முதலாவது வடக்கு மாகாண சபையின் 112வது அமர்வு
12/12/2017 அன்று காலை 11 மணிக்கு
மாகாண பேரவைச் சபா மண்டபத்தில்
முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும்
இலக்கு மற்றும் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட 2018ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம்
முதலமைச்சரின் அமைச்சறிக்கை
குருர் ப்ரம்மா…..
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவரவர்களே, கௌரவ உறுப்பினர்களே!
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாகாணமாகிய எமது பிரதேசம் அடிப்படை வசதிகள்;, கட்டுமானங்கள் என்பன பாதிக்கப்பட்டு காணப்படுகின்றன. அவற்றினையும் மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களினையும் சீர்செய்வதற்கு காலம் தேவைப்படும். இருப்பினும் வடமாகாணத்திற்குரிய தலாவருமானத்தினை அதிகரிக்கவும், மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை செப்பனிட்டு அடிப்படைத் தேவைகளைப் பெற்றிடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னரான இந் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பானது ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், மக்களின் சுபீட்சத்தை உறுதிப்படுத்தல், கல்வி, சுகாதார, சமூக, கலாச்சார, பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளில் அபிவிருத்தியை மேற்கொள்ளல், மக்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல், உயர்ந்த பொருளாதாரமொன்றினை உருவாக்கல், மனித வளங்களை சிறப்புற பயன்படுத்தல், நீண்டகால நிலைபேறான அபிவிருத்தியை நிறைவேற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரகொள்கை வழிகாட்டுதலுக்கமைய எமது மாகாண முன்னுரிமை தேவைப்பாடுகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகையில் வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறையில் வளர்ந்து வரும் தொழிற்துறையாக சுற்றுலா மற்றும் தொழிற்சந்தை, பௌதீக உட்கட்டுமானங்கள், சமூகப்பாதுகாப்பு, விவசாயமும் நிலைபேண் அபிவிருத்தியும், பிராந்திய பொருளாதார அபிவிருத்தி, சுற்றாடலும் அனர்த்த முகாமைத்துவமும், நல்லாட்சியும், பொறுப்புக்கூறலும் 2025ம் ஆண்டின் தொலை நோக்கங்களாக அமைந்துள்ளன.
அந்நோக்கங்களுக்கு அமையவே நிதியும் திட்டமிடலும் மற்றும் மாகாண நிர்வாகம் ஆகிய துறைகளைத் தவிர ஏனைய சகல திணைக்களங்களையும் உள்ளடக்கிய எமது அமைச்சிற்கு 2018 ஆம் ஆண்டிற்காக ரூபா 3,572 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2,639 மில்லியன் ரூபா மீண்டுவரும் செலவினத்திற்கும் 933 மில்லியன் ரூபா மூலதனச் செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலமைச்சரின் அமைச்சிற்கு மட்டும் 2018 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு.
விடயம் ஒதுக்கீடு (மில்லியனில்)
மீண்டெழும் செலவினம் 68.878
பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) 2.200
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை(PSDG) 130.000
மொத்தம் 201.078
1. சுற்றுலாத்துறை
பாரியளவில் வளர்ந்துவருகின்ற சேவைத்துறையான சுற்றுலாத்துறை பலவழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதனை யாவரும் அறிவர். அந்தவகையில் வடமாகாணத்திலும் சுற்றுலாத்துறையினை வளர்த்தெடுப்பதன் மூலம் எமது மக்களும் அதன் பொருளாதார ரீதியான பலாபலன்களைப் பெற்றுக் கொள்ள எம்மால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. எமது மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும் சமூகத்தில் பிறழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் எம்மால் தயாரிக்கப்பட்ட சுற்றுலா தந்திரோபாயத்; திட்டத்தின் அடிப்படையில் ஒரு ஒழுங்கான திட்டமிடல் செயற்பாட்டின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அந்தவகையில், வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு விருந்தோம்பல் துறையில் உரிய தொழில்தகைமையுள்ள பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்வரும் ஆண்டிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், ஏலவே இத்துறையில் சேவை வழங்குநர்களாக இணைந்திருப்பவர்களுக்கு திறன்விருத்தி பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களிடமிருந்து தரமான சேவைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க முடியும் என எண்ணுகின்றோம்.
வடமாகாண சுற்றுலா துறையில் இனங்காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக பின்வரும் நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
• 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை தொடர்பில் பல அபிவிருத்தித் திட்டங்கள் எமது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மீதான முதலீடுகள் பயனுறுதி தன்மைவாய்ந்த வகையில் எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு ஏதுவாக சுற்றுலாத்துறை சார்ந்த தந்திரோபாயத் திட்டம் துறைசார் வல்லுநர்களின் ஆலோசனை பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.
• கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்களின்;; பௌதீக தரைத்தோற்றத்திற்கேற்ப கட்டிடங்கள் மற்றும் திட்டவடிவமைப்பு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
• சுற்றுலாத்துறை தொடர்பான நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு கௌரவ ஆளுநர் அவர்களின் அனுமதிக்காக 2017ம் ஆண்டு நொவெம்பர் 10ந் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
• சுற்றுலா தொடர்பான வழிகாட்டல் நூல்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களை விபரிக்கும் நூல்கள் மும்மொழியிலும்; தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
• சுற்றுலாத்துறை தொடர்பான இணையத்தளமொன்று இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
• சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கான துண்டுப் பிரசுரங்களும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
• எமது அமைச்சினால் சுற்றுலாத்தினமானது செப்ரெம்பர் மாதம் 25 ஆந் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வடமாகாணத்தில் பல சுற்றுலாத்தலங்கள் காணப்பட்டாலும் அவற்றில் போதியளவு வசதிகள் காணப்படவில்லை என்ற குறையினை நீக்கும் முகமாக கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது தொடர்புடைய திணைக்களங்கள் உள்ளடங்கலாக பல நிறுவனங்களின் அனுசரணையை பெறவேண்டியிருப்பது கால தாமதத்தை ஏற்படுத்துகின்றது என சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். திணைக்களங்களும் மற்றும் நிறுவனங்களும் காலதாமதமின்றி தமது கடமையைச் செய்ய முன்வந்தால் எமது மாகாண அபிவிருத்தியை நாம் விரைவாக நடைமுறைப்படுத்தலாம். எமது கோரிக்கைகள் பல நிறுவனங்களில் கவனிப்பார் அற்றுக் கிடந்து அடி மேல் அடி அடித்தே அம்மியை நகர்த்தி வருகின்றோம்.
இவ்வருடம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையின் கீழ் ரூபா. 30.0 மில்லியன் ஒதுக்கீட்டில் 5 மாவட்டங்களிலும் 10 வேலைத்திட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக மத்திய அரசாங்கத்தினாலும் எமது அமைச்சினூடாக சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா. 7.896 மில்லியன் பெறுமதியான 3 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
2018 ஆம் ஆண்டிற்கு ரூபா 60.00 மில்லியன் நிதியானது சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியினை அமைச்சின் ஆலோசனைக் குழுவினூடாக அடையாளம் காணப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்வரும் திட்டங்கள் மீது மேற்கொள்ளவுள்ளோம்;. –
• சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகுபடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
• வரலாறு சார்ந்த சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல்.
• சமயம் சார்ந்த சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல்.
• மருத்துவம் சார்ந்த சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல்.
• சுற்றுலாத்துறைக்கான தகவல் வழங்கும் மையங்களை ஸ்தாபித்தல்.
• அடையாளங்காணப்பட்ட பூங்காக்களை அபிவிருத்தி செய்தல்.
• ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள்ஃசௌகரியங்களை உள்ளடக்கிய மையங்களை தனியார் துறையின் பங்களிப்புடன் உருவாக்குதல். இதற்கு ஐகுஊ என்ற சர்வதேச நிதிய கூட்டுத்தாபனம் என்ற நிறுவனம் எமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
• சுற்றுலாத்துறைக்கான தகவல்களை வெளியிடுதல் மற்றும் அத்துறை சார்ந்த ஊழியர்களுக்கான இயலுமை விருத்தி பயிற்சிகளை வழங்கல்.
• சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ஒளிப்பதிவேற்றப்பட்ட காட்சிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
• ஏனைய மாகாணங்களில் அபிவிருத்தி செய்யப்பட்ட சுற்றுலா மையங்களை எமது அலுவலர்கள் பார்வையிட வசதியளித்துக் கொடுத்தல்.
சுற்றுலாத்துறையில் காணப்படுகின்ற வாய்ப்புக்களை தக்கவகையில் பயன்படுத்துவதன் மூலம் எமது பிரதேசத்திற்குரிய வளங்களை முன்னிலைப்படுத்தி சமுதாய அடிப்படையிலான சுற்றுலாத்துறையினை வளர்த்தெடுப்பதன் மூலம் கிராமிய மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்பினை பெறுவதன் ஊடாக வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியும். இவ்வகையில் நிலைபேறான கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையும் பங்களிப்பினை வழங்கமுடியும் எனத்திடமாக நம்புகின்றோம்.
