சிம்பாப்வே நாட்டு அதிபராக தொடர்ந்து பதவியில் தொடர்வேன் என தொலைக்காட்சியில் தோன்றிய ரொபர்ட் முகாபே பிடிவாதமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் பதவி விலக காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குள் முகாபே தனது அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவரின் சொந்த கட்சியான சானு பி.எஃப் தெரிவித்துள்ளது. முகாபே அவ்வாறு விலகவில்லை என்றால், பதவி விலகல் குறித்த விசாரணை அவர் மீது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடிய உடன் இந்த விசாரணை நடைபெறலாம்.
முன்னதாக, அதிபர் முகாபே, பதவி விலக வேண்டும் என வலுத்துவரும் கோரிக்கையை நிராகரித்திருந்தார். அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பதவியில் இருப்பேன் என அவர் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் முகாபே, டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் என்று தெரிவித்தார்.
அவரின் ஸானு- பி.எஃப் கட்சி, அவரை கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அதிபர் பதவியிலிருந்து விலக 24 மணிநேரத்திற்கு குறைவான கெடு அளித்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனக்கு அடுத்த பதவியில் இருந்த எமர்சன் மனங்காக்வாவை, முகாபே பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து இந்த நெருக்கடி உருவானது. முகாபேக்கு பின் அவரின் மனைவியை அதிபராக்கும் நடவடிக்கையாக இதனை, ராணுவத் தளபதி கருதியிருந்தார்.
இந்த நிலையில் முகாபே பதவி விலகுவதை அறிவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தொலைக்காட்சி பேச்சைக் காண மக்கள் கூட்டம் ஹராரேவில் கூடியது. பதவி விலகலுக்கு பதிலாக, அவர், “கட்சியின் நாடாளுமன்ற கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அதற்கு நான் தலைமையேற்பேன் ” என அவர் அறிவித்தார். ஸானு பி.எஃப் கட்சி, ராணுவம் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அவர், நாடு மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
“ராணுவத்தினரின் நடவடிக்கைகளில் என்ன சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் கவலைகளை, தலைமைத் தளபதி என்ற முறையில் நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று அவர் தொலைக்காட்சியில் பேசினார். கடந்த வாரம், அரசு ஒளிபரப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்த நகர்வை அவர் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்தார். முகாபே பதவி விலக ஒப்புக்கொண்டு, பிறகு தன் எண்ணத்தை மாற்றிருக்கலாம் என்று இந்த சூழ்நிலையை புரிந்துகொள்வதாக, பிபிசியின் ஆஃப்ரிக்க சேவை ஆசிரியர் ஃபெர்கல் கேன் தெரிவிக்கிறார்.