருந்து எமக்குத் தரப்படும் அவர்களின் கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது. அவ்வாறு கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தருவனவற்றை நாங்கள் எதிர்க்கவுங் கூடாது ஏற்கவும் கூடாது. அதாவது நடைமுறைச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்வந்தால் அவற்றிற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம். ஆனால் நாங்கள் எங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்துஞ் சற்றேனும் இறங்கி வரவும் மாட்டோம். உதாரணத்திற்கு ஆளுநரின் அதிகாரங்களைக் கத்திரிக்க அரசாங்கம் முன்வருகின்றது என்று வைத்துக் கொள்வோம் அதற்கு நாம் எதிர்ப்பில்லை. ஆனால் ஆளுநர் பதவியை வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற எமது கோரிக்கையில் மாற்றம் இருக்காது. சிங்களப் பெரும்பான்மையினர் தர முன்வரும் அரசியல் சலுகைகள் எம்மிடமிருந்து அவர்கள் ஏற்கனவே பறித்துக் கொண்டவையே தவிர அவர்களுக்குரிய உரித்துக்கள் அல்ல. இந்த அடிப்படையிலேயே நாம் அரசாங்கம் தர இருக்கும் எந்த அரசியல் சலுகைகளையும் எதிர் நோக்க வேண்டும். ‘குற்றத்தால் குறுகுறுக்கும் உங்கள் நெஞ்சங்கள் முன்வந்து எமக்குத் தருவனவற்றை நாம் எதிர்க்கவும் மாட்டோம் ஏற்கவும் மாட்டோம். தொடர்ந்து எமது அடிப்படைக் கோரிக்கைகளை அவை கிடைக்கும் வரையில் நாங்கள் முன் வைத்துக் கொண்டே இருப்போம். அவற்றிற்காகப் போராடவுந் தயங்க மாட்டோம்’ என்ற அடிப்படையில்த் தான் எமது சிந்தனை அமைய வேண்டும்.

எமது தலைவர்கள் அரசாங்கம் தருவதை முறையான தீர்வு அல்லது முற்றுமுழுதான தீர்வு என்று ஏற்றுக் கொண்டார்களானால் பின்னர்; எம்மை அரசாங்கம் குறை கூறுவார்கள். நீங்கள் ஏற்றுக் கொண்டதைத் தான் நாம் ஏற்கனவே தந்துவிட்டோமே. பின் எதற்காக மேலும்  உரித்துக்கள், உரிமைகளைக் கோருகின்றீர்கள் என்று எம்மிடம் கேட்பார்கள். இந்த நிலை வர இடமளிக்கக் கூடாது. எமது அரசியல் விஞ்ஞாபனங்களில் இருக்கும் அடிப்படை அரசியல் கோரிக்கைளில் இருந்து நாம் எப்போதுமே மாறப்போவதில்லை என்பதை வலுவாக அரசங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டிய கடப்பாடு எமது தலைவர்களுக்குண்டு. இதை எமது தலைவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடுத்து உள்ள10ராட்சித் தேர்தல்கள் சம்பந்தமான அறிவித்தல்கள் வெளிவந்துள்ளன. இப்பொழுதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைப்புக் கட்சிகளாக இருக்குஞ் சில கட்சிகள் தம்மிடையே போட்டி போடக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கத்தில் சகல கட்சிகளையுந் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபடுத்த பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சில கட்சிகளின் தனித்துவமான கட்சி எதிர்பார்ப்புக்கள் அல்லது கட்சியின் நல உரித்துக்கள் பற்றிய அவர்கள் சிந்தனைகள் அக் கட்சிகளைத் தனித்துப் போட்டியிட உந்துகின்றன போலத் தெரிகின்றது. இவற்றுள் எமக்கு அனுசரணை வழங்கும் கட்சிகள் சிலவும் உள்ளடங்குவன.

