குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சுன்னாக காவற்துறையினரால் இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து காவற்துறையினர் மீட்டனர் என வர்த்தகர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் மாவீரர் நாளான கடந்த 27ஆம் திகதி இளைஞர்கள் மீது சுன்னாக காவற்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அதனை அருகில் இருந்த வர்த்தக நிலையத்தில் இருந்த வர்த்தகர் அவதானித்து, சம்பவ இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளிலை எடுத்துக்கொண்டு விரைந்துள்ளார். அங்கு சென்று காவற்துறையிடம் இளைஞர்கள் மீது எதற்காக தாக்குதலை மேற்கொண்டீர்கள் ? என நியாயம் கேட்டு உள்ளார். அதன் போது காவற்துறையினர் நியாயம் கேட்ட வர்த்தகரை தகாத வார்த்தைகளால் பேசி அவரையும் தாக்கியுள்ளனர்.
அதனால் வர்த்தகர் தனது மோட்டர் சைக்கிளை அவ்விடத்தில் கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடி மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் இருந்து மீட்க சட்டத்தரணியுடன் சென்ற வேளை வர்த்தகரின் மோட்டார் சைக்கிளில் இருந்து 200 கிராம் கஞ்சாவை மீட்டு உள்ளோம் என காவற்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அது தொடர்பில் குறித்த வர்த்தகர் நேற்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனக்கு எதிராக சுன்னாக காவற்துறைர் பொய் குற்ற சாட்டினை முன் வைத்துள்ளனர் என முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞர் மாவீரர் தின நிகழ்வுகளை ஒழுங்கமைத்தார் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த இளைஞன் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்டார் என பொய் குற்ற சாட்டினை சுமத்தி சுன்னாக காவற்துறை கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவற்துறை கூறியதாக போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
அதில் சித்திரவதை குற்ற சாட்டுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் அப்போதைய சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களை யாழ்.மேல் நீதிமன்று குற்றவாளியாக கண்டுள்ளது. கொலை குற்ற சாட்டு தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.