அடுத்த தடவை நல்ல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் – சுகிர்தன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
எமக்கு அடுத்தமுறை நல்ல முதலமைச்சர் ஒருவர் கிடைக்கவேண்டும்.அதேவேளை தற்போதைய முதல்வர் நாடாளுமன்றுக்கு சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் இதுதான் தனது விருப்பம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்றையதினம் இடம்பெற்றது.இந்த அமர்வில் முதலமைச்சரின் அமைச்சு மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இம்முறை முன்மொழிந்துள்ள வரவு செலவுத் திட்டத்தை அவதானிக்கும் போது நாம் மாகாண சபையின் ஆரம்ப காலப்பகுதியில் இருக்கின்றோமா என்ற எண்ணம் தோன்றியது.ஏனெனில் இவ்வாறான வரவு செலவுத் திட்டத்தை எமது முதலாம் ஆண்டிலேயே சமர்ப்பித்திருக்க வேண்டும்.
நாம் எமது காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றோம்.எமக்கு அடுத்த முறை வேறு ஒரு நல்ல முதலமைச்சர் கிடைக்க வேண்டும்.அதே நேரத்தில் எமது தற்போதைய முதல்வர் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டு எமது மக்களின் பிரச்சனைக்காக இலங்கை நாடாளுமன்றில் அவர் குரல் கொடுக்க வேண்டும் இதுவே எனது விருப்பமாகும் என்றார்.
மேலும் முதல்வர் சுற்றுலாத்துறை விடயத்தில் எமது கலை,கலாசாரம் போன்றவற்றை காப்பற்ற போகின்றோமா அல்லது பணம் உழைப்பதற்காக எமது பாரபரியத்தை இழக்கப் போகின்றோமா என்று சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்வாறான நிலையிலேயே வடமராட்சி அக்கறை கடற்கரையில் பல சமூக சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர்.அத்துடன் அங்கு பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.என்றார்.
முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவயோகன் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் போருக்கு பின்னர் கசிப்பு, கள்ளச்சாராயம் போன்ற சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.இது தொடர்பாக யாரவது பொலிசாருக்கு தகவல் கொடுத்தால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு முறைப்பாடு கொடுப்பவர்களின் விபரங்கள் உடனடியாக செல்கின்றது.இது தொடர்பில் வடக்கு மாகாண சட்ட ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் வடக்கு மாகாண முதலவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.