குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தமிழ் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிப்பவர்கள் அல்ல. கொள்கைக்காக வாக்களிப்பவர்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில். நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலை கூட்டணி பழமையான கட்சி. அதன் சின்னமான உதய சூரியன் முக்கியமான சின்னம். அது மக்கள் மத்தியில் பிரபலமானது.
கடந்த 2003 ஆம் ஆண்டு கூட்டமைப்பினர் அந்த சின்னத்தை பயன்படுத்த கூடாது என வீ.ஆனந்த சங்கரி வழக்கு தொடர்ந்து அந்த சின்னத்தை முடக்கினார். அதனாலையே வீட்டு சின்னத்தில் கூட்டமைப்பினர் போட்டியிட்டனர். உதயசூரியன் சின்னத்தை கூட்டமைப்பினர் பயன்படுத்த கூடாது என ஆனந்தசங்கரி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த போது , கூட்டமைப்பின் சார்பில் நான் நீதிமன்றில் வாதிட்டேன்.
இருந்த போதிலும் கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டமைப்பினர் உதய சூரியனில் செயற்பட தமிழர் விடுதலை கூட்டணி அனுமதிக்கவில்லை. கூட்டமைப்பு வீட்டு சின்னத்தில் போட்டியிட்டது. தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். மக்கள் உதய சூரியனை புறக்கணித்தார்கள்.
அக்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னமாக இருந்த உதயசூரியன் சின்னம் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. மக்கள் சின்னத்திற்காக வாக்களிப்பவர்கள் அல்ல. கொள்கைக்காக வாக்களிப்பவர்கள். யார் கொள்கையுடன் பயனிக்கின்றார்களோ அவர்களே வாக்களிப்பார்கள். என மேலும் தெரிவித்தார்.