வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதி. அந்தப் பகுதியில் உள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளை அபகரிக்க முறப்படுவதாகவும் அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யத் திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் ஒதியமலைக்குச் சென்றிருந்தேன். ஒதியமலையை நோக்கி முன்நகர்ந்து கொண்டிருக்கும் குடியேற்ற நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை தந்தது.
அந்த நடவடிக்கை ஒரு நில அபகரிப்பு யுத்தத்திற்கு ஒப்பானது. நில அபகரிப்பு யுத்தம் என்பது விமானங்கள் பறந்து குண்டுகளைக் கொட்ட யுத்த டாங்கிகளோடு யுத்தம் செய்து கொண்டு நிலத்தை கைப்பற்றுவது மட்டுமல்ல. அதைவிடவும் கொடுமை யாதெனில் அமைதியாக மெல்ல மெல்ல நாளும் பொழுதும் குடியேற்றங்களை செய்து நிலத்தை அபகரிப்பதுதான். இன்றைக்கு வடக்கு கிழக்கில் பல கிராமங்களில் இந்த நடவடிக்கைதான் சத்தமில்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் ஒதிமலையையை அண்டிய பகுதியிலும் மேற்கொள்ளப்படுகிறது.
ஒதியமலையை அண்டிய பகுதிகள் கென்பாம், டெலஸ்பாம், சிலோன் தியோட்டர். அங்கு அல்மனியம், ஆனைவெடி செய்யும் கொம்பனிகள் இருந்தன. 1000ஏக்கர் திட்டத்தின் ஊடாக ஊடாக 1960களுக்கு முன்னர் அங்கு தமிழ் மக்கள் காணி பகிர்ந்தளித்து குடியேற்றப்பட்டார்கள். பன்னெடுங்;காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பூமி என்பது ஒதியமலை உள்ளிட்ட கிராமங்களைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும். தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கிய அன்றைய நாட்களில் பதவியாவிலிருந்து மெல்ல மெல்ல குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இப்போது ஒதியமலையின் எல்லை கடந்து வந்துவிட்டது.
1976இல் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகள் அவை. குருவேப்பங்குளம், முறிகுளம், மயிற்கொண்டான்குளம், லாம்பு தூக்கிக் குளம் என்று முழுக்க முழுக்க தமிழர்ப் பெயர்களால் அழைக்கப்பட்ட அந்த இடங்களில் எல்லாம் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். இன்று அவையெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு சிங்களப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை பழைய காலக் குளங்கள் என்று ஒதியமலையின் முதியவர்கள் கூறுகிறார்கள்.
சிலோன் தியட்டரில் பனையாமுறிப்பு குளம் உள்ளது. இன்று அந்த இடமும் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. தனிக்கல்லுக் குளத்திற்கு இன்று கல்யாண புர என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள். செம்பிக் குளமும் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது. சிங்களக் குடியேற்றம் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டு வருகிறது என்பதுதான் ஒதியமலை போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களின் அச்சம். சிங்களவர்கள் நாளும் பொழுதும் மெல்ல மெல்ல ஒவ்வொரு வீட்டைக் கட்டி நிலத்தைப் பிடித்து வருகிறார்கள்.
அந்தப் பகுதிக்குப் போயிருந்தபோது காடுகள் வெட்டி எரியூட்டப்பட்டிருப்பதையும் சில சிங்களக் குடும்பங்கள் கொட்டில்களை அமைத்துக் குடியேறிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த அவர்களின் காணிகளை வனத்துரைக்கு கையகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளது. இவ்வாறு கையகப்படுத்தி அதிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளுவதே இந்த நடவடிக்கையின் திட்டம். தமிழ் மக்களின் வயல் நிலங்கள், பயன்தரு மரங்கள், வீடுகள், கிணறுகள் என்று அவர்கள் காலம் காலமாக அந்தப் பகுதியில் வாழ்ந்தமைக்கான தடயங்கள் பலவும் அங்குள்ளன.
வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துச் செல்லும் இந்த சிங்களக் குடியேற்றங்கள் கொக்குத் தொடுவாய், கொக்கிளாய் வரை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குடியேற்ற திட்ட நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ப்பட்டவை. தமிழர் தாயகத்தை அபகரிக்கும் பிரித்து அபகரிக்கும் திட்டத்துடன் அவை மேற்கொள்ளப்படுகின்றன. வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் இன்று நேற்று அபகரிப்புக்கள் மேற்கொள்ளப்படபவில்லை. அன்றே தொடங்கப்பட்டன. ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களிலும் இதுவும் ஒன்று. அந்தக் காரணம் இன்னும் இன்னும் மோசமாக விரிவாக்கப்படுகிறது.
இனத்தை அழிப்பதற்கு நிலத்தை அபகரிக்க வேண்டும் நிலத்தை அபகரிக்க இனத்தை அழிக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாத திட்டம் சுதந்திர இலங்கையின் பின்னர் பேரினவாதக் கொள்கையாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அன்று வவுனியாவின் எல்லைப் பகுதிகளை சிங்களக் குடியேற்றத்தின் மூலம் கைப்பற்றிக் கொண்டு வந்த வேளையில்தான் ஒதியமலையை கைப்பற்ற ஓர் இனப்படுகொiயை சிங்கள இராணுவத்தினர் புரிந்தனர். ஒதியமலை மக்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் மறக்க முடியாத நிகழ்வு அது. வவுனியா எல்லைக் கிராமங்களை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுப்பியது ஒதியமலைப் படுகொலை. எவராலும் மறக்க முடியாத அந்தப் படுகொலையின் நினைவுநாள் இன்று.
ஓர் இனப்படுகொலை – மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அது ஏற்படுத்தும் வடு என்றைக்கும் ஆறாதது. அவ்வாறுதான் ஒதியமலைப்படுகொலையும் நிகழ்த்தப்பட்டது. அதன் வடு இன்றும் ஆறாமல் இருக்கிறது. இன்னமும் ஒதியமலையில் அந்தக் கதையை மறக்காதவர்களே வசிக்கின்றனர். அந்தப் படுகொலையின் பின்னர் பிறந்து வளர்ந்தவர்களும் அந்தப் படுகொலையின் கதையைக் கேட்டு ஆறாத வடுவோடு வாழ்கின்றனர்.
ஒதியமலைப்படுகொலை 02.12.1984ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 32 அப்பாவிப் பொதுமக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அந்த நிகழ்வை இக் கிராமத்தின் முதியவர் ஒருவர் விபரித்தார். அன்றைக்கு நேரம் 4மணி. இராணுவ உடையில் சிலர் வந்தார்கள். நாங்கள் இயக்கம் கூட்டம் ஒன்று வாருங்கள் என்று ஊரின் ஆண்களை அழைத்தார்கள். அவர்கள் கஜபாகுபுரத்தில் இருந்து வந்தவர்கள் என்று மக்கள் அறியவில்லை. சென்றவர்களை உடைகளை களைந்து கைகளைக் கட்டி வெட்டிக் கொன்றார்கள். ஒருவருடன் ஒருவரை கட்டிக் கொண்டார்கள். சிலரை இழுத்துக் கொண்டு சென்று ஊர் எல்லையில் வைத்து வெட்டிக்கொன்றுவிட்டுப் போனார்கள்.
அம்பிட்ட ஆரையும் அவங்கள் விடேல்ல என்று கூறுகிறார் அந்த முதியவர். எங்கட அப்பாவையும் அவர்கள்தான் கொன்றார்கள் என்று ஆறாத வடுவோடு பேசுகிறார் இன்னொருவர். 1984ஆம் ஆண்டு ஒதியமலை மக்கள் முதன் முதலில் தங்கள் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தார்கள். 32பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட பின்னர் கிராமத்தைவிட்டு எல்லாச் சொத்துக்களையும் கைவிட்டு மக்கள் ஓடினார்கள். 91இல் மீள்குடியேறிதோடு மீண்டும் 97இல் இடம்பெயர்ந்தார்கள் ஜெயசிக்குறு யுத்தத்தை புலிகள் தோற்கடித்து ஓயாத அலை நடவடிக்கை மூலம் அப்பகுதிகளை மீட்ட பின்னர் 2002இல் மீள்குடியேறிய மக்கள் மீண்டும் 2007இல் இடம்பெயர்ந்து தற்போது 2010இல் மீள்குடியேறியிருக்கிறார்கள்.