2. உள்ளூராட்சித் திணைக்களம்
எமது வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களமானது 01 மாநகர சபை, 05 நகரசபைகள் மற்றும் 28 பிரதேசசபைகள் உள்ளடங்கலாக 34 உள்ளூராட்சி அதிகாரசபைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழுள்ள 05 பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களூடாக உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களினால் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள், பொதுப்பயன்பாட்டு சேவைகள் மற்றும் மக்களோடு தொடர்புபட்ட அத்தியாவசியசேவைகள் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சனசமூக நிலையங்களின் மூலம் மக்கள் பங்களிப்பு ஊடாக பலமான ஜனநாயக செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்; உள்ளுராட்சி மன்றங்கள் பிரதேச ரீதியாக நூலக செயற்பாடுகளை நிறுவியும் ஊக்கப்படுத்தியும் சமூகத்தின் அறிவை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்து வருகின்றன.
உள்ளூராட்சித் திணைக்களத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு
விடயம் ஒதுக்கீடு(மில்)
மீண்டெழும் செலவினம் 1,847.08
பிரமாணஅடிப்படையிலானகொடை(CBG) 2.50
மாகாணகுறித்தொதுக்கப்பட்டஅபிவிருத்திகொடை(Pளுனுபு) 270.00
மொத்தம் 2,119.58
உத்தேசிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் – 2018 (PSDG) திட்டங்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு
(மில்)
1. வீதிகள் 25 165.0
2. குடிநீர் 14 20.0
3. உள்ளூராட்சிசேவைகள் 19 20.0
4. திண்மக்கழிவு 12 25.0
5. கிராமிய மின் விநியோகம் 05 40.0
மொத்தம் 75 270.0
உள்ளூராட்சித் திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் வருமாறு:
நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் திட்டங்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு
(மில்)
PSDG
1. வீதிகள் 18 (16.58 Km) 157.0
2. குடிநீர் 05 30.0
3. உள்ளூராட்சி சேவைகள் 12 19.0
மொத்தம் 206.0
மத்திய அமைச்சு
பிரதேசசபைகளை வலுவூட்டல் 100.20
திண்மக்கழிவு முகாமைத்துவம் 15.00
Kawasima compost yard 170.00
1000 Km கிராமிய வீதிகள் 34 வீதித் திட்டங்கள்(34KM) 204.21
மொத்தம் 399.41
வருமான மேம்படுத்துகை
உள்ளூராட்சி சபைகளுக்கான வருமான மூலங்களை மேம்படுத்தும் முயற்சியாக மாகாண வருமானவரிகள் திணைக்களத்தின் மூலம் 2017 ஒக்டோபர் மாதம் வரை முத்திரைத் தீர்வை ரூபா 540.0 மில்லியனும், நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 140.0 மில்லியனுமாக ரூபா 680 மில்லியன் திரட்டப்பட்டுள்ளன. இதில் முத்திரைத்தீர்வை வருமானம் 2018 இல் உள்ளூராட்சி சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
2018 ஆம் ஆண்டில் முத்திரைத்தீர்வை வருமானம் 480.0 மில்லியன் ரூபாவும், நீதிமன்றத் தண்டப்பணமாக 140.0 மில்லியன் ரூபாவுமாக ரூபா 620 மில்லியன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முத்திரைத்தீர்வை நிலுவை
முத்திரை தீர்வை நிலுவை வருமானமாக கிடைக்கவேண்டியிருந்த ரூபா 1202.0 மில்லியன் தொகை இவ்வாண்டில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையாக கிடைக்கப் பெற்றது. இந்நிதியினை பயன்படுத்தி வீதி புனரமைப்புக்கள், திண்மக்கழிவு முகாமைத்;துவதற்கான வாகனங்கள் என்பன குறித்த உள்ளூராட்சி அதிகார சபைகளின் அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 459 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 223 முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. மிகுதி இவ்வருட முடிவுக்கிடையில் நிறைவு செய்யப்படுவன.
3. வீதி அபிவிருத்தித் திணைக்களம்
சகல பங்குதாரர்களினதும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் தரமான மாகாண வீதி வசதிகளை வழங்குவதனை நோக்காகக் கொண்டு வடக்கு மக்களினதும், பொருட்களினதும் பிரதான போக்குவரத்து முறையாக வீதிப் போக்குவரத்து காணப்படுகின்றது. இது 92மூ சதவிகிதமான பயணிகளினதும், பொதிகளினதும் நகர்வாகும் என்பதுடன் வடமாகாண சமூக பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்ற மக்களினதும் பொருட்களினதும் இலகுவான நகர்வுக்கு வீதி அபிவருத்தி இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு
விடயம் ஒதுக்கீடு(மில்)
மீண்டெழும் செலவினம் 493.897
பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) 1.500
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திகொடை(Pளுனுபு) 460.000
NRCP (Northern Road Connectivity Project) 17.250
மொத்தம் 972.647
இவ்வாண்டில் வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 46 வேலைத்திட்டங்கள் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையின் கீழ் ரூபா 208 மில்லியன் பெறுமதியில் 27.24 முஅ நீளமான வீதிகளை உள்ளடக்கி பூரணமாக முடிவடைந்துள்ளன.