ஆரம்பத்திலிருந்தே ஐந்து கட்சிகள் சேர்ந்தே என்னை முதலமைச்சர் பதவிக்கு சிபார்சு செய்ததன் அடிப்படையில் கட்சி ரீதியாக முரண்பட நான் முன்வரவில்லை, இசையவில்லை. எம்மைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளே பூதாகரமாக எம்முன் நிற்கின்றன. பல வித பாரதூரமான பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர் நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அரசாங்கமும், சிங்கள மக்கட் தலைவர்களும், முஸ்லீம் மக்கட் தலைவர்களும் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்றெல்லாம் திடமான கொள்கைளை வகுத்து அவற்றின் அடிப்படையில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்கட் தலைவர்கள் உட்பூசல்களுக்கு இடங்கொடுத்து, தன்நல சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து, தம்முள் போட்டி மனப்பான்மையுடன் நடக்கவே எத்தனித்துள்ளார்கள். இது ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையும் அழிவுப் பாதையில் செல்ல வழிவகுக்கும் என்பது எமது கருத்து. பொது நலங்; கருதி, எமது சுயநலங்களையும் முரண்பாடுகளையும் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான ஒரு முரண் நிலையை ஆயுதங்கள் ஏந்தியவர்கள் காலத்தில் ஆயுதங்களே தடுத்து நிறுத்தின. இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாங்கள் ஒவ்வொருவருமே எம்முடைய கடமை யாது என்று ஆய்ந்து அறிந்து உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழ் மக்கட் பேரவை எல்லாக் கட்சிகளிடமும் வலியுறுத்திக் கோருவது யாதெனில் எங்களுடைய தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும், தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

இந்த நிலையிலேயே எமது பேரவை உள்ள10ராட்சிமன்றத் தேர்தல்களை எதிர் நோக்கும் கட்சிகளிடம் ஒரு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்;றது. 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் கீழ் அப்போதைய அமைச்சரினால் ஆக்கப்பட்ட விதிகளின்படி சில விடயங்கள் தெட்டெனத் தெரிகின்றன. உதாரணத்திற்கு பிரதேச சபையொன்றின் தவிசாளரானவர் அச் சபையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தராகக் கணிக்கப்படுவார். எனவே அவர் பின்வருவனவற்றிற்குப் பொறுப்புடையவராவார் –
1.    சட்டத்தினால் சபையின் மீது பாரிக்கப்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படுகின்ற தீர்மானங்களை இயற்ற வழியமைத்தல்;

2.    அத் தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தல்;

3.    தம் மீது பாரப்படுத்தப்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும் செய்து முடித்தல்;;

4.    சபையின் பணியாட்டொகுதியைக் கட்டுப்படுத்தல், அவர்களுக்கு அவர்களின் கடமைகளை ஒதுக்குதல், அக்கடமைகள் உடனடியாகவும் சரியாகவும் நிறைவேறுதலை உறுதிப்படுத்துதல்;

5.    சட்ட விரோதமான கொடுப்பனவொன்றைச் செய்கின்ற அல்லது செய்வதற்கு அதிகாரம் அளிக்கின்ற அல்லது சேதத்தை உண்டு பண்ணுகின்ற தவிசாளர் அச் சேதத்தை மேலதிகக் கட்டணமாக சொந்த வகையில் செலுத்தும் பொறுப்புடையவராவர் என்பது.

6.    மேலும் தவிசாளர் உள்ளுர் நிதியத்தின் முறையான கட்டுக்கோப்புக்கும் செலவழிப்புக்கும் தனிப்பட்ட முறையிலும் பண ரீதியாகவும் பொறுப்புடையவராவார். அத்துடன் சபை உத்தியோகத்தர்களின் நிதிக் கடமைகளின் நிறைவேற்றத்திற்கும் பொறுப்புடையவராவார். எனவே வேண்டும் போது ஒழுக்காற்று நடவடிக்கைகளை அவர் எடுக்க முன்வரவேண்டும்.

7.    பிரதேசசபையொன்றின் கணக்கு உத்தியோகத்தரும் தவிசாளரே. நிதி சார் மற்றும் கணக்கிடல் தொழிற்பாடுகள் யாவும் அவருடைய பொது முகாமைத்துவத்தினதும் மேற்பார்வையினதும் கீழேயே இருக்கும்.

