சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று பெங்களூர் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி வேண்டுமென சிறை கண்காணிப்பாளர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை மண்டல இயக்குநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
நீதிமன்ற அனுமதி இல்லாவிட்டால் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது எனவும் கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி, நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே வருமான வரித்த துறையின் விசாரணைக்கேற்ற நாள், இடம் ஆகியவற்றை ஒதுக்கித் தர முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர் அரசுத் துறை ரீதியான கடிதம் மட்டும் போதுமானது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கோரி, பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர் எனவும் இதனால் விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படமை தொடர்பிலேயே விசாரணை நடத்த கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.