2018ம் ஆண்டின்; மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திகொடை எமது அமைச்சின் ஆலோசனைக் குழுவினூடாக அடையாளம் காணப்பட்ட வீதிகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் மீது நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4. கிராம அபிவிருத்தித் திணைக்களம்
எமது நாட்டை பொறுத்தவரையில் கிராம அபிவிருத்தியானது ஒரு நீண்டகால வரலாற்றை கொண்டதாகும். நாட்டின் கிராம அபிவிருத்தியானது, கிராம மக்களின் தேவைகளை ஆராய்ந்து சமூகமயப்படுத்தலின் ஊடாக நிலைத்து நிற்கக்கூடிய கிராம அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகும்.
தேசிய அபிவிருத்தி கொள்கையின் வழி
யில் கிராம மக்களின் முன்னேற்றமான வாழ்க்கை தரத்தை அடையும் பொருட்டு வழமையான கிராம மக்களின் சமூக கலாச்சார, பொருளாதார அபிவிருத்திக்காக அவர்களை வழிப்படுத்தி வலுவூட்டுவதுடன் தேசிய பொருளாதார விருத்திக்கு செயல்திறனான பங்களிப்பை வழங்கக்கூடியதான கிராம அபிவிருத்தியை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இத்திணைக்களம் உருவாக்கப்பட்டது.
கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு
விடயம் ஒதுக்கீடு(மில்)
மீண்டெழும் செலவினம் 96.161
பிரமாண அடிப்படையிலான கொடை (CBG) 1.000
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திகொடை (PSDG) 40.000
மொத்தம் 137.161
2017ம் ஆண்டில்ரூபா 30.0 மில்லியன் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையில் 5 மாவட்டங்களிலும் கிராம ஃ மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பொது நோக்கு மண்டபங்களினை புனரமைப்பு செய்தல், அதன் உட்கட்டமைப்பு தொடர்பான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், உள்ளுர் மூலப்பொருட்களிலான உற்பத்தி பொருட்களின் சந்தை நடவடிக்கைகளினை மேம்படுதல், இயங்குநிலை மந்தமாகவுள்ள வருமான அதிகரிப்பு திட்டங்களினை மீள் ஒழுங்குபடுத்தல், தளபாட மற்றும் உபகரணத்தொகுதி வழங்கல், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமுகமாக சுயதொழில் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவியினை வழங்கல் என்பவற்றின் மீது முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விசேட நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களுக்காக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய, கடற்தொழில், சுயதொழில் உபகரணங்களின் வழங்குகைக்காக ரூபா. 15.0 மில்லியன் பின்தங்கிய கிராமத்திட்டத்தின் கீழ் செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திணைக்களம் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
1. கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தகவல்களுக்கான Web-Based System – ‘Rural Societies Information Management System’ 2017இல் UNDPநிதிவழங்கல் மூலம்; மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
2. கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் கணக்காய்விற்காக’மூன்றாண்டு கணக்காய்வு திட்டம் – (2015-2017)’; வடக்கு மாகாணம் முழுவதும் இடம்பெற்று வருகின்றது.
3. கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் அங்கத்தவர்களுக்கான இயலளவு விருத்தி பயிற்சித்திட்டங்களும் மற்றும் Web-Based System – ‘Rural Societies Information Management System’ 2017தொடர்பாகவிழிப்புணர்வூட்டல் பயிற்சிநெறியும் நடாத்தப்பட்டது.
4. மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சம்மேளனம் நிறுவப்பட்டுள்ளது.
5. மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களை நடாத்துதல். இது மூன்றாம் நிலை கற்கைகள் நிறுவகத்தில்பதிவு செய்யப்பட்டு மனைபொருளியல் டிப்ளோமா பயிற்சிநெறி நடாத்தப்பட்டுவருகின்றது.
6. பிரதேச மற்றும் மாகாண ரீதியில் கண்காட்சிகள்; 2017 இல் நடாத்தப்பட்டன.
5. போக்குவரத்து
1. மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்
பாதுகாப்புடைய உறுதியான வீதிப் போக்குவரத்துச் சேவையை பயணிகளுக்கும், பொருட்களுக்கும் வழங்குவதும் போக்குவரத்;தில் ஈடுபடும் வாகனங்களின் சரியான பாவனைகளை உறுதி செய்தலையும் நோக்காக் கொண்டு இத்திணைக்களம் உருவாக்கப்பட்டு தற்பொழுது முதலமைச்சர் அமைச்சின் கீழ் செயற்பட்டுவருகின்றது.