ஒதியமலைப்படுகொலை நடந்த அந்த இடத்திலேயே அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. ஜெயசிக்குறு யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியபோது படுகொலையில் செய்யப்பட்டவர்கள் நினைவாக 32பேரின் படங்களும் வைத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதை தற்போது இராணுவத்தினர் அழித்துவிட்டனர். கொல்லப்பட்ட மக்களுக்காக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி அவர்களை நினைகூர்ந்து வரும் ஒதியமலை மக்கள் அவர்களுக்காக ஒரு நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.
ஒதியமலைப் படுகொலையின் பின்னரும் வாழ்ந்த பலர் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னர் இந்தக் கிராமத்திற்குத் திரும்பவில்லை. தங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத சூழலில் அந்தக் கிராமத்தில் எப்படி வாழ்வது என்று அஞ்சுகிறார்கள். ஒதியமலை வரலாற்றின் இரத்தக் கதையை மறக்க முடியவில்லை என்கிறார்கள். அன்றும் இன்றும் அந்த எல்லைப் பகுதியில் ஒரே நோக்கமுடைய நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. தங்கள் கிராமத்தை அபகரிக்க எதுவும் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுவதை அந்தக் கிராமத்தை சுற்றி நடக்கும் நடவடிக்கைகளினால்தான். எல்லா மக்களும் எங்கள் கிராமத்திற்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்போடு குறிப்பிடுகிறார் ஆசித்தம்பி.
ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைத்து அவர்களின் நினைவுதினத்தை கொண்டாட வேண்டும் என்றும் இந்த மக்கள் ஆசையோடு உள்ளனர். வீட்டுக்கு வீடு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனால் மறக்க முடியாத வடுவாக அந்தத் தினம் நிலைத்துவிட்டது.
செம்பிக்குளம், கருவேப்பங்குளம், கிடா விழுத்தி பகுதிகளில் 150 ஏக்கர் காணிகள் எடுக்கப்பட்டுள்ளது. செம்பிக்குளம் முழுக்க சிங்கள மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தணல்கல் மற்றும் அலைகரை வரைக்கும் குடியேறி வந்துவிட்டார்கள். இனி என்ன நடக்கும்? எதுவரை அபகரிப்பார்கள்? எதையல்லாம் அபகரிப்பார்கள்? இந்த நிலத்தை எல்லாம் பாதுகாக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள்தான் தமது நிலத்திற்காகப் போராட வேண்டும். நிலத்தை பிரித்து மக்களை துரத்தி அவற்றை அபகரிக்கும் நடவடிக்கையை முறியடித்து நிலத்தை மீட்க வேண்டியது மக்களின் கடமை என்கிறார் இந்தக் கிராமத்தின் முதியவர் ஒருவர்.
விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள் மூன்று சமரை அன்று தொடங்கியபோது இலங்கை அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பகுதியையும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் (1999அன்று) வலிந்த திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்கவும் அச் சமரை தொடங்குவதாக அறிவித்தனர். நில அபகரிப்பு எத்தகைய சூழலை உருவாக்குகிறது என்பதற்கு ஒதியமலை வரலாறு தெளிவான பாடத்தை உணர்த்துகிறது. துரதிஷ்டவசமாக 1980களில் அந்தப் பகுதியில் நடந்ததுதான் இன்றும் நடக்கிறது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
மற்றுமொரு கரையோர கிராமமான ஒதியமலையிலிருந்து அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். 1984இல் ஒதியமலைப் படுகொலை நிகழ்த்தப்பட்டு அந்த மக்கள் தமது கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஒதியமலைக் கிராமத்தை அண்டியும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒதியமலை எல்லையை அண்டிய பகுதியில் சிலோன்தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் போன்ற சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டனர். தற்போது அடிப்படைவசதிகளை செய்து கொடுக்காமல் அந்த மக்கள் தாமாகவே வெளியேறும் ஒரு பனிப் போர் ஒன்று நடைபெறுகிறது.