இவ்வாறான பொறுப்புக்களை தவிசாளர் மீது சட்டம் சுமத்தியிருக்கும் போது கட்சிகளாவன அவ்வாறான செயற்பாடுகளைச் செவ்வனே செய்து முடிக்கக் கூடியவர்களையே தவிசாளர்களாக நியமிக்க முன்வர வேண்டும். ஆனால் மாறாக கட்சித்தலைமைகள் தம்மைத் தலைமைத்துவத்தில் தக்கவைக்கத்தக்க தறுதலைகள் மீதே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர். ஊழல்கள் ஏற்படவும், முரண்பாடுகள் பிரதேச சபைகளில் உருவாகவும் காரணகர்த்தாக்கள் கட்சித்தலைமைகளே என்றால் அது பிழையாகாது. அந்தப் பதவிகளில் சிறக்கப் பணிபுரிவோரை ஏற்க முன்வராது கையாட்களையும் கட்சி ஆதரவாளர்களையுமே இணைத்துவிடப் பார்க்கின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். தவிசாளர்களின் கடமைகள் யாவை, உறுப்பினர்களின் கடமைகள் யாவை என்றறிந்து அவற்றைத் திறம்படச் செய்யக்கூடியவர்களையே உறுப்பினர்களாக கட்சிகள் நியமிக்க முன்வர வேண்டும். இன்று கணணி அறிவு தேவையாகவுள்ளது. கணக்கியல் அறிவு தேவையாக இருக்கின்றது. முகாமைத்துவ அறிவு தேவையாக இருக்கின்றது. வெறுமனே கட்சியின் விசுவாசத்திற்குப் பாத்திரமானவர்கள் என்ற அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்க்காது அவர்களின் தரம் பார்த்து, தகைமை பார்த்து உரியவர்களை நியமிக்க கட்சிகள் முன்வர வேண்டும். வேலையற்ற பட்டதாரிகள் பலர் நம்மிடையே உள்ளார்கள். சிறந்த அறிவையும் ஆற்றலையுங் கொண்ட இளைஞர் யுவதிகளை நான் சந்தித்திருக்கின்றேன். இவ்வாறான படித்த இளைஞர் சமுதாயம் அடிமட்ட உள்ளுராட்சி சபைகளில் இடம் பெற நாங்கள் வழி அமைக்க வேண்டும்.
பெரும்பாலாக எமது கட்சித் தலைமைகள் 60 வயதைத் தாண்டியவர்கள். அடுத்த கட்டத் தலைமை இப்பொழுதிருந்தே அடையாளப்படுத்தப்பட்டு அதிகாரத்தில் இருத்தப்பட்டு போதிய அரசியல் அறிவை மற்றும் அனுபவத்தைப் பெற நாம் இடமளிக்க வேண்டும். மாறாக நாம் காண்பது தலைமைத்துவங்கள் தம்மைப் பதவிகளில் நீடிக்கப் பல வழிகளிலும் பாடுபடுவதையே.
இந்த விடயமும் எமது தமிழ் மக்களின் வருங்காலம் பற்றியதே. அடுத்த கட்டத் தலைமைத்துவத்தை உருவாக்க நாம் இப்பொழுதிருந்தே நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இன்றைய தலைவர்கள் காமராஜர் போல பின்னிருந்து பாரிய தமிழர் அரசியல் இயந்திரத்தை இயக்க முன்வர வேண்டும். வருங்காலத்தில் தமிழ்த் தலைமைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிரத்தையுடன் ஆராய்ந்து செயற்படுவது இன்றைய தலைமைத்துவங்களின் தலையாய கடன் என்று கூறி வரப்போகும் உள்ளுராட்சித் தேர்தல்களில் தகுந்த தகைமை மிக்க இளைஞர்களையும் யுவதிகளையும் உள்ளடக்க முன்வாருங்கள் என்று உரக்கக் கூறி என் இணைத்தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி  வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More