மருத்துவ நிர்வாகத்துறை விசேட வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சுகாதார அமைச்சில் நேற்று 29.11.2017 உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். சோவியத் யூனியனின் லொவோவ் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரியான இவர் இலங்கை சுகாதார அமைச்சில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகப் பதவியேற்கும் முதலாவது வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாய மருத்துவ முதுகலை மற்றும் மருத்துவ நிர்வாக முதுமாணிப் பட்டம் ஆகியவற்றை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ள ஜெயசிங்க அவர்கள் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாக முதுகலைப் பட்டதாரி ஆவார்.
காலி மகிந்த கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க அவர்கள்இ பதுளை மாகாண பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து சேவையின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
2009ம் ஆண்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.