Home இலங்கைகுடும்பத் தலைவரை வாளால் வெட்டிய குற்றம் – 8 பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது

குடும்பத் தலைவரை வாளால் வெட்டிய குற்றம் – 8 பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம், மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றத்துக்கு  8 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ்ப்பாணம் மேல்  இன்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

. காவல்துறையினரால்  டில்லு குறூப் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேரந்த 8 பேர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் மடம் வீதியில் 2012ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி விமலராஜன் விக்னராஜா என்பவரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய குற்றச்சாட்டில் 8 பேர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால்   கைது செய்யப்பட்டனர்.  அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 5 ஆண்டுகள் விசாரணைகளின் நிறைவில் கடந்த மே 16ஆம் திகதி தீர்ப்பளிக்ப்பட்டது.

சத்தியநாதன் அன்ரனிஸ் அல்லது டில்லு, அரவிந்தன் அலெக்ஸ் மற்றும் சிவேந்திரன் கலிஸ்ரன் ஆகியோருக்கு  3 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேவேளை விஜயரத்தினம் ஜனுசன், ஜெகதீஸ்வரன் டிரெக்ஸ்காந்தன், அருந்தவராஜ் செந்தூரன், பெனடிக்ட் வெஸ்லி ஏபிரகாம், தேவராசா ஹரிசன் ஆகியோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 8 குற்றவாளிகளும் 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் ஒரு ஆண்டு சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

நீதிவான் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து குற்றவாளிகள் 8 பேர் சார்பிலும் அவர்களது சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.

மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் ரட்ணசிங்கம் ஜனுசன் மற்றும் பெனடிக்ற் வெஸ்லி ஏபிரகாம் ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிணை விண்ணப்பம் செய்தார். அதனடிப்படையில் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவடையும்வரையில் அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த நிலையில் 8 பேரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று வழங்கியது.
மேன்முறையீட்டாளர்களால் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டம், நிகழ்வுத் தவறுகள் எண்பிக்கப்படவில்லை. எனவே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் மேல் நீதிமன்றம் உறுதி செய்கிறது. குற்றவாளிகளிடம் தண்டம் அறவீடு செய்வது அவசியமானது. எனினும் நீதிவான் மன்றால் கருத்திற்கொள்ளப்படவில்லை.

எனவே 8 சந்தேகநபர்களும் தலா ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணத்தை நீதிவான் மன்றில் செலுத்தவேண்டும்’ என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

அத்துடன் மேன்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கப்பட்டதால் மேல் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட இருவரினதும் தண்டனைக்காலம் இன்று ஆரம்பமாவதை நீதிவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் நீதிபதி கட்டளையிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More