பிரதான செயற்பாடுகள்.
a போக்குவரத்து வீதிசட்டங்கள், நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் மற்றும் வீதி ஒழுங்கு விதி சம்பந்தப்பட்ட பொது அறிவித்தலை வழங்கல்.
b. போக்குவரத்து வாகனங்களுக்காக அச்சிடப்பட்ட வருமான உரிம இதழ்களை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு விநியோகித்தல்.
c. பொருத்தமானவாகன திருத்துமிடங்களை தெரிவு செய்து தகுதிச் சான்றிதழ்களை பேரூந்துகளுக்கும் லொறிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
d. போக்குவரத்து வாகனங்களுக்கு உத்தரவாதமளிப்பதும் பதிவு செய்தலும்.
f. வாகனங்கள் வீதிகளில் செல்வதற்கான நிலைப்பாட்டிற்கு உத்தரவாதமளித்தல். உபயோகிக்க முடியாத வாகனங்களினதும் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளல்.
g. வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தினை விநியோகிப்பதன் மூலம் வருமானம் பெறுதல்.
மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு
விடயம் ஒதுக்கீடு(மில்)
மீண்டெழும் செலவினம் 43.152
பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) 2.500
மொத்தம் 45.652
2017 ஆம் ஆண்டில் ருNனுP நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் இலத்திரனியல் மூலமான வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்றிட்டம் (Electronic Revenue Licence System ERL) ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 4.0 மில்லியன் நிதியானது மென்பொருள் பயிற்சிநெறி, கணனி தொகுதிகளின் வழங்குகை, நிர்வாக செலவுகள் என்பவற்றின் மீது செலவிடப்பட்டுள்ளது.
2. போக்குவரத்துத்துறை
போக்குவரத்து துறையானது 2017 ஆம் ஆண்டின் அமைச்சு நோக்கெல்லை மாற்றத்தின் விளைவாக முதலமைச்சர் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ரூபா 24.0 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ், பேருந்துதரிப்பிடம் மற்றும் பேருந்து நிறுத்துமிடம்; நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டில் இத்துறைக்கு 40.0 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்மொழியப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுமானதிட்டங்கள் மற்றும் போக்குவரத்து விதிகள் சம்பந்தமான பயிற்சிதிட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு;ள்ளது.
3. போக்குவரத்து அதிகாரசபை
2016ம் ஆண்டின் 01ம் இலக்க வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நியதிச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் அமைச்சின் நோக்கெல்லை மாற்றத்தின் விளைவாக எமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அவ் அதிகாரசபை இயக்கத்துக்குத் தேவையான ஆளணியிலும் பார்க்க குறைந்த ஆளணியினருக்கே முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது. 63 ஆளணியினருக்கான அனுமதியின் பிரகாரம் ஆட்சேர்ப்புத்திட்டம் தயாரிக்கப்பட்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ் அதிகார சபையினால் பின்வரும் செயற்;றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
1. ஐந்து மாவட்டத்திலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட நிரந்தர, தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் உள்வாங்கப்பட்டு வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தற்காலிக அனுமதிப்பத்திரம்; வழங்கப்பட்டது.
2. வடமாகாண பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக வழங்கப்படுவதற்கான ஒழுங்கு விதி தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
3. போக்குவரத்து அதிகாரசபையின் நிரந்தர பயணிகள் சேவை வழியனுமதிப்பத்திர புத்தகம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
4. வடமாகாணத்திற்குள் இ.போ.ச.க்கும் தனியாருக்கும் இடையில் உள்ளுர் சேவைக்கும், மாவட்டத்திற்கிடையேயான சேவைக்கும் இணைந்த நேரஅட்டவணை தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் இரு தரப்பினராலும் நேரஅட்டவணை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல்களை எதிர்பார்க்கப்படுகின்றது.
5. முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்கு விதி தயாரிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.
6. தனியாருக்கும், இ.போ.சபைக்கும் இடையில் பிரயாணக்கட்டணத்தொகை ஒன்றாக்கப்பட்டு ஒவ்வொரு வழிக்குமான பிரயாணக்கட்டணம் ஒரேமாதிரியான தொகை பிரயாணிகளிடம் அறவிடுவதற்கு ஏற்ற வகையில் பிரயாணக்கட்டணம் ஒழுங்குபடுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.
மேலும் வடமாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்பு தனியார் போக்குவரத்து வழி அனுமதிப்பத்திரம் வழங்குகை மற்றும் தொடர்புடைய ஏனைய வருமானங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினூடாக மத்திய அரசிற்கே சென்றடைந்தது. எமது முயற்சியின் பயனாக இத்தொகையில் ரூபா.19.5 மில்லியன் கிடைக்கப்பெற்றுள்ளது. 2018 இல் இதனை பயன்படுத்தி அதிகாரசபைக்கான அலுவலகத்தை அமைக்க தீர்மானித்துள்ளோம்.
