குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
கிளிநொச்சி நகரத்தில் வர்த்தக நிலையங்களின் கழிவு நீர் வழிந்தோடுவதற்கான சிறந்த வாய்க்கால் வசதிகள் உருவாக்கப்படாததன் காரணமாக தேங்கி நிற்கும் கழிவு நீரினால் தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை காணப்படுகின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கடந்த காலங்களில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏ-9 சாலை, தொடரூந்து சாலை புனரமைப்புகளின் போது கழிவு நீர் வழிந்தோடுவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படவில்லை. திருமுறிகண்டி தொடக்கம் பரந்தன் வரை மக்களின் குடியிருப்புகள், வர்த்தக நிலையங்கள், திணைக்களங்கள், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், தொடரூந்து நிலையம் என கிளிநொச்சி நகரத்தின் அனைத்து இடங்களிலும் வெள்ளம் தேங்கி நிற்பதனால் நெருக்கடி நிலைமை உருவாகி உள்ள நிலையில் வர்த்தக நிலையம், விடுதிகளில் இருந்து வெளியேறுகின்ற நீர் பாய்ந்தோட முடியாமல் தேங்கி நிற்பதன் காரணமாகவும் நெருக்கடி நிலைமை எதிர்கொள்ளப்படுகின்றது.
கரைச்சி பிரதேச சபைக்கு அருகிலான உணவகங்கள், விடுதிகளில் இருந்து வெளியேறுகின்ற நீர் பாய்ந்தோட முடியாமல் இருப்பதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி நகரத்தில் சிறந்த வடிகாலமைப்பு உருவாக்கப்படாததன் காரணமாக மழை காலங்களில் வர்த்தக நிலையங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து கொள்கின்றமை கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்று வருகின்றது.