நாட்டை விடுவித்த சுதந்திர வீரன் முகாபே, தான் உருவாக்கிய கட்சியிலிருந்தே நீக்கப்படும் அவலம்….
சிம்பாப்வே அதிபர் ரொபேர்ட் முகாபே பதவி விலக வேண்டும் என்ற கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில், அந்நாட்டு ராணுவத் தலைவரை முகாபே சந்திக்க உள்ளார். இந்த மத்தியஸ்தம் ஒரு கத்தோலிக்க மத குருவால் நடத்தப்படுகிறது என அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. சிம்பாப்வேவை ஆளும் ஜானு பி எஃப் கட்சியின் நிறுவனரும், நீண்ட கால தலைவருமான ராபர்ட் முகாபேயை கட்சியில் இருந்து நீக்குவதா என்பதை முடிவு செய்ய ஜானு பி எஃப் கட்சியின் கூட்டம் கூட உள்ளது,
தனது மனைவியும், தன்னைவிட 40ஆண்டுகள் சிறியவருமான கிரெஸ் முகாபே அடுத்த அதிபர் ஆவதற்கு வழிவகுப்பதற்காக, நாட்டின் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வுவாவை கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கினார் முகாபே.
பதவிக்கான போராட்டத்தால், 37 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டுவந்த முகாபேக்கு எதிராக ராணுவம் நடவடிக்கையை மேற்கொண்டது.
சிம்பாப்வே 1980-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து சுதந்திரப் போராட்டத்திற்கு தலமை தாங்கிய முகாபே அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதனைக் கொண்டாடும் விதமாக, நேற்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முகாபே பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.
ஜானு-பி.எஃப் கட்சியின் பத்தில் ஒன்பது மாநில கிளையும், முகாபே பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது. இன்று நடக்க உள்ள கட்சியின் உயர்மட்ட அமைப்பான, மத்தியக் குழு கூட்டத்தில் ஒன்பது மாநில கிளைகளின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ”இது ஒரு திருப்புமுனை. முகாபே மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை” என சிம்பாவேயில் நிலைகொண்டுள்ள சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.
BBC