6. காணி ஆணையாளர் திணைக்களம்
அரசின் காணிக் கொள்கைகளுக்கும் நியமங்களுக்கும் அமைவாக சீரான முறையில் காணி பகிர்ந்தளித்தல் மற்றும் அபிவிருத்தியினூடாக வடமாகாணத்தில் நிலையான சூழலைப் பேணும் பொருட்டு உருவாக்கப்பட்ட மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தினால் அரச காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளித்தல், பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணிகளை நிர்வகித்தல், பொருளாதார செயற்பாடுகளுக்கு காணிகளை குத்தகைக்கு வழங்குதல் போன்ற கடமைகளை பிரதேச செயலாளர் ஊடாக பிரதேச செயலகங்களில் காணி உத்தியோகத்தர்கள் மற்றும் காணி வெளிக்களப் போதனாசிரியர்களை நியமித்து நிறைவேற்றி வருகின்றது. அத்துடன் காணிப்பயன்பாட்டுத்திட்டமிடல் குழுவினது சிபார்சின் அடிப்படையில் கருத்திட்டங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு சிபார்சுகளை வழங்குதல், அனுமதித்தல் போன்ற அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பங்களிப்பினை வழங்குகின்றது.
காணி ஆணையாளர் திணைக்களத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு.
விடயம் ஒதுக்கீடு(மில்)
மீண்டெழும் செலவினம் 89.665
பிரமாணஅடிப்படையிலானகொடை(CBG) 0.750
மாகாணகுறித்தொதுக்கப்பட்டஅபிவிருத்திகொடை(PSDG) 5.000
மொத்தம் 95.415
உத்தேசிக்கப்பட்டசெயற்றிட்டங்கள் – 2018 (PSDG) ஒதுக்கீடு
(மில்)
1. கட்டடங்கள் புனரமைப்பு 4.80
2. மரம் நடுகை 0.20
மொத்தம் 5.00
2017 ஆம் ஆண்டில் சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நீண்டகால வாழ்வுடைய மரக்கன்றுகள் விநியோகித்தல் மற்றும் நாட்டுதல்; மேலும் 8,135 காணி அனுமதிப் பத்திரங்கள், 884 அளிப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இலத்திரனியல் – தகவல் முகாமைத்துவ முறைமையினூடாக (e-slims) 14775 காணி தொடர்பான தகவல்கள்; 2017ம் ஆண்டில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 89253 காணி தொடர்பான தகவல்களை நேரடியாகவே கணனியில் பார்வையிட்டு தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7. வீடமைப்பு
முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற வீடமைப்பும் நிர்மாணமும் என்ற பிரிவின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் அரசாங்கத்தின் ஏனைய வீட்டுத் திட்டங்களுள் உள்ளடக்கப்படாத மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ் ஆண்டில் 33.25 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொன்றும் 850,000.00 ரூபா பெறுமதியான 39 வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. இவை அனைத்தும் இவ் ஆண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும். இவற்றிற்கு மேலதிகமாக 2 மில்லியன் ரூபா செலவில் 6 வீடுகள் அமைப்பதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 350,000.00 ரூபா இவ்வருடத்திலும் மீதித் தொகை தலா 500,000.00 ரூபா 2018ம் ஆண்டிலும் வழங்கப்படும்.
ஒரு வீட்டிற்கு மொத்தமாக மதிப்பிடப்பட்ட தொகை ரூபா 905,000இல் வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. எனினும் பயனாளிகள் தமது பங்களிப்பினை சேர்த்து வீட்டினை கட்டிமுடிப்பதில் அவர்களது வருமானம் போதாமல் உள்ள வறுமைநிலையானது பல இடர்பாடுகளை ஏற்படுத்தியதன் விளைவாகவும் பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவும் வீட்டினை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுசெய்வதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அடுத்த ஆண்டில் தற்போது கட்டப்பட்டுவருகின்ற வீட்டிற்கான மதிப்பீட்டினை மீள் மதிப்பீடு செய்து தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
தற்போது வீடுகள் கட்டுவதற்கு மட்டுமே உதவி வழங்கப்படுகின்றது. அவர்களுக்கான மலசலகூடம் அமைப்பதற்கான உதவி வழங்கப்படவில்லை. இந்த வருடம் அவ்வாறு மலசலகூட வசதி இல்லாதவர்களுக்கு எனது பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் உதவி வழங்கப்பட்டது. அடுத்துவரும் ஆண்டில் மலசலகூடம் அமைப்பதற்கும் வீடுகட்டுவதற்கான நிதியுதவியுடன் சேர்த்து உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
வீடுகள் இல்லாது வாழ்ந்துவரும் பலர் எம்மிடம் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதிஒதுக்கீடு போதாமல் உள்ள நிலையே காணப்படுகின்றது.