இடம்பெயர முன்னர் 110 குடும்பங்கள் வசித்த கிராமத்தில் இன்று வெறும் 50 குடும்பங்களே வசித்து வருகிறார்கள். 1982இல் 150 மாணவர்களுடன் இயங்கிய பாடசாலையில் இன்றைக்கு வெறும் ஐந்து மாணவர்களே கல்வி பயில்கின்றனர். பழைமை மிகுந்த ஒதியமலைப் பாடசாலையில் கற்றலுக்குரிய வசதிகள் இல்லாமையினால் மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அதனைப்போலவே அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறுகின்றனர்.
பாடசாலை அதிபர் பாடசாலை மாறும் மாணவர்களுக்கு கடிதத்தை கொடுக்கிறார். கிராம சேவகரோ கிராமம் மாறும் மக்களுக்கு இடமாற்ற கடிததத்தை கொடுக்கிறார். இன்னும் வெகு காலத்தில் ஒதியமலை மக்களற்ற கிராமமாக மாறிவிடுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதற்கு அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனரா என கிராம மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதேவேளை ஒதியமலையிலிருந்து வெறும் ஒன்றரை கிலோமீற்றரில் உள்ள சிங்கள குடியேற்றக் கிராமங்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஒதியமலையில் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள் என்பதனாலா அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன? ஒதியமலையை விட்டு மக்கள் வெளியேற அங்கு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனாலா அங்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன? ஏற்கனவே நிகழ்ந்த நில அபகரிப்புக்களின் விளைவுகள் பாரிய பிரச்சினைகளை உருவாக்கி வரும் நிலையில் தொடர்ந்தும் மக்களின் நிலங்களை அபகரிக்கும் புதிய புதிய உபாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அன்றைக்கு தமிழ் மக்களை படுகொலை செய்து அவர்களை துரத்தி காணிகளை அபகரித்தவர்கள் இன்று இரத்தம் இன்றி, சத்தம் இன்றி நிலங்களை மெல்ல மெல்ல அபகரித்து வருகிறார்கள். ஒதியமலையைப் பொறுத்தவரையில் அங்கொரு நில அபகரிப்பு யுத்தம் நடக்கிறது. நிலத்தை அபகரிக்கும்போது அந்த நிலத்திற்குச் சொந்தமான பூர்வீக மக்கள் போராட வேண்டியது தவிர்க்க இயலாதது. அந்த மக்கள் போராடாது விட்டால் அவர்கள் அழிய வேண்டும். நில அபகரிப்பின் நோக்கம் இன அழிப்புத்தான். அதற்காகவே எந்த வகையிலேனும் நிலங்களை அபகரிக்க அரசு முனைகிறது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
1 comment
தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதை நாங்கள் எதிர்க்கப் போவதில்லை என்று சிங்கள பாராளுமன்றில் மாவை ஊளையிட்ட போது எத்தனை தமிழர்கள் இதற்க்கு எதிராக குரல் கொடுத்தார்கள், நாவற்குழியில் சிங்களவன் திமிராக குடியேறுவதற்க்கு மறைமுக ஆதரவு கொடுத்தவனின் மூஞ்சியில் தமிழர்கள் காறி உமிழ்ந்திருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்குமா , அதை விடுத்து இந்த கூட்டத்திற்க்கு பின்னால் 5, 10 க்கும் கையேந்தும் கூட்டம் இருக்கும்வரை சிங்கள கொலைகார கூட்டத்திற்க்கும் காக்கை வன்னியர்களுக்கும் கொண்டாட்டம்தான், ராஜன்