யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் யாழ். வீதி நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ். வீதி சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதுடன் குப்பைகளினாலும் விலங்குகளின் கழிவுகளினாலும் நிரம்பி வழிகின்றது. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ் வீதியை பயன்படுத்தும் மக்கள் அசௌரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலை தொடர்பில் அப் பகுதி மக்களால் யாழ்.மாநகர சபை நிர்வாகத்துக்கு பல தடவைகள் முறையிடப்பட்டுள்ளது. எனினும் குப்பைகளை அகற்றி சுகாதார நிலமைகளை கருத்தில் கொள்வதில் அதிகாரிகள் அசட்டையாக உள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சுகாதார திணைக்களத்தினரும் பொது மக்கள் நலன் கருதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மழை நீர் வழிந்தோடும் வாய்கால் நீண்ட காலமாக எந்த சீரமைப்படவில்லை. அதனை சீர் செய்யும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழை நீரின் தேக்கமும் குப்பை கூழங்கள் அழுகி துர்நாற்றம் வீசும் நிலையும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது.
வீடுகளின் மக்களிடம் தண்டப்பணம் அறவிடும் டெங்கு ஒழிப்பு குழுவினரின் கண்களுக்கும் மாநகர சபை அதிகரிகளுக்கும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்.