இதில் கட்டாயம் வீட்டுத் தேவையுடைய இரண்டு அங்கத்தவர்களை மட்டும் கொண்ட குடும்பங்கள் மற்றும் ஒரு அங்கத்தவரை மட்டும் கொண்ட குடும்பங்களும் உள்ளன. இவர்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் 2018ம் ஆண்டில் மதிப்பீட்டுத் தொகைகுறைந்த சிறிய வீடுகளை அமைப்பதற்கு உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேவைகள் அதிகரித்து காணப்பட்டபோதும் வீடமைப்புத் திட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டுக்கு 30 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8. சட்டமும் ஒழுங்கும்
வடமாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு சிவில் பாதுகாப்பு குழுவினை அமைப்பதற்காக எம்மால் தயாரிக்கப்பட்ட கருத்தாவணம் (ஊழnஉநிவ ழேவந) இனை அடிப்படையாகக் கொண்டு இவ்வருடம் 04 குழுக்கூட்டங்கள் எமது அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டு சட்டம் மற்றும் சமாதானம் என்பனவற்றை செயற்படுத்துவதற்கான பொதுவான விடயங்களும், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சட்ட ரீதியற்ற மண் அகழ்வு, போதைப்பொருள் பாவனை, பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், களவு கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் ஆராய்ந்து சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான முன்னேற்றப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பின்வரும் விடயங்கள் மீது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
• அண்மைக்காலத்தில் அதிகரித்துவரும் கட்டுக்கடங்காத இளைஞர் கும்பல்களின் வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காரணமானவர்களை கண்டறிதல் மற்றும் மக்கள் மனதில் குடிகொண்டுள்ள அச்சத்தை நீக்குவதற்காக பொலிசார் எடுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்தமை.
• குற்றமிழைத்தவர்களை கைது செய்வதில் ஏற்பட்டுள்ள நீண்டகால தாமதங்கள் தொடர்பாக ஆராய்ந்தமை.
• பொலிசாரினால் ஆட்சேபணை தெரிவிக்காத விடயங்களில் நீதிமன்ற விடுவிப்புகளுக்கு பொலிசாரினால் கையூட்டு பெறப்படுதல் தொடர்பான வதந்திகள்.
• பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகின்ற ஒத்துழைப்புகளும் பொலிசாருக்குக் கொடுக்கும் தகவல்களை வெளிப்படுத்தல் தொடர்பாகப் பாதுகாப்பும்.
• தேவையற்ற விதத்தில் மற்றும்சந்தேகத்திற்கு இடமாக நடமாடுபவர்களை கைது செய்கை.
• மது பாவனைக்கு உட்பட்டு மோட்டார் வாகனம் செலுத்தும் இளைஞர்களை கைது செய்தல் மற்றும் தலைக்கவசம், வீதி விதிகளை அனுசரிக்காதது தொடர்பான சம்பவங்கள்.
• ‘அக்கரை’ கடற்கரைப் பிரதேசத்தில் எதிர்பாளரினால்; சமுதாய கலாச்சார சீர்கேடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் போஸ்ட் (Police Post) நிறுவுகை.
• பெருமளவில் கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் போதைப் பொருட்களில் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அழிப்பு தொடர்பான நடவடிக்கைகள்
• விழிப்புக் குழுக்களை நவீன தொழில்நுட்ப வசதியுடன் அமர்த்தக் கூடிய விதத்தில் பொலிசாரிடம் உள்ள நிகழ்ச்சித்திட்டம்.
• சட்ட ரீதியற்ற கால்நடைகள்;, மண் அகழ்வு மற்றும் மரக் கடத்தல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள்
• இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் பொலிசாரின் தயார்படுத்தல் சம்பந்தமாக
மேலும், 2018 ஆம் ஆண்டில் எமது பகுதியில் தமிழ்மொழி மூலமான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்;தி பிரதி பொலிஸ்மா அதிபருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் நிமித்தம் எமது அமைச்சினால்; கோரப்பட்ட விண்ணப்பங்களின் பிரகாரம் இதுவரை கிடைக்கப்பெற்ற 166 விண்ணப்பங்கள் யாழ்மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதுடன் இத்துறைக்கான இளைஞர் யுவதிகளுக்கான விருப்பத் தேர்வு குறைவாக இருப்பது வெளிப்படுகிறது. எனினும் தொடர்ந்து தகைமையுடைய விண்ணப்பதாரிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மனிதவள மேம்படுத்துகை
எமது அமைச்சினதும் அதன் கீழ் வரும் திணைக்களங்களினதும் மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 896 ஆகும். எனினும் தற்சமயம் கடமையாற்றிக்கொண்டிருக்கும் உண்மையான ஆளணியினர் 746 ஆக உள்ளது. எனவே 150 அலுவலர்களின் தேவை வெற்றிடமாக காணப்படுகின்றது. இவர்கள் ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நிறைவேற்று அலுவலர் வகுதியை சேர்ந்தவர்களாக இருப்பினும் திணைக்களங்களினது வினைத்திறனான செயற்பாட்டிற்கு இவ் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டியது அவசியம் அலுவர்களிற்கான இயலளவு விருத்தி பயிற்சித்திட்டங்களும் தொழிற்துறையுடன் இணைந்தாக வழங்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டில் எமது அமைச்சின் நோக்கெல்லைக்குள் வரும் பின்வரும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நியமன வகை முதலமைச்சரின் அமைச்சு உள்ளூராட்சி; காணி நிர்வாகம் வீதி அபிவிருத்தி கிராம அபிவிருத்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர் 2 1 9 2 8
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் – – – – 4
காணி வெளிக்கள போதனா ஆசிரியர் – – 5 – –
காரியலாய சேவகர் – 1 – 1 1
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் – 7 – – –
வருமான வரிப்பரிசோதகர் – 5 – – –
நூலகர் – 2 – – –
மொத்தம் 2 16 14 3 13
மேற்படி 48 நியமனங்களில் எமது அமைச்சின் எல்லையின் கீழ் 26 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகுதி 22 நியமனங்கள் மாகாணப் பொது நிர்வாக நியமன அதிகாரத்தின் கீழ் வழங்கப்பட்டது.
9. முதலீட்டு முன்னெடுப்புகள் (Invertment initiatives)
போருக்கு பின்னரான வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை இலக்குவைக்கும் நோக்கில் முதலீட்டாளர்களால் சமர்ப்பிக்கப்படும் கருத்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை எமக்கு உண்டு. எனினும் இத்திட்டங்களினால் எமது பொருளாதார அபிவிருத்தியை அடையக் கூடிய சாத்தியங்கள் தொடர்பாகவும் வேலை வாய்புக்களை உருவாக்கி எம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் காணப்படுவதுடன் இத் திட்டங்களினால் எமது வளங்கள் சுரண்டப்படுவதிலிருந்தும் சுற்றுச் சூழல் மேலும் பாதிக்கப்படுவதில் இருந்தும் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த அணுகுமுறையினுடாக எம்மிடம் சமர்ப்பிக்கப்படும் முதலீட்டாளர்களின் திட்டமுன் மொழிவுகள் அத் துறைசார்ந்த விற்பன்னர்கள் மூலம் ஆராய்ந்து அவர்களின் சிபார்சுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நிறைவுரை
வட மாகாணம் நீண்ட கால போர் அனர்த்தங்களிலிருந்து இயல்பு நிலை மீளல், பொருளாதார மீளுகை, புனர்நிர்மாணம், மீள் குடியேற்றம் எனும் வகையில் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார தன்னிறைவு, வளர்ச்சி எனும் போக்கை அடைவதற்கு துறை சார் வளர்ச்சி இலக்குகளை அடையாளம் காணவேண்டிய தேவைப்பாடுகள் அவசியமாகின்றது. இலங்கையின் அதிகூடிய மாவட்டங்களையும் இயற்கை வளங்களையும் கொண்ட வட மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய வங்கி அறிக்கையின் பிரகாரம் 2013 இல் 3.4 சதவீதம், 2014 இல் 3.3 சதவீதம், 2015 இல் 3.5 சதவீதம், 2016 இல் 4.2 வீதமாக பங்களிப்பு காணப்பட்டது. இந்நிலையில் மாற்றத்தினை கொண்டு வருவதற்கும் துறைசார் பொருளாதார பங்களிப்பு இலக்கை உயர்த்துவதற்குமான வகையில் இவ்வரவுசெலவுத்திட்டம் முன்னுரிமை அளித்தல் வேண்டும்.
அடையளப்படுத்தப்பட்டுள்ள தேசிய புள்ளி விபரங்களின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது வறுமைத்தாக்கம் அதிகமானதாகவும் அதே போல் கிளிநொச்சி மாவட்டம் வறுமையின் தாக்கம் அதிகமானதாகவும் காட்டப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளித்து பிராந்திய வளர்ச்சியினை சமப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டுகின்றது. இவ்வகையில் எமது அமைச்சின் நோக்கெல்லையில் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்கும் துறைகளாகிய கிராம அபிவிருத்தி, உள்ளூராட்சி, வீதி அபிவிருத்தி, சுற்றுலாத் துறை, வீடமைப்பு, போக்குவரத்து என்பவற்றின் ஊடாக சமனான பிரதேச அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் இவ் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வேலைத்திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தேவைகள் அளவற்றவை. கிடைக்கின்ற வளங்களின் உச்சப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எமது அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பயனுறுதித்தன்மை வாய்ந்த நடைமுறைப்படுத்தலுக்கு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதல் இனி வரும் வருடத்திலும் எதிர் பார்க்கப்படுகிறது.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்